Home Loan Tips: வங்கியில் வீட்டுக் கடன் வாங்க போறிங்களா? உங்களுக்கான முக்கியமான 10 டிப்ஸ் இதோ..!
Home Loan Tips: வங்கியில் இருந்து வீட்டுக் கடன் வாங்க திட்டமிட்டிருப்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான அம்சங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
Home Loan Tips: வங்கியில் இருந்து வீட்டுக் கடன் வாங்கும்போது, உதவக் கூடிய சில ஆலோசனைகள் குறித்து இங்கு அறியலாம்.
வங்கியில் வீட்டுக் கடன்:
வீடு வாங்குவது என்பது ஒவ்வொருவரின் வாழ்நாள் கனவாகும். ஒரு சிலரால் மட்டுமே மொத்த முதலீட்டையும் ஒரே நேரத்தில் கொடுத்து அந்த கனவை நினைவாக்க முடிகிறது. பெரும்பாலானோருக்கு அந்த கனவு கைகூட, வங்கிகளில் கிடைக்கும் கடன் உதவி தான் ஆதாரமாக உள்ளது. முறையான திட்டமிடல் இருந்தால் அந்த கடனை எளிதாக அடைத்துவிடலாம். இல்லாவிட்டால், அந்த கடன் பெரும் தலைவலியாக மாறவும் வாய்ப்புள்ளது. அதுதொடர்பான தெளிவான பார்வை கொண்டு லாபத்துடன் அந்த கடனை அடைக்கும் சூழலில் தான், சரியான புரிதல் இன்றி வீட்டிற்கான வங்கிக் கடனை முறையாக கட்ட முடியாமல் பல்வேறு பிரச்னைகளில் சிக்கி தவிக்கின்றனர். எனவே, வீட்டுக் கடன் வாங்குவோருக்கு உதவிகரமாக இருக்கும் வகையிலான சில ஆலோசனைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
-
தீர ஆராய்தல்:
லோன் ஏஜெண்ட் சொல்கிறார் என்பதற்காக எதையும் நம்ப வேண்டாம். எந்த வங்கியின் அம்சங்கள் நமக்கானது என்பதை தீர ஆராய்ந்து நாம் தான் முடிவு எடுக்க வேண்டும். அங்கு பின்பற்றப்படும் விதிமுறைகள் என்ன என்பது தொடர்பான புரிதலையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். சில ஏஜெண்டுகள் கமிஷனுக்காக சில மோசமான வங்கிகளை பரிந்துரை செய்வதும் உண்டு.
-
செலவை கருத்தில் கொள்ளுங்கள்:
வீட்டுக் கடனுக்கான மாத சந்தாவை செலுத்தும் காலங்களில் நீங்கள் செய்யும் ஒவ்வொரு செலவையும் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம். இந்த காலங்களில் அநாவசிய செலவை தவிர்த்து பணத்தை சேமித்தால், குறிப்பிட்ட காலத்திற்கு முன்பாகவே போர்-க்ளோஸ் முறையில் கடனை அடைக்க முடியும்.
-
பணத்தை இருப்பு வைப்பது:
வங்கிகளில் வாங்கிய விட்டுக் கடனில் உள கூடுதல் தொகையை தொடர்ந்து, கடன் கணக்கிலேயே வைத்திருக்கும் சலுகை சில வங்கிகளில் வழங்கப்படுகிறது. இதன் மூலம், இருப்பு வைக்கப்பட்ட தொகைக்கு ஏற்ப, விகிதாசார அடிப்படையில் கடனுக்கான வட்டி விகிதம் பயனாளர்களுக்கு குறையும்.
