ROYAL ENFIELD: விற்பனைக்கு வந்தது ராயல் என்ஃபீல்ட் சூப்பர் மீட்டியார் 650 பைக்.. விலை இவ்வளவா?
ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் சூப்பர் மீட்டியார் 650 பைக் மாடலின் விற்பனை இந்திய சந்தையில் தொடங்கியுள்ளது.
பயனாளர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்து இருந்த ராயல் என்ஃபீல்ட் சூப்பர் மீட்டியர் 650 மாடல் வாகனம், கடந்த ஆண்டு இத்தாலியில் நடைபெற்ற EICMA 2022 கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது. அதைதொடர்ந்து கோவாவில் ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் சார்பில் நடைபெற்ற 2022 ரைடர் மேனியா நிகழ்ச்சி மூலம் சூப்பர் மீட்டியர் 650 ரக வாகனம் இந்திய சந்தையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. அந்நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மட்டும், சூப்பர் மீட்டியர் 650 வாகனத்திற்கு முன்பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டு, அதற்கான கட்டணமாக ரூ.10,000 வசூலிக்கப்பட்டது. இந்நிலையில், சூப்பர் மீட்டியர் 650 வாகனம் இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
விலை விவரம்:
ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் மூன்றாவது பிரீமியம் மேட்டார் சைக்கிளான, சூப்பர் மீடியோர் 650 மாடலின் ஆஸ்ட்ரல் வேரியண்ட் விலை ரூ. 3 லட்சத்து 48 ஆயிரத்து 900 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் இண்டர்ஸ்டெல்லார் வேரியண்டின் விலை ரூ. 3 லட்சத்து 63 ஆயிரத்து 300 எனவும், செலஸ்டியல் வேரியண்டின் விலை ரூ. 3 லட்சத்து 78 ஆயிரம் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
சூப்பர் மீட்டியார் 650 இன்ஜின் விவரங்கள்:
இதில் உள்ள 648cc பாரலல்லெல் டிவின் இன்ஜின் காரணமாக, 47 குதிரைத்திறனும், 52 Nm இழுவிசை சக்தியையும் சூப்பர் மீடியர் 650 பைக் பெற்றுள்ளது. இதே யூனிட் இண்டர்செப்டார் 650 மற்றும் காண்டினெண்டல் ஜிடி 650 போன்ற மாடல்களிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸும் இடம்பெற்றுள்ளது. ஒரே நேரத்தில் 15.7 லிட்டர் எரிபொருளை நிரப்ப முடியும் எனவும், லிட்டருக்கு 25 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூப்பர் மீட்டியார் 650 வடிவமைப்பு:
இதன் சேசிஸ் போன்றவற்றில் பல்வேறு புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில், USD போர்க், முழுமையாக எல்.ஈ.டி முகப்பு விளக்கு, டிரிப்பர் நேவிகேஷன் உள்ளிட்ட அம்சங்களை கொண்ட முதல் ராயல் என்ஃபீல்ட் வாகனம் எனும் பெருமையையும் இது பெற்றுள்ளது. பெரிய டிரான்ஸ்பேரண்ட் வைசர், ஸ்ப்லிட் சீட் மற்றும் ஒற்றை சீட் செட்டப் வேரியண்டிற்கு ஏற்ப வழங்கப்படுகிறது. இத்துடன் பேக்ரெஸ்ட், க்ரோம் அம்சங்களை கொண்டுள்ளது. ப்ளூடூத் கனெக்டிவிட்டி மற்றும் யுஎஸ்பி சார்ஜிங் போர்ட்டும் வழங்கப்பட்டுள்ளது.
7 நிறங்களில் விற்பனை:
ஆஸ்ட்ரல் பிளாக், இண்டர்ஸ்டெல்லார் கிரே, இண்டர்ஸ்டெல்லார் கிரீன், ஆஸ்ட்ரல் புளூ, ஆஸ்ட்ரல் கிரீன், செலஸ்டியல் புளூ மற்றும் செலஸ்டியல் ரெட் என ஏழுவிதமான நிறங்களில் கிடைக்கிறது. 241 கிலோ எடை கொண்டதன் மூலம், அதிக எடைகொண்ட ராயல் என்பீல்ட் வாகனம் இதுதான் என கருதப்படுகிறது.