Royal Enfield: ராயல் என்ஃபீல்ட் பைக் வாங்க முடியலன்னு கவலையா? வாடகைக்கு எடுத்தே பயன்படுத்தலாம்.. எப்படி தெரியுமா?
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது பைக்குகளை வாடகைக்கு விடும் திட்டத்தை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது பைக்குகளை வாடகைக்கு விடும் திட்டத்தை இந்தியாவின் 26 நகரங்களில் அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது.
ராயல் என்ஃபீல்ட்:
ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களின் தேவைகளை உணர்ந்து தொடர்ந்து, பல்வேறு புதிய மாடல் இருசக்கர வாகனங்களை உற்பத்தி செய்கிறது. காலத்திற்கேற்றவாறு தொடர்ந்து தன்னை அப்டேட் செய்து வருவதே, ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் வெற்றிக்கான மிகப்பெரிய காரணமாகும். இந்நிலையில் தான், தனது நிறுவனத்தின் வாகனங்களை மேலும் பிரபலமாக்கும் நோக்கில், வாகனங்களை வாடகைக்கு விடும் திட்டத்தை அந்நிறுவனம் முன்னெடுத்துள்ளது.
வாடகைக்கு விடும் திட்டம்:
அதன்படி, ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் இந்தியா முழுவதும் 26 நகரங்களில் தனது பைக்குகளை வாடகைக்கு விடுவதற்காக, 40 க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள் வாடகை ஆபரேட்டர்களுடன் கூட்டு சேர்ந்துள்ளது. இதுதொடர்பான தகவலின்படி, ரெண்டல் வீல், குமோ பைக், கூமகட் பைக், வைல்ட் அட்வென்ச்சர் மற்றும் பாலாஜி டூர்ஸ் ஆகியவற்றுடன் ராயல் என்பீல்ட் நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அகமதாபாத், மும்பை, சண்டிகர், தர்மஷாலா, லே, மணாலி, ஹரித்வார், ரிஷிகேஷ் மற்றும் இந்தியாவில் உள்ள பிற முக்கிய இடங்களில், 300க்கும் மேற்பட்ட ராயல் என்ஃபீல்ட் மோட்டார்சைக்கிள்களை வாடகைக்கு பெறலாம்.
வாடகைக்கு எடுப்பது எப்படி?
ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் ராயல் என்ஃபீல்ட் வாடகை இணையதளத்திற்கு சென்று பொதுமக்கள் தங்களுக்கான வாகனத்தை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம். பயனர்கள் சேருமிடத்தைத் தேர்ந்தெடுத்து, மாடல், வயது, வாடகை விலை மற்றும் பயணித்த தூரம் ஆகியவற்றின் அடிப்படையில் பில்டர் செய்து மோட்டார் சைக்கிள்களின் பட்டியலிலிருந்து தேர்வு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோக்கம் என்ன?
வாகனங்களை வாடகைக்கு விடும் ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் திட்டம் தொடர்பாக பேசிய aந்த நிறுவனத்தின் மூத்த பிராண்டு அலுவலர் மோஹித் தார் ஜெயல், “உண்மையான மோட்டார்சைக்கிள் அனுபவத்தை வழங்க வேண்டும் என்ற எங்களின் எண்ணத்தை நிறைவேற்றியதில் எங்களது மோட்டார்சைக்கிள் வாடகை நிறுவனங்கள், சுற்றுலா நிறுவனங்கள் மற்றும் மெக்கானிக்குகள் மிக முக்கிய பங்கு வகித்துள்ளனர். எங்களது முயற்சிகளுடன், இவர்கள் எங்களது மோட்டார்சைக்கிள்களை நீண்டதூரம் பயணிக்க செய்துள்ளனர். ராயல் என்ஃபீல்ட் ரென்டல்ஸ் திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் இந்தியா முழுக்க எங்கு வேண்டுமானாலும் மோட்டார்சைக்கிளை வாடக்கைக்கு எடுத்துக் கொள்ள முடியும். இதோடு மோட்டார்சைக்கிள் வாடகை நிறுவனங்களுக்கு நாங்கள் வழங்கி வரும் சேவையை மேலும் அதிகப்படுத்திக் கொள்ளவும் இது உதவியாக இருக்கும்” என தெரிவித்துள்ளார்.