அடுக்குமாடி குடியிருப்பில் அரைநிர்வாணமாக இறந்து கிடந்த வீட்டு வேலை செய்யும் பெண்! குழம்பும் போலீசார்!
சென்னை திநகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வீட்டு வேலை செய்யும் பெண் ஒருவர் அரைநிர்வாணமாக இறந்து கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திநகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வீட்டு வேலை செய்யும் பெண் ஒருவர் அரைநிர்வாணமாக இறந்து கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தேனாம்பேட்டை ஆலயம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் விஜயா. வயது 45. இவர் பாண்டி பஜார் தி.நகர் சாலையில் வணிக வளாகம் ஒன்றில் ஹவுஸ் கீப்பிங் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் வீரபத்திரன். வயது 58. இவர் தி.நகர் நானா தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக வேலை செய்து வருகிறார். இவருக்கும் விஜயாவுக்கும் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. அப்போது வீட்டு வேலை செய்ய யாராவது குடியிருப்பில் ஆட்கள் கேட்டால் தன்னை தொடர்பு கொள்ளுமாறு வீரபத்திரனிடம் கூறி தனது மொபைல் எண்ணையும் கொடுத்துள்ளார்.
அதன்படி அந்த அடுக்குமாடி குடியிருப்பில் முதல் தளத்தில் வசிக்கும் வடிவேல் என்பவரது வீட்டை சுத்தம் செய்ய வருமாறு கடந்த 22ஆம் தேதி காலை வீரபத்திரன் விஜயாவுக்கு போன் செய்துள்ளார்.
இதையடுத்து தனது மருமகளுடன் விஜயா வீரபத்திரன் சொன்ன வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு வேலையை முடித்துவிட்டு மதியம் விஜயா தான் வேலைப்பார்க்கும் வணிக வளாகத்திற்கு சென்று விட்டார்.
அவரது மருமகள் கண்மணி தேனாம்பேட்டையில் உள்ள வீடு ஒன்றில் வேலைக்கு சென்றுவிட்டார்.
இந்நிலையில், வீரபத்திரன் வேலைபார்க்கும் குடியிருப்பின் தரை தளத்தில் உள்ள கழிப்பறையில் விஜயா மர்மான முறையில் அரைநிர்வாணமாக இறந்து கிடந்தார்.
இதைப்பார்த்த அங்கிருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பிரேத பரிசோதனை முடிந்த பிறகு உடலை அவர்களின் உறவினர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
இறந்து கிடந்த பெண் அரைநிர்வாணமாக இறந்து கிடந்ததால் அவரது உறவினர்களுக்கு சந்தேகம் வலுத்துள்ளது. இதனால் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என மாம்பலம் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
இடுகுறித்து போலீசார் கூறுகையில், “வீரபத்திரன் வேலைபார்க்கும் அடுக்குமாடி குடியிருப்பின் தரைதளத்தில் கடைகள் உள்ளன. அங்குள்ள கழிப்பறை ஒன்றில் மேலாடை இன்றி அரை நிர்வாணமாக விஜயா இறந்து கிடந்தார்.
அவர் தன் மகனிடம் வடிவேல் வீட்டில் காய் கறி நறுக்கும் வேலை இருப்பதாக கூறியுள்ளார். ஆனால் வடிவேல் வீட்டார், அவரை மீண்டும் வேலைக்கு அழைக்கவே இல்லை என கூறுகின்றனர். எதற்காக அந்த அடுக்குமாடி குடியிருப்பின் கழிப்பறைக்கு சென்றார் என்பது மர்மமாக உள்ளது. இறந்து கிடந்த விதமும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
அவர் இறந்து கிடந்ததை வீரபத்திரன் தான் முதலில் பார்த்துள்ளார். உள்பக்கம் கதவு தாழிடப்படவில்லை. விஜயா அங்கு வந்தது வீரபத்திரனுக்கும் தெரியவில்லை என்கிறார். விஜயாவுக்கு வலிப்பு நோய் உள்ளது. வாயில் நுரை தள்ளியப்படிதான் இறந்து கிடந்தார்.
உடலில் காயங்கள் ஏதும் இல்லை. பிரேத பரிசோதனை வந்த பிறகே இறப்புக்கான காரணம் தெரியும்”எனத் தெரிவித்தார்.





















