Gold Investment: கடந்த சில நாட்களாக குறையும் தங்கம்... இது தான் வாங்கும் நேரமா? விரிவான அலசல்!
தங்கம் என்பது சர்வதேச கரன்ஸி. ஒரு சிறு பிராந்தியத்தில் நடக்கும் விஷயங்களால் தங்கத்தின் விலையில் ஏற்றத்தையோ இறக்கத்தையோ பார்க்க முடியாது. சர்வதேச சூழல்களால் மட்டுமே தங்கம் விலையில் மாற்றம் நடக்கிறது.
முகூர்த்த மாதம் தொடங்கியாச்சி, அதனால் இனி தங்கம் ஏறும்
பண்டிகை சீசன் தொடங்கியாச்சி, அதனால் இனி தங்கம் ஏறும்
விலைவாசி ஏறுது, அதனால் தங்கம் ஏறும்.
இதுபோன்ற உரையாடல்களை தங்கம் வாங்கும்போது கேட்டிருக்கலாம். உங்களில் பலர் இதைவிட `பலே காரணங்களை’ கூட கேட்டிருக்க கூடும்.
ஆனால் தங்கம் என்பது சர்வதேச கரன்ஸி. ஒரு சிறு பிராந்தியத்தில் நடக்கும் விஷயங்களால் தங்கத்தின் விலையில் ஏற்றத்தையோ இறக்கத்தையோ பார்க்க முடியாது. சர்வதேச சூழல்களால் மட்டுமே தங்கம் விலையில் மாற்றம் நடக்கிறது.
2020-ம் ஆண்டு தங்கத்தின் விலை உயர்ந்தற்கும் சர்வதேச காரணம்தான். கோவிட் சர்வதேச அளவில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்த போகிறது. அதனால் பொருளாதாரம் மோசமாக பாதிப்படையும். அதனால் மாற்று நாணயமாக கருதப்படுகிற தங்கத்தின் விலை வேகமாக உயர்ந்தது. கோவிட் குறித்த அச்சம் குறைவதால் தங்கத்தின் விலையும் குறைகிறது. தற்போது தங்கம் விலை குறைந்திருக்கிறது.
ஒரு வீடு வாங்குகிறோம், அதன் மூலம் வாடகை வருமானம் வருகிறது. வங்கியில் டெபாசிட் செய்கிறோம். அதன் மூலம் வருமானம் வருகிறது. இந்த வருமானம் பணவீக்கத்துக்கு ஏற்ப இருக்கிறதா என்பது வேறு விவாதம். வருமானம் வருகிறது என்பது உண்மை. ஆனால் தங்கம் என்பது unproductive asset. அதன் மீது வருமானம் இருக்காது. ( இதனை மாற்ற வேண்டும் என்பதற்காக தங்க கடன் பத்திரங்களில் முதலீடு செய்யும்போது 2.5 சதவீத வட்டி வழங்க முடிவெடுக்கபட்டது. )
தங்கத்தின் விலை உயர்வு மட்டுமே நமக்கு லாபம் தரும். இதுவரை உயர்ந்த தங்கம் தற்போது சில தினங்களாக சரிந்து வருகிறது ஏன் எனும் கேள்வி இயல்பாக எழும்.
சரிவு ஏன்?
கடந்த வாரத்தில் அமெரிக்காவில் வேலை வாய்ப்பு குறித்த தகவல்கள் வெளியாகி யுள்ளன. அதில் பல புதிய வேலை வாய்ப்புகள் உருவாகப் பட்டிருக்கின்றன. அதனால் பொருளாதாரம் வளர்ச்சி பாதையை நோக்கி செல்வதற்கான அறிகுறிகள் தொடங்கி இருக்கின்றன. இதனால் டாலர் பலம் அடைந்திருக்கிறது. அதனால் கடன் பத்திரங்கள் உயரத்தொடங்கி உள்ளன. எப்போதெல்லாம் டாலர் பலம் அடைகிறதோ அப்போதெல்லாம் தங்கம் விலை சரிவடையும். அதாவது தங்கத்தில் இருந்த முதலீடுகளை டாலரை நோக்கி செல்லத்தொடங்கி இருக்கின்றன.
இந்த நிலையில் குறுகிய காலத்தில் இதே அளவில்தான் தங்கத்தின் விலை நிலவரம் இருக்கும் என்றும் நீண்ட கால நோக்கத்துகாக வாங்குபவர்கள் தற்போதைய சரிவினை பயன்படுத்தி முதலீடு செய்யலாம் என தெரிவித்திருக்கிறார்கள்.
சர்வதேச அளவில் ஒரு அவுன்ஸ் தங்கம் 1,750 டாலர் என்னும் அளவில் வர்த்தகமாகி வருகிறது. டெக்னிக்கல் அனாலிசஸ்படி 1,680 டாலருக்கு கீழே தங்கத்தின் விலையில் சரிவு இருக்காது என்றே வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். அதே சமயம் அடுத்த இரு மாதத்துக்கு இதே நிலவரத்தில் ஏற்ற இறக்கத்தில் தங்கத்தின் விலை இருக்கும் என கணித்திருக்கிறார்கள்.
எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம்?
தங்கத்தை பயன்படுத்துவதற்காக வாங்குவது என்பது வேறு. ஆனால் முதலீடு என நினைத்து தங்கத்தை நகையாக வாங்கி குவிக்க வேண்டாம் என்பதே பெரும்பாலான நிதி ஆலோசகர்களின் கருத்து. தங்கம் ஒரு சர்வதேச நாணயமாக ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் மொத்த முதலீட்டையும் தங்கத்தில் வைத்துக்கொள்ள வேண்டாம். ஒருவரின் மொத்த முதலீட்டில் 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை தங்கம் இருக்கலாம். நீங்கள் மிகவும் கன்சர்வேட்டிவ் நபராக இருந்தால் இன்னும் சில சதவீதம் கூட உயர்த்திக்கொள்ளலாம். ஆனால் 20 சதவீதத்துக்கு மேல் தேவையில்லை.
ஒரு காலத்தில் பவுன் 4000 இருந்தது. தற்போது 36000 விற்கிறதே என்று தோன்றும். ஆனால் ஆண்டு வருமானமாக பார்த்தால் இதில் பெரிய வளர்ச்சி இருக்காது. இதைவிட ரியல் எஸ்டேட், பங்குகள், ஏன் டெபாசிட்கள் கூட அதிக ஆண்டு வருமானத்தை கொடுத்திருக்கும். அதனால் ஆண்டுக்கு எவ்வளவு வருமானம் என்பதை பொறுத்துதான் முதலீட்டு முடிவுகள் இருக்க வேண்டும்.
ஒரு வேளை கோவிட் விளைவுகள் அதிகமாகும்பட்சத்தில் தங்கத்தின் விலையில் பெரிய ஏற்றம் இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. தங்கத்தில் முதலீடு செய்யலாம் ஆனால் தங்கத்தில் மட்டுமே மொத்த முதலீடும் இல்லாமல் இருப்பது நல்லது.
SP Velumani: எஸ்.பி.வேலுமணியின் வங்கிக் கணக்கு முடக்கம் - லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை!