Mercedes Benz: பென்ஸ் நிறுவனத்தின் நான்காவது எலெக்ட்ரிக் கார்.. ஒருமுறை சார்ஜ் செய்தால் 423 கி.மீ., ரேன்ஜ்..
சொகுசு கார் நிறுவனமான மெர்சிடஸ் பென்ஸ் தனது புதிய எலெக்ட்ரிக் காரை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனத்தின் புதிய கார்:
மலிவு விலையில் பல எலெக்ட்ரிக் கார்கள் அடுத்தடுத்து இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டாலும், சொகுசு கார்கள் மீதான ஈர்ப்பும் வாடிக்கையாளர்கள் இடையே குறைந்தபாடில்லை. இதன் காரணமாகவே, பல சொகுசு கார் நிறுவனங்களும் அடுத்தடுத்து புதிய மாடல் கார்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றன. அந்த வரிசையில் சொகுசு கார்கள் சந்தையில் முக்கிய பங்கு வகிக்கும் மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம், இந்தியாவில் தனது நான்காவது எலெக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. EQB என பெயரிடப்பட்டுள்ள புதிய மெர்சிடிஸ் பென்ஸ் கார் மாடல், 7 பேர் அமரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
@MercedesBenzInd #EQB & #GLB make their Indian debut! A 7-seater SUV..also known as the Baby #GLS 😉 They win you over with their performance and practicality.. A special shoutout to the #EQB for offering such a splendid range on our drive in #Kodaikanal! @ShekharDC pic.twitter.com/R4J9AHOL1V
— Vikram Gour (@VikramGour) December 2, 2022
பேட்டரி விவரங்கள்:
புதிய மெர்சிடிஸ் பென்ஸ் EQB மாடலில் 66.4 கிலோவட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு உள்ளது. அத்துடன் இணைக்கப்பட்டு இருக்கும் எலெக்ட்ரிக் மோட்டார் 225 குதிரைகளின் சக்தி மற்றும் 390 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறனை பெற்றுள்ளது. ஒருமுறை இந்த காரை முழுமையாக சார்ஜ் செய்தால் 423 கிலோமீட்டர் வரை செல்லும் என மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. AC மற்றும் DC சார்ஜிங் வசதியும் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளது.
EQB மாடல் சிறப்பம்சங்கள்:
முழுமையான எலெக்ட்ரிக் மாடலான மெர்சிடிஸ் பென்ஸ் EQB ஸ்வெப்ட்பேக் எல்.ஈ.டி முகப்பு விளக்குகள், 18 இன்ச் அலாய் வீல்கள், பவர்டு டெயில்கேட், வயர்லெஸ் சார்ஜிங், யுஎஸ்பி டைப் சி போர்ட்கள், பிளான்க்டு-ஆஃப் கிரில், ஸ்ப்லிட் ரக எல்.ஈ.டி பின்புற விளக்குகள், பானரோமிக் சன்ரூஃப், 10.25 இன்ச் டச் ஸ்கிரீன் வசதி கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் ஆம்பியண்ட் லைட்டிங் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.
விலை விவரங்கள்:
7 பேர் அமரும் வகையிலான மெர்சிடஸ் பென்ஸின் EQB கார் மாடலின் விலை இந்திய சந்தையில் 74 லட்சதத்து 50 ஆயிரம் ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. தற்போதைய சூழலில் இந்திய சந்தையில் 7 இருக்கைகள் உடன் SUV மாடலில் ரூ.50 முதல் 80 லட்சம் மதிப்பில் உள்ள ஒரே கார், லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் மட்டுமே. மற்ற நிறுவனங்களிடமிருந்து இந்த பிரிவில் நேரடி போட்டியாக எந்த மாடலும் இல்லாதது, மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனத்திற்கு சாதகமாக கருதப்படுகிறது.
GLB கார் மாடல் விலை விவரம்:
முன்னதாக, நீண்ட காலமாக இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவரப்படாமல் இருந்த பென்ஸ் நிறுவனத்தின் மற்றொரு மாடலான, GLB எலெக்ட்ரிக் காரும் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதன் தொடக்க விலை ரூ. 63 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் என மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.