‘ஏன் மீண்டும் இங்கே வருகிறீர்கள்’ என்று கேட்டு திடீரென அரிவாளால் வெட்டத் தொடங்கினர் - மானாமதுரையில் பாதிக்கப்பட்டவர்கள் பேட்டி !
மானாமதுரை வெட்டு சம்பவம்: “போதையில் இருந்தவர்கள் திடீரென தாக்கினர்” –எவ்வளவோ கெஞ்சியும் எங்களை விடவில்லை சரமாரியாக தாக்கினார்கள் மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்கள் பேட்டி.

தொடர்ந்து இரண்டு தாக்குதல் சம்பவங்கள் – மானாமதுரையில் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு: காவல்துறை தீவிர விசாரணை.
அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட தகராறில் இருவருக்கு வெட்டு ஏற்பட்டது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ரயில்வே காலனி சீயோன் நகர் பகுதியில் அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட தகராறில் இருவருக்கு வெட்டு ஏற்பட்டது. பலத்த காயங்களுடன் அவர்கள் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் மானாமதுரை அருகே ஜீவா நகரைச் சேர்ந்த ஜெயக்குமார் மற்றும் ஆதனூரைச் சேர்ந்த அழகர் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனர். காயமடைந்த இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த காட்சிகளில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் ஒருவரை அரிவாளால் விரட்டும் காட்சியும், மேலும் ஒருவர் ஆயுதங்களுடன் இன்னொருவரை துரத்தும் காட்சியும் பதிவாகியுள்ளன. இதற்கிடையில் கடந்த மார்ச் 3ஆம் தேதி மானாமதுரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இடைக்காட்டூர் மேலத்தெருவில், பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த மக்கள் வசிக்கும் பகுதியில் 3 இருசக்கர வாகனங்களில் வந்த 9 பேர் தாக்குதல் நடத்திய சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இரண்டு தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளது
அந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளும் நேற்று வெளியானதால் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் குறுகிய கால இடைவெளியில் தொடர்ந்து இரண்டு தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளதால் மானாமதுரை பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. சம்பவங்கள் தொடர்பாக மானாமதுரை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு, சம்பந்தப்பட்டவர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாக்க அந்த பகுதியில் காவல்துறை கண்காணிப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இது தொடர்பாக மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
நான் எவ்வளவோ கெஞ்சியும் அவர்கள் விடவில்லை
மேலும் இதுகுறித்து சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜெயக்குமார் கூறுகையில், “எங்கள் தெருவுக்குள் சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தோம். அப்போது தெரு பெயர் பலகை அருகே திரும்பும்போது அங்கு அமர்ந்திருந்த சிலர் போதையில் இருந்தனர். அவர்கள் திடீரென எங்கள் இருசக்கர வாகனத்தை மறித்து அடித்து உடைத்தனர். பின்னர் ‘தெரியாமல் செய்துவிட்டோம்’ என்று கூறி அங்கிருந்து சென்றுவிட்டார்கள். அதன்பிறகு நான் மற்றும் என்னுடன் இருந்த நண்பர் மானாமதுரை டவுன் பகுதிக்கு சென்று மீண்டும் அதே வழியாக திரும்பி வந்தோம். அப்போது அங்கு இருந்த போதையில் இருந்த மர்மநபர்கள் ‘ஏன் மீண்டும் இங்கே வருகிறீர்கள்’ என்று கேட்டு திடீரென அரிவாளால் வெட்டத் தொடங்கினர். நான் எவ்வளவோ கெஞ்சியும் அவர்கள் விடவில்லை” என தெரிவித்தார்.
ட்ரெண்டிங் செய்திகள்






















