Crime: காதலிக்க மறுத்த பெண்.. குடும்பத்தினரை போலீசில் சிக்க வைக்க இளைஞர் செய்த சம்பவம்!
கடந்த ஜூன் 18 ஆம் தேதி சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள இண்டிகோ விமான நிலையத்தில் வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு இரவு 8.45 மணியளவில் இ-மெயில் ஒன்று வந்துள்ளது.
சென்னையில் இருந்து மும்பை செல்லவிருந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவத்தில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஜூன் 18 ஆம் தேதி சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள இண்டிகோ விமான நிலையத்தில் வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு இரவு 8.45 மணியளவில் இ-மெயில் ஒன்று வந்துள்ளது. அதில் சென்னையில் இருந்து மும்பை செல்லும் விமானத்தில் விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த குண்டு சரியாக இரவு 9.45 மணிக்கு வெடிக்கும் எனவும் அதிர்ச்சியான தகவல் இடம் பெற்றிருந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த இண்டிகோ வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரிகள், சென்னை விமான நிலைய அதிகாரிகளை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். உடனடியாக குறிப்பிட்ட அந்த விமானத்தில் வெடிகுண்டு சோதனையும் நடத்தப்பட்டது. ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்காததால் இந்த மிரட்டல் வெறும் புரளி என தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் இண்டிகோ விமான நிலையத்தில் வாடிக்கையாளர் சேவை மையம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
காவல்துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின்பேரில் சைபர் கிரைம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில் சம்பந்தப்பட்ட இ-மெயில் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் இருந்து வந்தது தெரிய வந்தது. உடனடியாக நடவடிக்கையில் இறந்த போலீசார் பிரசன்னா என்ற 27 வயது இளைஞரை கைது செய்தனர். பட்டதாரி இளைஞரான இவர் வேலை தேடி வந்துள்ளார். இவரது தந்தை ஓய்வுப்பெற்ற தபால் அதிகாரியாவார்.
பிரசன்னா சென்னை பெரம்பூரில் உள்ள தனது உறவுக்கார பெண்ணை காதலித்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் அப்பெண் காதலை ஏற்க மறுத்துள்ளார். இதனால் அப்பெண்ணின் குடும்பத்தினர் மீது கோபம் கொண்ட பிரசன்னா, அவர்களை போலீசில் மாட்டி விடுவதற்காக அவர்கள் பெயரை கொண்டு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து திருவையாறில் கைதுப் செய்யப்பட்ட பிரசன்னா சென்னை அழைத்து வரப்பட்டு நீதிமன்ற காவல் மூலம் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் இதுபோல் இமெயில், தொலைபேசி வாயிலாக மிரட்டல் விடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.