(Source: ECI/ABP News/ABP Majha)
`430 கோடி ரூபாய் இழப்பு’ - தொடர் இழப்புகளைச் சந்திக்கும் ஜொமாட்டோ உணவு டெலிவரி நிறுவனம்!
ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஜொமாட்டோ கடந்த செப்டம்பர் மாதம் முடிவடைந்த காலாண்டு வரை 430 கோடி ரூபாய் இழப்பைச் சந்தித்துள்ளது. கடந்த ஆண்டு, இதே இழப்பு 229 கோடி ரூபாய் ஆகக் கணக்கிடப்பட்டிருந்தது.
ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஜொமாட்டோ கடந்த செப்டம்பர் மாதம் முடிவடைந்த காலாண்டு வரை சுமார் 430 கோடி ரூபாய் இழப்பைச் சந்தித்துள்ளது. கடந்த ஆண்டு, இதே மாதத்தின் போது, ஜொமேட்டோ நிறுவனத்தின் இழப்பு சுமார் 229 கோடி ரூபாய் ஆகக் கணக்கிடப்பட்டிருந்தது. கடந்த ஜூன் மாதத்தின் காலாண்டின் போது, சுமார் 356 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருந்ததாக ஜொமேட்டோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவு டெலிவரி வர்த்தகத்தில் பிற நிறுவனங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு, நிறுவனத்தை மக்களிடையே பிரபலமாக்க மேற்கொண்ட விளம்பரப் பணிகள் முதலானவையே இழப்புக்குக் காரணம் எனவும் ஜொமாட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டைவிட, இந்த ஆண்டு சுமார் 40 கோடி ரூபாய் தொகையை விளம்பரங்களுக்காக ஜொமாட்டோ நிறுவனம் செலவு செய்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டின் செப்டம்பர் மாதத்தோடு ஒப்பிடுகையில், இந்த ஆண்டு ஒவ்வொரு ஆர்டருக்கும் டெலிவரி விலையில் 5 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் ஜொமாட்டோ கூறியுள்ளது. எனினும், உணவு டெலிவரிக்கான கட்டணம் இன்னும் உயர்த்தப்படாது எனவும் ஜொமாட்டோ நிறுவனத்தின் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் வரையிலான காலாண்டில், சுமார் 1420 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியிருப்பதாகவும் ஜொமாட்டோ தரப்பில் கூறப்படுகிறது. மேலும், ஜொமாட்டோ செயலியை சுமார் 15 லட்சம் பேர் பயன்படுத்துவதாகவும், நாடு முழுவதும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரெஸ்டாரண்ட்களுடன் இணைந்து இயங்குவதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஜொமாட்டோ செயலியைப் பயன்படுத்தி ஆர்டர் செய்யப்பட்ட பொருள்களின் மொத்த மதிப்பு கடந்த ஆண்டைவிட சுமார் 158 சதவிகிதம் உயர்ந்துள்ளது. இந்தக் காலாண்டு வரை, சுமார் 5410 கோடி ரூபாய் மதிப்பிலான உணவுப் பொருள்கள் ஜொமாட்டோ செயலியைப் பயன்படுத்தி, ஆர்டர் செய்யப்பட்டு டெலிவரி செய்யப்பட்டுள்ளன.
மேலும், ஜொமாட்டோ நிறுவனம் தங்கள் வர்த்தகத்தை அதிகரிக்க பல்வேறு புதிய ஒப்பந்தங்கள் போடப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. ஜொமாட்டோ நிறுவனத்தின் Fitso செயலியை Curefit நிறுவனத்திற்கு சுமார் 50 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும், Curefit Plus செயலியில் சுமார் 50 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான முதலீட்டிற்கும் விற்பனை செய்யும் பணிகளில் இறங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. `ஜொமாட்டோ, க்யூர்ஃபிட் ஆகிய நிறுவனங்கள் ஒன்றிணையும் போது, உணவு, உடல்நலம் ஆகிய இரண்டு துறைகளையும் ஆராய முடியும். உணவும், உடல்நலமும் ஒரு நாணயத்தின் ஒரே பக்கமாகக் கடந்த சில நாள்களாக மாறி வருகிறது’ என்று ஜொமாட்டோ தரப்பில் கூறப்பட்டுள்ளது.
Shiprocker நிறுவனத்தில் சுமார் 75 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்வதற்கான ஒப்பந்தத்திலும் ஜொமாட்டோ நிறுவனம் கையெழுத்திட்டு உள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் மேலும் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்களை உடனடி வர்த்தகத்துறையில் முதலீடு செய்ய இருப்பதாகவும் ஜொமாட்டோ நிறுவனம் கூறியுள்ளது.