Rajagopalan Case: பாலியல் ஆசிரியர் ராஜகோபாலன் மீது குண்டாஸ் பாய்ந்தது
சென்னை தனியார் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த பாலியல் ஆசிரியர் ராஜகோபாலன் மீது குண்டாஸ் பாய்ந்தது.
பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனியார் பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குண்டர் சட்டத்தில் ராஜகோபாலனை சிறையில் அடைக்க சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய புகாரில் ஆசிரியர் ராஜ கோபாலன் கைது செய்யப்பட்டார். ராஜகோபாலன் மீதான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாக போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது.
முன்னதாக சென்னை கே.கே.நகரில் உள்ள தனியர் பள்ளியில் படிக்கும் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ஆசிரியர் ராஜகோபாலன் பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் புகார் கூறியது தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் ராஜகோபாலன் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.மாணவிகளின் தொடர் புகாரால் அதிர்ச்சி அடைந்த போலீசார் ஆசிரியர் ராஜகோபாலனை நீதிமன்ற அனுமதியுடன் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினார்கள். இதில், கடந்த 10 ஆண்டுகளாக பள்ளியில் 11,12ஆம் வகுப்பு மாணவிகளுக்கு அதிக மதிப்பெண் எடுக்க உதவி செய்வதாக கூறியும், சிறப்பு வகுப்பு என மாணவிகளை பள்ளிக்கு வரவழைத்து விடுமுறை நாட்களில் பள்ளி அறையிலேயே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததும் தெரியவந்தது. இந்த வகையில் கடந்த 10 ஆண்டுகளில் 300க்கும் மேற்பட்ட மாணவிகளை பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாகவும், அதில் 50க்கும் மேற்பட்ட மாணவிகள் ஆசிரியர் ராஜகோபாலன் மீது பள்ளி நிர்வாகத்திடம் புகார் கொடுத்திருந்ததும் தெரியவந்தது. ஆனால், மாணவிகளின் புகார்கள் மீது பள்ளி நிர்வாகம் ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்காமல், பள்ளியில் நடைபெறும் பாலியல் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை குழுவில் ஆசிரியர் ராஜகோபாலனையும் நியமித்து பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது. இதனால் தனது மீது மாணவிகள் அளித்த பாலியல் புகார்களை ஆசிரியர் சக ஆசிரியர்களுடன் இணைந்து வெளியே தெரியாமல் மறைத்து புகார் அளித்த மாணவிகளுக்கு எதிராகவே மாற்றியதும் தெரியவந்தது.
மாணவிகள் கொடுத்த பாலியல் புகார் குறித்து மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிகள் பள்ளி நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தினார்கள். இந்த விசாரணையில், சமூக வலைதளத்தில் புகார் வருவதற்கு முன்பு மாணவிகள் மீதான பாலியல் தொந்தரவு குறித்து தங்களுக்கு தெரியாது என பள்ளி நிர்வாகம் தரப்பில் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் பதில் அளிக்கப்பட்டது. பள்ளியின் முதல்வர் கீதா கோவிந்தராஜன் தாளாளர் ஷீலா ராஜேந்திரன் இருவரிடமும் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். சமூகவலைதளத்தில் பாலியல் புகார் அளித்த மாணவிகள் யார் என்றே தெரியாது என்று கூறினர். அதிகாரிகளின் பெரும்பாலான கேள்விகளுக்கு தெரியாது என்றே அவர்கள் பதிலளித்ததாக தகவல் வெளியானது. விரிவான விசாரணைகளுக்கு பிறகே, ராஜகோபாலன் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.