Factcheck : ஒவ்வொரு ஆதார் அட்டைக்கும் இத்தனை லட்சம் கடனா? மத்திய அரசு தெரிவித்தது என்ன?
ஒவ்வொரு ஆதார் அட்டைக்கும் ரூபாய் 4.78 லட்சம் கடன் மத்திய அரசு வழங்குவதாக சமூக வலைதளங்களில் வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டது.
சமூக வலைதளங்கள் வளர்ச்சி அடைந்த பிறகு அதீத வளர்ச்சி அடைந்த அளவிற்கு, மோசடிக்காரர்களும் சமூக வலைதளங்கள் மூலம் ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், கடந்த சில நாட்களாக பலரின் செல்போன் எண்களுக்கும் ஆதார் அட்டைதாரர்கள் ஒவ்வொருவருக்கும் ரூபாய் 4.78 லட்சம் கடன் அளிக்கப்படும் என்று செய்திகள் வந்துள்ளது. கடனுதவி தேவைப்படுபவர்கள் மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள ஒரு இணையதள முகவரியும் அளிக்கப்பட்டிருந்தது.
ஒவ்வொரு ஆதார் அட்டைக்கும் என்ற சுமார் 5 லட்சம் கடன் உதவி என்ற தகவல் தீயாய் பரவியதையடுத்து, மத்திய அரசைத் தொடர்பு கொண்டபோது இது போலியான தகவல் என்றும், மோசடி கும்பலின் செயல் என்றும் தெரியவந்துள்ளது. மத்திய அரசின் பி.ஐ.பி. அளித்துள்ள விளக்கத்தில், அனைத்து ஆதார் அட்டைதாரர்களுககும் ரூபாய் 4.78 லட்சம் கடன் கொடுக்க இருப்பதாக செய்திகள் உலா வருகிறது. இது போலியானது. இந்த செய்தியை யாருக்கும் பார்வர்டு செய்யக்கூடாது. உங்களது நிதிவிவகார தகவல்கள் மற்றும் தனிப்பட்ட தகவல்களை யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்று அறிவித்துள்ளனர்.
சமூக வலைதளங்களில் இதுபோன்று பரவும் கடன் உதவி இணையதளங்கள் மூலம் மோசடி செய்யும் கும்பல் பெயர், வங்கிக்கணக்கு எண், ஆதார் எண், பான் எண் போன்றவற்றின் விவரங்களை சேகரித்து மக்களின் வங்கிக்கணக்கில் இருக்கும் பணங்களை மோசடி செய்து எடுக்கின்றன. அதேசமயத்தில் இந்த தகவல்களை வைத்து நூதன முறையிலும் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மத்திய அரசின் சார்பில் கடனுதவி போன்ற நிதி தொடர்பான குறுஞ்செய்திகள் பெறப்பட்டால், அவற்றில் சந்தேகம் இருந்தால் அந்த தகவல் உண்மையானதா? அல்லது போலியானதா? என்பதை கண்டறிய http://factcheck.pib.gov.in என்ற இணையதளம் மூலமாக தெரிந்து கொள்ளலாம். இல்லாவிட்டால் 8799711259 என்ற வாட்ஸ் அப் எண் மூலமாக அறிந்து கொள்ளலாம். pibfactcheck@gmail.com என்ற இ மெயில் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம்.
சமூக வலைதளங்கள் மூலம் மோசடியில் ஈடுபடும் கும்பல்கள் நாள்தோறும் நூதன முறையில் ஈடுபட்டு வருவதால் அறிமுகமில்லாத நபர்கள், தொலைபேசியில் பேசுபவர்கள், வங்கியில் இருந்து தொடர்பு கொள்வதாக கூறுபவர்களிடம் உங்களது வங்கிக்கணக்கு விவரங்களை, ஆதார் எண்ணை அளிப்பதை தவிர்ப்பது நல்லது. அதேபோல, மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலம் வரும் செய்திகளில் இடம்பெற்றுள்ள லிங்க்குகளில் கிளிக் செய்வதை தவிர்த்தால் நீங்கள் மோசடிக்கு ஆளாக்கப்படுவதை தவிர்க்கலாம்.
மேலும் படிக்க : தமிழகத்தை போல் புதுச்சேரியில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 உதவித்தொகை - மக்கள் வரவேற்பு
மேலும் படிக்க : India Economic Growth: தொடரும் உலகளாவிய அதிர்வுகள்...நீடித்த வளர்ச்சியில் இந்தியா பொருளாதாரம்...ரிசர்வ் வங்கி விளக்கம்