-
வட்டி விகிதம் தொடர்பான விவரங்கள்:
நிலையான வட்டி மற்றும் மிதக்கும் வட்டி என இரண்டு வகைகளில் வங்கிகளில் கடன் வழங்கப்படுகிறது. வீட்டு கடன்களுக்கு பெரும்பாலும் மிதக்கும் வட்டி விகிதத்தில் தான் கடன் வழங்கப்படுகிறது. இதில் சந்தை அடிப்படையிலானது. எனவே, கடன் பெறும்போது மிதக்கும் வட்டி விகிதம் எந்த அளவிற்கு குறவாக கிடைக்கிறது என்பது கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகும். காரணம் தற்போதைய சூழலில் வட்டி விகிதம் ஒருமுறை உயர்ந்தால், மீண்டும் குறையுமா என்பது சந்தேகமே.
-
சிபில் ஸ்கோர்:
வீட்டுக் கடனுக்கு குறைந்தபட்ச வட்டியை பெற பயனாளரது சிபில் ஸ்கோர் 750-க்கும் அதிகமாக இருக்க வேண்டியது அவசியமாகும். 750க்கு மேல் கிரெடிட் ஸ்கோர் உள்ள வாடிக்கையாளருக்கு 80% வீட்டுக் கடன் ஒப்புதல்கள் வழங்கப்படுவதாக சிபில் தரவு குறிப்பிடுகிறது. குறைந்த சிபில் ஸ்கோர் இருந்தால் உங்கள் வீட்டுக் கடன் விண்ணப்பம் நிராகரிக்கப்படலாம் அல்லது அதிக வட்டி விகிதத்தை செலுத்த வேண்டியிருக்கும்.
-
பறிமுதல் விதிமுறைகளைப் புரிந்து கொள்ளுங்கள்:
முன்கூட்டியே பணம் செலுத்தி கடனை அடைப்பதற்கு விதிக்கப்படும் கூடுதல் கட்டணத்தை ரிசர்வ் வங்கி அண்மையில் தடை செய்தது. எனவே உங்கள் கடனை முன்கூட்டியே அடைக்கும் போது கூடுதல் கட்டணம் எதையும் செலுத்த வேண்டாம்.
-
கடனை அடைக்க சேமியுங்கள்:
நடப்பு நிதியாண்டில் உங்களால் ரூ.1 லட்சத்தை சேமிக்க முடிந்தால், அதை உங்கள் கடனை முன்கூட்டியே அடைக்க பயன்படுத்துங்கள். உங்கள் கடனை விரைவில் முன்கூட்டியே அடைக்க கற்றுக்கொள்ளுங்கள். மாதாந்திர தவணைகளுக்கு (EMI) நீங்கள் செலுத்தும் தொகையை எவ்வளவு சீக்கிரம் முடிக்கிறீர்களோ, அவ்வளவு விரைவாக அந்த பணத்தை வாழ்க்கையின் ஆடம்பரத்திற்காக செலவழிக்கும் சுதந்திரத்தை அனுபவிக்க முடியும்.
-
புராசசிங் கட்டணம்:
வீட்டுக் கடன் விண்ணப்பத்தை செயல்படுத்த வசூலிக்கப்படும் கட்டணங்கள் தொடர்பாக விசாரித்து, மற்ற சில வங்கிகளுடன் ஒப்பிட்டு இறுதி முடிவை எடுக்கலாம்.
-
ஆவணங்களை முறையாக படிப்பது அவசியம்:
கடன் ஒப்பந்தத்தில் உள்ள அனைத்து சட்ட விதிமுறைகள் மற்றும் நெறிமுறைகளையும் முழுமையாக படித்து ஆராய்ந்து, அதில் உள்ள சந்தேகங்களை தெளிவுபடுத்தி கொண்ட பிறகே கையொப்பமிட வேண்டும்.
-
சொந்த முதலீடு:
வீடு வாங்கும் ஒவ்வொருவரும் முடிந்தவரை கணிசமான கையிருப்பை முதலீடு செய்ய வேண்டும். அப்போது தான் வாங்கும் கடன் தொகையின் அளவும், அதற்கான வட்டி விகிதமும் குறையும்.