ரயில் நிலையத்தில் திருடுபோன குழந்தை...சிக்கிய பாஜக நிர்வாகி... நடந்தது என்ன?
அந்த ஏழு மாத ஆண் குழந்தை 100 கிமீ தொலைவில் ஃபிரோசாபாத்தில் உள்ள பாஜக கவுன்சிலரிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசம் மதுரா ரயில் நிலையத்தில் தூங்கிக்கொண்டிருந்த பெற்றோரின் அருகில் இருந்து குழந்தை திருடப்பட்டது. இதையடுத்து, அந்த ஏழு மாத ஆண் குழந்தை 100 கிமீ தொலைவில் ஃபிரோசாபாத்தில் உள்ள பாஜக கவுன்சிலரிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குழந்தையை திருடும் கும்பலின் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
🚨🇮🇳Meanwhile in India, a newborn baby was stolen from her sleeping mother at the railway station at UP's Mathura.
— Terror Alarm (@terror_alarm) August 28, 2022
Since Police seem not to care and take action, we ask you to 👉Make him famous! pic.twitter.com/lmmMsfjpmv
பாஜகவைச் சேர்ந்த வினிதா அகர்வாலும் அவரது கணவரும் தங்களுக்கு ஒரு ஆண் குழந்தை வேண்டும் என, பெரிய கும்பலைச் சேர்ந்த இரண்டு மருத்துவர்களிடம் இருந்து 1.8 லட்சம் ரூபாய்க்கு சிறுவனை வாங்கியதாகக் கூறப்படுகிறது. இந்த தம்பதிக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ளது.
பிளாட்பாரத்தில் இருந்து குழந்தையை தூக்கிச் சென்றபோது பாதுகாப்பு கேமராவில் சிக்கியவர் உள்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுராவில் ரயில்வே போலீசார் ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் சந்திப்பின் காட்சிகளில், போலீசார் குழந்தையை அவரது தாயிடம் ஒப்படைப்பதையும், மகிழ்ச்சியில் அனைவரும் சிரிப்பதையும் பார்க்கலாம்.
மற்றொரு காட்சியில் கைது செய்யப்பட்ட மருத்துவர்களிடம் இருந்து போலீசார் கைப்பற்றிய 500 ரூபாய் நோட்டுகள் பதிவாகி இருந்தன. இது குறித்து விரிவான அறிக்கையில், மூத்த போலீஸ் அலுவலர் முகமது முஷ்டாக் கூறுகையில், பணத்திற்காக கடத்தலில் ஈடுபட்ட கும்பல் இந்த கடத்தலை நடத்தியது என்றார்.
இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "தீப்குமார் என்ற நபர் குழந்தையை எடுத்துச் சென்றதைக் கண்டுபிடித்தோம். அண்டை பகுதியான ஹத்ராஸ் மாவட்டத்தில் மருத்துவமனையை நடத்தும் இரண்டு மருத்துவர்களை உள்ளடக்கிய கும்பலின் ஓர் அங்கமாக அவர் உள்ளார். மேலும் சில சுகாதார ஊழியர்களும் இதில் ஈடுபட்டுள்ளனர்.
குழந்தை யாருடைய வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டது என்பதை நாங்கள் விசாரித்தோம். அவர்கள் எங்களுக்கு ஒரே ஒரு மகள் இருப்பதாகவும், அதனால் ஒரு மகன் வேண்டும் என்றும் சொன்னார்கள். அதனால்தான் ஒப்பந்தம் போட்டதாக அவர்கள் கூறினார்கள்" என்றார்.
இதுகுறித்து பாஜகவோ கவுன்சிலர் தரப்பிலிருந்தோ எந்த பதிலும் அளிக்கவில்லை. ஆகஸ்ட் 23 ஆம் தேதி இரவு நடந்த சம்பவத்தின் காட்சியில், ஒரு நபர் தனது தாயுடன் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை கடந்து செல்வது போல தெரிகிறது. சில நிமிடங்களுக்குப் பிறகு, அவர் திரும்பி வந்து குழந்தையைத் தூக்கிக் கொண்டு செல்கிறார். பிளாட்பாரத்தில் நின்றிருந்த ரயிலை நோக்கி அவர் ஓடுவது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.