அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது!
அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்தனர். இவர் இதற்கு முன் பல பிரபலங்களுக்கு இதே போன்று மிரட்டல் விடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
ஊரடங்கு காலத்திலும் திரைத்துறை பிரபலங்களின் வீடுகளில் வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது அதிகமாகிக் கொண்டே வருகிறது. தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் 'வலிமை' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். போனி கபூர் தயாரித்து வரும் இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு மட்டுமே உள்ளது. இந்தக் காட்சிகளை வெளிநாட்டில் படமாக்கவுள்ளனர். கொரோனா ஊரடங்கால் இதன் படப்பிடிப்பு வேலைகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக, முன்னணி பிரபலங்கள் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன. உடனடியாகக் காவல்துறையினர் விசாரணையில் இறங்கி, சம்பந்தப்பட்ட நபரை விசாரித்து, கைது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்கிறார்கள். சிலரை எச்சரிக்கை செய்து அனுப்பி விடுகிறார்கள்.
நேற்று மாலை காவல் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்ட அடையாளம் தெரியாத நபர் ஒருவர், நடிகர் அஜித் வீடு மற்றும் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகியவற்றில் சில நிமிடங்களில் வெடிகுண்டு வெடிக்க உள்ளதாகத் தகவல் தெரிவித்துவிட்டு இணைப்பைத் துண்டித்தார். உடனடியாக உயா் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனா். இதையடுத்து சென்னை ஈஞ்சம்பாக்கம் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள நடிகா் அஜித் வீட்டில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீசார், நீலாங்கரை போலீசார் இணைந்து சோதனை செய்தனா். பல மணி நேரம் நடைபெற்ற இச்சோதனையில், அங்கிருந்து எந்த வெடிபொருளும் கண்டெடுக்கப்படவில்லை. இது தொடா்பாக நீலாங்கரை போலீசார் வழக்குப் பதிவு செய்து, சைபா் குற்றப்பிரிவுடன் இணைந்து விசாரணை நடத்தினர்.
சோதனையில் அது புரளி எனத் தெரியவந்தது. மேலும், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த செல்போன் எண்ணை வைத்துத் தேடியபோது வழக்கமாக மிரட்டல் விடுக்கக்கூடிய விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தைச் சேர்ந்த புவனேஷ் என்பது தெரியவந்தது. புவனேஷ் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். இவரை கடந்த முறை தலைமைச் செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த போது போலீசார் அவரை கைது செய்து கடலூரில் உள்ள மனநலம் பாதிப்பு மையத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டது, பின்னர் அவர் வீடு திரும்பிய சில நாட்களிலேயே விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் புதிய பேருந்து நிலையம் அருகே வெடிகுண்டு இருப்பதாகவும் தொலைபேசி மூலம் தெரிவித்து விட்டு இணைப்பைத் துண்டித்துள்ளார், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இருந்தபோதிலும் இவர் தற்போது திரை பிரபலமான நடிகர் அஜீத் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார், முக்கிய பிரபலங்களுக்கு வெடிகுண்டு புரளி விடுத்து காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி அழைப்பு வருவது கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகிறது. ரஜினிகாந்த், விஜய் உள்பட பல திரையுலக பிரபலங்களுக்கும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட பல அரசியல் தலைவர்களுக்கும் கடந்த சில மாதங்களில் இதேபோன்று வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது என்பதும் ஆனால் அது வெறும் புரளி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.