ஆர்டர் செய்ததோ ரிமோட் கார்.. பெற்றதோ பிஸ்கெட் பாக்கெட்: மன்னிப்புக்கேட்ட அமேசான்!
டெல்லியில் உள்ள பகவான்நகர் ஆசிரமத்தைச் சேர்ந்த விக்ரம் புரகோஹெய்ன் என்பவர், தன்னுடைய குழந்தைக்கு ஆசையாய் ரிமோட் கார் ஒன்றினை அமேசானில் ஆர்டர் நிலையில் பார்லி ஜி பிஸ்கெட்டினை பெற்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமேசானில் ஆர்டர் செய்த ரிமோட் காருக்கு பதில் பார்லி ஜி பிஸ்கெட் பாக்கெட்டினை பெற்றுள்ளார் டெல்லியை சேர்ந்த விக்ரம் புரகோஹெய்ன்.
இன்றைய தொழில்நுட்பவளர்ச்சிக்கு ஏற்ப மக்கள் தங்களின் வாழ்வியல் முறைகளையும் மாற்றிக்கொண்டு வருகின்றனர். முன்பெல்லாம் ஏதாவது ஆடை, மளிகைப்பொருள்கள், வீட்டுத்தேவையான பல பொருட்களை எல்லாம் நேரடியாக சென்று அதன் தரம் பார்த்து வாங்குவோம். ஆனால் தற்போதுள்ள சூழலில் அத்தனையும் தலைகீழாக மாறிவிட்டது. கையில் ஸ்மார்ட்போன் இருந்தால் போதும், விதவிதமாக நமக்கு பிடித்தப் பொருட்களை எல்லாம் இ- காமர்ஸ் நிறுவனங்களின் மூலம் வின்டோ ஷாப்பிங் செய்து விடலாம். குறிப்பாக இந்த ஊரடங்கு காலத்தில் இதன் பயன்பாடு ஏற்கனவே இருந்தமையை விட மேலும் அதிகரித்துவிட்டது.
ப்ளிப்கார்ட், அமேசான் போன்ற பல இ- காமர்ஸ் தளங்களில் நாம் மொபைல்போன் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை ஆர்டர் செய்திருந்த நிலையில் அதற்கு பதிலாக மாற்றுப்பொருட்கள் மற்றும் செங்கற்கள் எல்லாம் வந்த செய்தியினை அறிந்திருக்கிறோம். இப்படி தான் டெல்லியில் ஒரு நிகழ்வு தற்போது அரங்கேறியுள்ளது.
டெல்லியில் உள்ள பகவான்நகர் ஆசிரமத்தைச் சேர்ந்த விக்ரம் புரகோஹெய்ன் என்பவர், தன்னுடைய குழந்தைக்கு ஆசையாய் ரிமோட் கார் ஒன்றினை அமேசானில் ஆர்டர் செய்துள்ளார். குழந்தைகள் தன்னுடைய கார் எப்பொழுது வரும் என்று எதிர்ப்பார்த்த நிலையில் தான் அமேசான் பார்சலை அவர்கள் பெற்றுள்ளனர். ஆசையுடன் பிரித்துப்பார்த்தால் அதில் ரிமோர்ட் கார்க்கு பதிலாக பார்லி ஜி பிஸ்கெட் பாக்கெட் ஒன்று இருந்ததைக்கண்டு அதிச்சியடைந்துள்ளனர்.
இதனையடுத்து விக்ரம், தனது பேஸ்புக் பக்கத்தில், “அமேசானில் ஆர்டர் செய்ததோ விளையாடுவதற்கான பொம்மை ரிமோட் கார்- வந்ததோ பார்லி ஜி பிஸ்கெட், எனவும் இப்ப நான் இதற்கு டீ தயார் செய்ய வேண்டி உள்ளது“ என நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார். இந்த பதிவு இணைய வாசிகளிடம் பெரும் கவனத்தைப்பெற்றதோடு வைரலாகியும் வருகிறது. மேலும் நீங்கள் செங்கல் பெறவில்லையே? அதுவரைக்கும் மகிழ்ச்சி என்பது போன்ற கமென்டுகளையும் மறுபதிவிட்டு வருகின்றனர் நெட்டிசன்கள்.
மேலும் ஆர்டர் செய்த பொருளுக்கு பதில் வேறொரு பொருளை டெலிவரி செய்தது குறித்து அமேசானில் புகார் பதிவு செய்துள்ளார் விக்ரம். இதனையடுத்து அமேசான் நிறுவனம் இச்செயலுக்காக மன்னிப்பு கேட்டதாகவும், இதற்கான பணத்தினை திருப்ப செலுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, தற்போது இ- காமர்ஸ் நிறுவனங்களின் பெரும்பாலான ஆர்டர்களில் இது மாதிரியாக பார்சல்கள் மாறி வருவது என்பது வழக்கமான ஒன்றாக உள்ளது. இருந்த போதும் மக்கள் இதில் ஆர்டர் செய்யும் பழக்கத்தினை நிறுத்துவதில்லை, அந்த அளவிற்கு மக்களிடம் இதன் மீதான மோகம் அதிகரித்துள்ளது.