Crime: நெல்லையில் லட்சக்கணக்கில் மோசடி செய்த தனியார் நிதி நிறுவன மேலாளர் கைது
போலி ஆவணம் மூலம் கடன் பெற்று லட்சக்கணக்கில் மோசடி செய்து தலைமறைவாக இருந்து வந்தார்.
நெல்லை மாவட்டம், திசையன்விளை பகுதியில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று இயங்கி வந்தது. இதன் மேலாளராக தூத்துக்குடி மாவட்டம் ஏரலை சேர்ந்த ராக்கேஷ்(32), என்பவர் பணிபுரிந்து வந்தார். குறிப்பாக சுற்றுவட்டார பகுதியில் உள்ள பொதுமக்களிடம் பெற்ற கடன் தொகையை நிறுவனத்தில் செலுத்தாமல், போலி ஆவணம் மூலம் கடன் பெற்று லட்சக்கணக்கில் மோசடி செய்து தலைமறைவாக இருந்து வந்தார். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவித்து வந்தனர். குறிப்பாக 11 இலட்சத்து 19 ஆயிரம் வரை மோசடி செய்திருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் இதுகுறித்து அந்த நிறுவனத்தை சேர்ந்த மண்டல துணை மேலாளர் முத்துக்குமார் என்பவர் நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணனிடம் புகார் அளித்தார்.
அவர் அளித்த புகாரின் பேரில் உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தினார். அதன்படி மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் பொன்ரகு உத்தரவின் பேரில் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் முத்து தலைமையில் SSI சுப்பிரமணியன், தலைமை காவலர்கள் ஜான்போஸ்கோ, ஆல்வின் கில்பர்ட் ஆகியோர் அடங்கிய தனிப்படை காவல்துறையினர் தலைமறைவாக இருந்த ராக்கேஷை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் தொழில் நுட்ப உதவியுடன் நடைபெற்ற தீவிர தேடுதல் வேட்டையில் கோவை மாவட்டம், போத்தனூரில் ராக்கேஷ் பதுங்கி இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அங்கு சென்ற மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ராக்கேஷை விசாரணை அதிகாரி ராஜேஸ்வரி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார். மேலும் இவ்வழக்கில் துரிதமாக செயல்பட்டு தலைமறைவாக இருந்த ராக்கேஷை கைது செய்த மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டினார்.