இவர் சொல்லும் கதையை கேட்டு ஏமாந்த பெரும் தலைகள்..! கவனம்... கவனம்... கவனம்...!
லாபம் கொடுக்கும் வாய்ப்புகளை கண்டறிந்து அவற்றில் முதலீடு செய்ய வேண்டும் என்பது இந்த நிறுவனத்தின் நோக்கம்.
சதுரங்க வேட்டையில் பல ஏமாற்று காரர்களை நாம் பார்த்திருப்போம். ஈமு கோழி, எம்.எல்.எம். ரைஸ் புல்லிங் உள்ளிட்ட பல ஏமாற்று வித்தைகள் நம்மிடம் புழங்கி வருகின்றன. இது இல்லாமலும் பல வித்தைகாரகள் நம்மிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கலாம். இவறையெல்லாம் விட இது மிகப்பெரிய சர்வதேச மோசடி. சர்வதேச அளவில் பல பெரும் தலைகள் இவர் சொல்லும் கதையை கேட்டு ஏமாந்திருக்கிறார்கள்.
அவர் யார் என்று பார்ப்பதற்கு முன்பு கொஞ்சம் நிதி சார்ந்த விஷயங்களை புரிந்துகொண்டால்தான் இந்த மோசடி என்ன என்பது புரியும். நம்மை போல சிறு முதலீட்டாளர்கள் வங்கி, தங்கம் அல்லது ஆர்டியில் முதலீடு செய்வார்கள். தற்போது மியூச்சுவல் பண்ட் மூலம் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துவருகிறது. அதாவது நாம் செய்யும் சிறு தொகையை மியூச்சுவல் பண்ட்கள் ஒருங்கிணைத்து பட்டியலிடப்பட்ட நிறுவனத்தில் முதலீடு செய்து நமக்கு லாபத்தை கொடுக்கும்.
இதேவேலையை தான் பிரைவேட் ஈக்விட்டி நிறுவனங்களும் செய்கின்றன. ஆனால் பிரைவேட் ஈக்விட்டி நிறுவனங்கள் பெரிய முதலீட்டாளர்களிடம் இருந்து பெரிய தொகையை திரட்டி, பட்டியலிடப்பட்ட அல்லது ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்து லாபத்தை முதலீட்டாளர்களிடம் லாபத்தை கொடுப்பார்கள். இந்தியாவில் மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் பல பிரைவேட் ஈக்விட்டி நிறுவனங்கள் உள்ளன.
இதில் ஒரு பிரைவேட் ஈக்விட்டி நிறுவனம் தான் அப்ராஜ் குழுமம். துபாயை தலைமையாக கொண்டு செயல்பட்டுவரும் இந்த நிறுவனத்தை தொடங்கியவர் ஆரிப் நக்வி. பாகிஸ்தானில் பிறந்தவர் இவர். கராச்சியில் படித்த இவர் லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸில் பட்டபடிப்பை முடித்தார். அதனை தொடர்ந்து ஆலோசனை நிறுவனங்கள், நிதிசார்ந்த நிறுவனங்களில் வேலை செய்தவர் 2002-ம் ஆண்டு அப்ராஜ் என்னும் பிரைவேட் ஈக்விட்டி நிறுவனத்தை துபையில் தொடங்குகிறார்.
லாபம் கொடுக்கும் வாய்ப்புகளை கண்டறிந்து அவற்றில் முதலீடு செய்ய வேண்டும் என்பது இந்த நிறுவனத்தின் நோக்கம்.
2016-ம் ஆண்டு வரை சரியாக இருந்த இவரது நிறுவனம் தடுமாறத்தொடங்கியது. அப்போது சுமார் 1,400 கோடி டாலர் அளவிலான தொகையை இவரது நிறுவனம் கையாண்டுவந்தது. இவரது நிறுவனத்தில் பலர் முதலீடு செய்திருக்கிறார். பில்கேட்ஸ், இளவரசர் சார்லஸ் அமெரிக்க பென்ஷன் பண்ட், பேங்க் ஆப் அமெரிக்கா உள்ளிட்ட பலர் இவரது பிரைவேட் ஈக்விட்டி நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கிறார்கள். அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் அரசுகளும் முதலீடு செய்திருக்கின்றன.
