டெலி மார்க்கெட்டிங் நிறுவனங்களுக்கு செக் வைத்த மத்திய அரசு..!
முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நிதியமைச்சராக இருந்தபோது அவரது தொலைபேசி எண்ணுக்கு வீட்டு லோன் வேண்டுமா? குறைந்த வட்டியில் தருகிறோம் என்று அழைப்பு வந்த சம்பவம் அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது.
குடியரசுத் தலைவராக பொறுப்பு வகிக்கும் முன்பு, பிரணாப் முகர்ஜி நாட்டின் நிதியமைச்சராக இருந்தபோது அவரது தொலைபேசி எண்ணுக்கு வீட்டு லோன் வேண்டுமா? குறைந்த வட்டியில் தருகிறோம் என்று ஒரு அழைப்பு வந்த சம்பவம் நடந்தது. அப்போது இச்செய்தி மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது. அதேபோல் உலகப் பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானிக்கும் இது போன்ற அழைப்பு வந்தது.
நாட்டின் முன்னாள் நிதியமைச்சருக்கும், உலகப் பணக்காரருக்குமே இந்த நிலைமை என்றால் சாமான்ய மக்களின் நிலை? இதைக் கருத்தில் கொண்டுதான் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் டி.என்.டி. ( டூ நாட் டிஸ்டர்ப்) என்றொரு ஆப்ஷனைக் கொண்டு வந்தது. ஆனாலும் கூட புற்றீல்சல் போல் பெருகும் டெலிமார்க்கெடிங் நிறுவனங்களாலும், மோசடி செய்வதையே பிழைப்பாகச் செய்யும் ஆர்கனைஸ்டு க்ரைம் குற்றவாளிகளாலும் சாதாரண மக்கள் மிகுந்த துன்பத்துக்கு ஆளாகியிருக்கின்றனர். இதனால் கட்டுப்பாடற்ற டெலிமார்க்கெடிங் நிறுவனங்களுக்கு செக் வைக்கும் வகையில் மத்திய தொலைதொடர்பு அமைச்சகம் சில புதிய விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது.
அதன்படி வாடிக்கையாளர்களை ஏமாற்றும் வகையில், தொந்தரவு செய்யும் வகையில் அழைப்புகளையும், குறுந்தகவலையும் அனுப்பும்போது அபராதம் விதிக்கப்படும் என்று டெலி மார்க்கெட்டிங் நிறுவனங்களுக்குத் தொலைதொடர்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. புதிய விதிமுறையின்படி ஒரு டெலிமார்க்கெட்டிங் நிறுவனம் 10 முறைக்குள் இது போன்ற அத்துமீறலில் ஈடுபடால் ஆயிரம் ரூபாய் அபராதமும், 10லிருந்து 50 முறை வரையிலான அத்துமீறலில் ஈடுபட்டால் 5,000 ரூபாய் அபராதமும் 50-க்கு மேல் அத்துமீறினால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.
அதுமட்டுமல்லாது தொலைதொடர்பு நெட்வொர்க் மூலம் அரங்கேற்றப்படும் குற்றங்களைக் கண்காணிக்க டிஜிட்டல் இன்டலிஜென்ஸ் யூனிட் மற்றும் டெலிகாம் அனாலிஸ்ட் ஃபார் ஃப்ராட் மேனேஜ்மெண்ட் அண்ட் கன்ஸ்யூமர் புரொடக்ஷன் ஆகிய இரண்டு சிறப்புப் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளது. தொலைதொடர்பு அமைச்சகத்தின் கீழ் பணியாற்றவுள்ள இந்த டிஜிட்டல் புலனாய்வு அமைப்புகள் விதிமுறைகளை மீறும் டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்களைக் கண்காணிக்கும். அத்துமீறும் மொபைல் எண்களின் ஐ.எம்.இ.ஐ. கண்டறியப்பட்டு அவை ஆய்வுக்கு உட்படுத்தப்படும். இந்த சரிபார்ப்புக்காக சந்தேகத்திற்கிடமான எண்களுக்கு எச்சரிக்கை தகவல் அனுப்படும். அதன் பின்னரும் அத்துமீறல் தொடர்ந்தால், அந்த எண்கள் அனைத்தும் துண்டிக்கப்பட்டு தொடர்புடைய IMEI கள் சந்தேகத்திற்கிடமான பட்டியலில் வைக்கப்படும். சந்தேகத்திற்கிடமான பட்டியலில் உள்ள IMEI களுக்கு 30 நாட்களுக்கு அழைப்பு, எஸ்.எம்.எஸ். சேவையைக் கூட பயன்படுத்த முடியாது.
மேலும், வாடிக்கையாளர்கள் அடிக்கடி தங்களுக்குத் தொந்தரவு தரும் டெலிமார்க்கெடிங் நிறுவனங்கள் குறித்து புகார் அளிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. எல்லாவற்றையும் மீறி வாடிக்கையாளர்களை குறிவைக்கு டெலி மார்க்கெடிங் நிறுவனங்களின் தொலைதொடர்பு இணைப்புகளை வாங்குவதற்கு பயன்படுத்தப்பட்ட அடையாளம் மற்றும் முகவரி ஆதாரம் 2 வருட காலத்திற்கு ப்ளாக்லிஸ்ட் செய்யப்படும்.