Maruti XL6 : மாருதி சுஸுகி XL6 ஃபேஸ்லிஃப்ட்: ஏர் வெண்டிலேஷன் அறிமுகம்… நாளை வெளியாகும் காரின் மீது எகிறும் எதிர்பார்ப்பு!
விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. நாளை விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்போதுதான் விலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் 2022 மாருதி சுஸுகி XL6 Facelift கார் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் எம்பிவி ரகத்தை சேர்ந்த கார்களில் ஒன்று. இதன் 2022 ஃபேஸ்லிஃப்ட் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்ய மாருதி சுஸுகி நிறுவனம் தயாராகி உள்ளது. பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள 2022 மாருதி சுஸுகி XL6 ஃபேஸ்லிஃப்ட் கார் ஏப்ரல் 21ம் தேதி, அதாவது நாளை விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என மாருதி சுஸுகி நிறுவனம் அறிவித்துள்ளது. இந்திய சந்தையில் கியா கேரன்ஸ் மற்றும் மஹிந்திரா மராஸ்ஸோ போன்ற கார்களுடன், 2022 மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 ஃபேஸ்லிஃப்ட் போட்டியாக பார்க்கப்படுகின்றது. அத்துடன் மாருதி சுஸுகி எர்டிகா காருக்கும், இது விற்பனையில் சவால் அளிக்கும். 2022 மாருதி சுஸுகி எர்டிகா வெகு சமீபத்தில்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது 2022 மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 ஃபேஸ்லிஃப்ட் காரும் இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்படவுள்ளது. 2022 மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 ஃபேஸ்லிஃப்ட் கார் தொடர்பான நிறைய தகவல்கள் ஏற்கனவே வெளியாகி விட்டன. ஆனால் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. நாளை விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்போதுதான் விலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய எக்ஸ்எல்6 காரின் மிகப்பெரிய மாற்றம் பானெட்டிற்கு கீழேதான் செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட எர்டிகா காரை போல், 2022 எக்ஸ்எல்6 காரிலும், மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய 1.5 லிட்டர், ட்யூயல் ஜெட், ட்யூயல் விவிடி, K15C பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 6,000 ஆர்பிஎம்மில் 101.6 பிஹெச்பி பவரையும், 4,400 ஆர்பிஎம்மில் 136.8 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜினுடன் 2 கியர் பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படும். இதில், 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஒன்றாகும். மற்றொன்று, புதிய 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆகும். அத்துடன் பேடில் ஷிஃப்டர்கள் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. மாருதி சுஸுகி நிறுவனம் புதிய எக்ஸ்எல்6 காரின் டீசர்களை ஏற்கனவே வெளியிட்டுள்ளது. இதன் மூலம் புதிய எக்ஸ்எல்6 கார், புதிய க்ரில் அமைப்பை பெற்றிருக்கும் என்பது தெரியவருகிறது. அத்துடன் முன் மற்றும் பின் பக்க பம்பர்களும் மாற்றியமைக்கப்பட்டிருக்கும். அத்துடன் 16 இன்ச் ட்யூயல்-டோன் அலாய் வீல்களையும் இந்த கார் பெற்றிருக்கும். அதே நேரத்தில் 2022 எர்டிகா காரில் வழங்கப்பட்டுள்ள புத்தம் புதிய புதிய இன்ஃபோடெயின்மெண்ட் டிஸ்ப்ளே, 2022 எக்ஸ்எல்6 காரிலும் வழங்கப்பட்டுள்ளது. இந்த 7 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராடு ஆட்டோ சப்போர்ட் வசதிகளுடன் வழங்கப்படுகிறது.
இவற்றுடன் 360 டிகிரி கேமரா வசதியையும் இந்த கார் பெற்றுள்ளது. எனவே பார்க்கிங் செய்வது எளிமையாக இருக்கும். அத்துடன், 4 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோகிராம், ஹில் ஹால்டு அஸிஸ்ட், இபிடி உடன் ஏபிஎஸ், ரியர் பார்க்கிங் சென்சார்கள், ஓவர் ஸ்பீடு அலர்ட், சீட் பெல்ட் ரிமைண்டர் போன்ற வசதிகளையும் 2022 மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 ஃபேஸ்லிஃப்ட் கார் பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவை அனைத்தையும் விட முக்கியமானது என்னவென்றால் இந்த காரில் முதன்முறையாக முன்புற சீட்டில் ஏர் வேண்டிலேஷன் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் வெகுதூரம் பயணிப்பவர்களுக்கு, ஓட்டுனர்களுக்கு முதுகுவலி, முதுகு சூடு ஆகியவை வராமல் தடுக்க முடியும் என்று நம்பப்படுகிறது. இது கார் விரும்பிகள் மற்றும் டிரைவர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி உள்ளது.
இதுபோன்ற காரணங்களால்தான், 2022 மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 ஃபேஸ்லிஃப்ட் கார் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. 2022 மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 ஃபேஸ்லிஃப்ட் காருக்கு முன்பதிவுகளை ஏற்கும் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டன. தற்போது முன்பதிவு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள் 11 ஆயிரம் ரூபாயை முன்பணமாக செலுத்தி, 2022 மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 ஃபேஸ்லிஃப்ட் காரை முன்பதிவு செய்து கொள்ளலாம்.