இவரது முதலீட்டு நோக்கமே சர்வதேச அளவில் பல பிரபலங்கள் முதலீடு செய்ய காரணமாக இருந்திருக்கின்றன. பிரத்யேகமாக எந்த நாட்டிலும் வளர்ச்சி இல்லை. முக்கிய நகரங்களில்தான் வளர்ச்சி இருக்கிறது. நகரங்களில் மனிதர்களுக்கு உள்ள பிரச்சினைகளை தீர்க்கும் நிறுவனங்களாக பார்த்து முதலீடு செய்யும் பட்சத்தில் பெரிய லாபம் சம்பாதிக்க முடியும். பசி, உடல் நலகுறைவு, கால நிலை மாற்றம், எரிசக்தி பிரச்சினை உள்ளிட்டவற்றில் ஈடுபடும் நிறுவனமாக பார்த்து முதலீடு செய்யும்போது நல்ல வருமானம் கிடைக்கும். நல்ல செயல்களில் நல்ல வருமானம் கிடைக்காது என்னும் மாயை இருக்கிறது. நல்ல செயல்களில் முதலீடு செய்வதன் மூலமும் நாம் லாபம் சம்பாதிக்கலாம் என பேசி இருக்கிறார். impact investing என்னும் தியரியை சர்வதேச எலைட் சமூகத்திடம் பேசி இருக்கிறார்.
ஐக்கியநாடுகள் சபை, உலகபொருளாதார மையம் உள்ளிட்ட அமைப்புகளில் அடிக்கடி உரையாற்றக்கூடிய அளவுக்கு செல்வாக்கு படைத்தவர். அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், பத்திரிகையாளர்கள் என பல இடங்களிலும் இவருக்கு செல்வாக்கு இருக்கிறது.
இந்த நிலையில் 2017-ம் ஆண்டு ஹெல்த்கேர் துறையில் முதலீடு செய்வதற்காக 600 கோடி டாலர் அளவுக்கு நிதி திரட்ட அப்ராஜ் குழுமம் திட்டமிட்டிருந்தது. ஆனால் இந்த குழுமம் திவால் நிலையை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. இந்த பண்டில் யாரும் முதலீடு செய்ய வேண்டாம் என விஷயம் தெரிந்த நபர்களிடம் (whistle blower ) இருந்து மெயில் சென்றிருக்கிறது.
இந்த நிலையில் 78 கோடி டாலர் தொகையை தவறான வழியில் நக்வி மற்றும் அவருக்கு தெரிந்தவர்களுக்கு பணம் மாற்றப்பட்டிருக்கிறது. தவிர அவரது நிறுவனத்தில் பல பண்ட்கள் உள்ளன. ஒவ்வொரு பண்டுக்கும் ஒவ்வொரு இலக்கும் தேவையும் இருக்கும். ஆனால் தனது தேவைக்கு ஏற்ப ஒவ்வொரு பண்டில் இருந்தும் நிதியை பயன்படுத்தி இருக்கிறார். இது விதிகளுக்கு எதிரானது. தவிர சம்பளம் கொடுக்க, கடன் தவணை செலுத்த அல்லது சொகுசு வாழ்க்கைக்கு என பல வகையில் பணம் செலவு செய்யப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட பொன்ஸி திட்டம் போல பிரைவேட் ஈக்விட்டி பண்டினை நடத்தி இருக்கிறார்.
லண்டனில் உள்ள இவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டு 2019-ம் ஆண்டு கைதுசெய்யப்பட்டார். பாகிஸ்தானில் இருந்து லண்டனுக்கு திரும்பும் போது ஹீத்ரோ விமான நிலையில் கைது செய்யபட்டார். தற்போது ஜாமீனில் இருக்கும் இவர் அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட இருக்கிறார்.
மூன்று ஆண்டுக்கு முன்பே சர்வதேச அளவில் இந்த க்ரைம் பேசப்பட்டுவந்தாலும் தற்போது இந்த பெரிய மோசடி குறித்து இரு புத்தகங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. the key man மற்றும் life and death of abraaj group என்னும் இரு புத்தகங்கள் வெளியாகி இருக்கின்றன என்பதால் இவர் எப்படி சர்வதேச எலைட் சமூகத்தை ஏமாற்றினார் என்பது குறித்து எழுத தொடங்கி இருக்கின்றன.
ஒரு வேளை குற்றம் நிரூபிக்கப்பட்டால் அமெரிக்க சட்டப்படி 291 ஆண்டுகள் சிறையில் இருக்க வேண்டும். 60 வயதாகும் நக்வி இந்த வழக்கினை நடத்திவருகிறார்.
ஏமாற்றுக்காரர்கள் அனைத்து படிநிலைகளிலும் இருக்கிறார்கள். ஒருத்தர்கிட்ட பணத்தை ஏமாத்தனும்னா கருணையை எதிர்பார்க்க கூடாது. ஆசையை தூண்டனும்ன்னு சதுரங்க வேட்டையில் ஒரு வசனம் வரும். ஆனால் கருணையை அடிப்படையாக கொண்டே ஏமாற்றி இருக்கிறார் ஆரிப் நக்வி.