பள்ளியில் புதிய ஏற்பாடு புத்தகம் வினியோகம்: மதபோதகர்கள் கைது; இந்து முன்னணி மறியல்!
கரூரில் தனியார் பள்ளி முன்பு புதிய ஏற்பாடு புத்தகம் மற்றும் கேக் வழங்கியவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களை தாக்கியதாக இந்து முன்னணி நிர்வாகியும் கைது செய்யப்பட்டார்.
![பள்ளியில் புதிய ஏற்பாடு புத்தகம் வினியோகம்: மதபோதகர்கள் கைது; இந்து முன்னணி மறியல்! Christians arrested for distributing religious textbooks at Karur school பள்ளியில் புதிய ஏற்பாடு புத்தகம் வினியோகம்: மதபோதகர்கள் கைது; இந்து முன்னணி மறியல்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/19/3d0c0dba27415caf4aabb62b2fbc2a49_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கரூர் அருகே புன்னம் சத்திரம் அருகில் நேற்று காலை பிரபல தனியார் பள்ளி முன்பு காரில் வந்த 2 பெண்கள் உட்பட 5 நபர்கள், பள்ளி வாயிலில் நின்று மாணவ, மாணவிகளுக்கு "புதிய ஏற்பாடு" புத்தகம் மற்றும் கேக் வழங்கியுள்ளனர். தகவல் அறிந்த பள்ளி நிர்வாகத்தினர் அனுமதி பெறாமல் மாணவ, மாணவிகளுக்கு எப்படி கேக் மற்றும் மதரீதியான புத்தகம் வழங்கலாம்? என கேள்வி எழுப்பினர்.
இதற்கிடையில் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளின் பெற்றோரும், அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த வேலாயுதம்பாளையம் போலீசார் அனுமதியின்றி பள்ளி குழந்தைகளுக்கு கேக் மற்றும் மதப்பிரச்சார புத்தகம் வழங்கிய மங்கள ராஜா மற்றும் 4 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். பின்னர் பிணையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில்,தனது கார் கண்ணாடியை இந்து முன்னணி மேற்கு ஒன்றிய நிர்வாகி கந்தசாமி என்பவர் உடைத்துவிட்டதாக மங்கள ராஜா புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் வேலாயுதம்பாளையம் காவல் நிலையப் போலீசார் கந்தசாமி மீது வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர்.
கந்தசாமி கைது செய்யப்பட்டதை அறிந்த இந்து முன்னணி நிர்வாகிகள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் திரண்டு காவல் நிலையத்தில் முற்றுகையிட்டனர். கார் கண்ணாடியை உடைத்ததால் கைது செய்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்த இந்து முன்னணி நிர்வாகிகள் 50 க்கும் மேற்பட்டோர் கரூர்-சேலம் நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சுமார் ஒரு மணி நேரம் நடந்த சாலை மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்தில் அரவக்குறிச்சி டிஎஸ்பி முத்தமிழ் செல்வன் உள்ளிட்டோர் நேரில் சென்று அவர்களை சமாதானப்படுத்தி மறியலை கைவிட்டனர்.
கரூர் மாவட்டத்தில் மதரீதியான புத்தகம் மற்றும் கேக் வழங்கிய விவகாரத்தில் புன்னம் சத்திரம் பகுதி பரபரப்பாக காணப்பட்ட நிலையில், இந்து முன்னணி நிர்வாகி கைது செய்யப்பட்டதால் பரபரப்பு இன்னும் பற்றிக் கொண்டது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)