மேலும் அறிய
மதுரை : தாய்மாமாவுடன் திருமண நிச்சயம் : படிக்கும் கனவு பறிக்கப்பட்ட சிறுமி தற்கொலை..!
பிளஸ்-2 மாணவிக்கு நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட நிலையில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மாணவி தற்கொலை
கொரோனா காலத்தில் அதிக செலவில்லாமல் திருமணம் பண்ணலாம் என்று நினைத்து, 18 வயது குறைந்த சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைக்க முயன்ற பெற்றோர் மற்றும் மாப்பிள்ளை, அவரின் தாய் என பல இடங்களிலும் நபர்கள் ஆங்காங்கே கைது செய்யப்பட்டு வருகின்றனர். ஆனால் சிலர் தந்திரமாக வெளியில் தெரியாத அளவில் திருமணத்தை முடித்துக் கொள்கின்றனர். இந்நிலையில் ஊரடங்கை பயன்படுத்தி, தாய்மாமனுடன் பிளஸ்-2 மாணவிக்கு நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட நிலையில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை பாண்டிக்கோவில் பகுதியை அடுத்த ஜெ.ஜெ.நகரைச் சேர்ந்தவர்கள் ரஜினிகாந்த் - தாமரைசெல்வி தம்பதி. இந்நிலையில் இவர்களது மூத்த மகள் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்துவருகிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் வீட்டில் ஆன்லைன் வகுப்பு மூலம் படித்துவருகிறார். இந்நிலையில் கடந்த வாரம் மாணவியின் விருப்பமின்றி தாய் மாமனுடன் திருமணம் செய்வதாக பெற்றோர்கள் முடிவெடுத்து இருவீட்டார் சம்மதத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதனையடுத்து மாணவி தனக்கு விருப்பமின்றி திருமணம் முயற்சிகள் நடைபெறுவதாகவும், தனக்கு படிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளதால் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி காவல்துறை வாட்ஸ்-அப் எண்ணிற்கு ஆன்லைன் மூலமாக புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து காவல்துறையினர் பெற்றோர்களை அழைத்து அறிவுரை கூறி அனுப்பிவைத்துள்ளனர். மாணவிக்கு மாவட்ட குழந்தைகள் நல அலுவலர்கள் மனநல ஆலோசனை வழங்கிய நிலையில் உறவினரின் வீட்டில் தங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று தனது வீட்டிற்கு மாணவி திரும்பிய நிலையில் திடீரென அவரது அறை திறக்கப்படாமல் இருந்துள்ளது. ஜன்னல் வழியாக பார்த்தபோது மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது. எனினும் அருகில் உள்ளவர்களின் உதவியுடன் மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் மாணவி உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறிய நிலையில் காவல் துறையினருக்கு தகவல் அளித்துவிட்டு உடலை வீட்டிற்கு எடுத்து சென்றுள்ளனர். போலீசார் பிரேத பரிசோதனைக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மாணவியின் தற்கொலை குறித்து பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் அண்ணாநகர் போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
ஊரடங்கை பயன்படுத்தி பள்ளிமாணவிக்கு திருமணம் நடத்த முயன்றதால் மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் இதேபோன்று ஊரடங்கை பயன்படுத்தி குழந்தை திருமணங்கள் அதிகளவில் நடைபெறுவதால் அதனை தடுக்க காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் தனிப்பிரிவை உருவாக்கி புகார்களை ரகசியமாக பெற வேண்டும் எனவும் மகளிர் அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து காவல்துறையினர், ”குழந்தை திருமணங்கள் தற்போதைய சூழலில் அதிகமாக நடைபெறுகிறது. ஊரடங்கு நேரம் என்பதால் வெளியே தெரியாது என்று நினைக்கின்றனர். பொதுமக்கள் இந்த சம்பவங்களை புகாரளிக்க முன்வர வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்க்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















