Tata Punch: டாடா பஞ்ச் மாடல் கார் வாங்க திட்டமா? வரப்போகிறது ஃபேஸ்லிப்ட், புதிய அம்சங்கள், மாற்றங்கள் என்ன?
Tata Punch: டாடா நிறுவனத்தின் பிரபல எஸ்யுவிக்களில் ஒன்றான பஞ்ச் மாடலுக்கான ஃபேஸ்லிப்ட், அடுத்த ஆண்டு (2025) வெளியாகும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
Tata Punch: டாடா நிறுவனத்தின் பஞ்ச் மாடலுக்கான ஃபேஸ்லிப்டானது வடிவமைப்பு வேறுபாடுகள் தவிர, அம்சங்களிலும் மின்சார வேரியண்டிலிருந்து மாறுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025ல் டாடா பஞ்ச் ஃபேஸ்லிப்ட் மாடல்:
கார் உற்பத்தி நிறுவனங்களால் அறிமுகம் செய்யப்படும் ஒவ்வொரு புதிய மாடலும், 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மேம்படுத்தப்படுகிறது. இதனை ஃபேஸ்லிப்ட் என குறிப்பிடுப்படுவது உண்டு. அதில் வெளிப்புற தோற்றம் தொடங்கி, உட்புறத்தில் உள்ள தொழில்நுட்ப அம்சங்கள் வரை பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்படும். இந்நிலையில் தான் டாடா நிறுவனத்தின் சிறிய எஸ்யுவி மாடலான, பஞ்சின் மின்சார வேரியண்ட் அண்மையில் இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பேசிய டாடா மோட்டார்ஸின் பயணிகள் வாகனப் பிரிவு எம்.டி., ஷைலேஷ் சந்திரா, “பஞ்ச் கார் மாடல் அக்டோபர் 2021-ல் தான் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியும். வழக்கமான ஃபேஸ்லிஃப்ட் காலம் மூன்று ஆண்டுகள் ஆகும். எனவே, 2025 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் அல்லது அதற்கு பிறகுதான் இன்ஜின்களை கொண்ட மாடலுக்கான ஃபேஸ்லிஃப்டை எதிர்பார்க்கலாம்” என தெரிவித்தார்.
டாடா பஞ்ச் ஃபேஸ்லிஃப்ட்: என்ன எதிர்பார்க்கலாம்?
அண்மையில் வெளியான நெக்ஸான் மற்றும் ஹாரியர் ஃபேஸ்லிஃப்ட்களில் இருந்ததைப் போலவே , டாடா மோட்டார்ஸ் தனது புதிய மாடல்களுக்கு ஏற்ப பஞ்ச் எஸ்யூவியின் ஸ்டைலை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம். முன்பக்க பம்பர் மற்றும் கிரில் மாற்றங்கள், முகப்பு விளக்குகள் மற்றும் பானட் ஆகியவற்றில் மாற்றங்களுடன் சிறிய எஸ்யூவி புதியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Nexon மற்றும் Nexon EV ஃபேஸ்லிஃப்டைப் போலவே, சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட Punch EV இலிருந்து பெட்ரோலில் இயங்கும் பஞ்ச் மாடலும் வேறுபட்ட ஸ்டைலிங் பிட்களை கொண்டிருக்கும். மேலும் பஞ்ச் பெட்ரோல் மற்றும் EV பதிப்புகளுக்கு இடையேயான தொழில்நுட்ப அம்சங்களிலும் வேறுபாடு இருக்கும் என டாடா தரப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Tata Nexon EV vs Nexon ICE: அம்ச வேறுபாடு:
Nexon மாடலின் இன்ஜின் மற்றும் மின்சார எடிஷன் இடையே உள்ள வேறுபாடுகளைப் பார்த்தால், Nexon EV ஆனது ஒரு சில பிரத்யேக அம்சங்களைப் பெறுகிறது. அதில் உள்ள 12.3-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மிக முக்கியமானது. மறுபுறம், ICE Nexon இன் மிகப்பெரிய திரை 10.25-இன்ச்சில் உள்ளது. OTT இயங்குதளங்களை ஸ்ட்ரீம் செய்ய டாடாவின் புதிய Arcade.ev ஆப்ஸ் தொகுப்புடன் EV வருகிறது.
கூடுதலாக, Nexon EV ஆனது ICE Nexon இல் உள்ள ஹேண்ட் பிரேக்கிற்கு மாறாக, ஆட்டோ ஹோல்டுடன் கூடிய எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக்குடன் பொருத்தப்பட்டுள்ளது. EV ஆல்-வீல் டிஸ்க் பிரேக்குகளைப் பெற்றாலும், ICE வகைகளில் முன்பக்கத்தில் மட்டுமே டிஸ்க்குகள் கிடைக்கும். Nexon EV கூடுதலாக முன் LED டேடைம் ரன்னிங் லேம்ப்கள், OTA மேம்படுத்தல்கள், இணைக்கப்பட்ட கார் அம்சங்கள் மற்றும் பஞ்சர் ரிப்பேர் கிட் ஆகியவற்றை கொண்டுள்ளது. இரண்டு பவர் ட்ரெய்ன்களின் உத்தரவாதமும் கூட வித்தியாசமானது - டாடா மோட்டார்ஸ் ICE Nexon மீது 3-ஆண்டுக்கு 1,00,000 கிலோ மீட்டர் உத்தரவாதத்தை வழங்குகிறது. அதே நேரத்தில் Nexon EV 3 ஆண்டுகளுக்கு 1,25,000 கிலோ மீட்டர் உத்தரவாதத்தைப் பெறுகிறது.
பவர்டிரெயினில் மாற்றமா?
பவர்டிரெய்னில் மாற்றங்கள் வரும் என எதிர்பார்க்கப்படவில்லை. பஞ்ச் தற்போது 86hp மற்றும் 113Nm க்கு 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் விற்பனை செய்ய்யப்படுகிறது. இது 5- ஸ்பீடு மேனுவல் அல்லது AMT கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஒரு CNG விருப்பமும் உள்ளது.