Kia To Show EV9 Electric SUV: ஆட்டோ எக்ஸ்போவில் வருகிறது கியா நிறுவனத்தின் புதிய EV9 மின்சார SUV கார்
கியா நிறுவனத்தின் புதிய EV9 மின்சார SUV கார் ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட உள்ளது.
ஆட்டோ எக்ஸ்போ 2023
பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களது புதிய வாகனங்கள் மற்றும் எதிர்கால திட்டங்களை, அறிவிக்கும் வகையில் கிரேட்டர் நொய்டா பகுதியில் வரும் 11ம் தேதி தொடங்கி, 18ம் தேதி வரையில் பிரமாண்ட ஆட்டோ எக்ஸ்போ 2023 நடைபெற உள்ளது. முன்னணி நிறுவனங்கள் இதில் பங்கேற்காவிட்டாலும், மாருதி சுசுகி, ஹுண்டாய், டாடா மோட்டார்ஸ், கியா, எம்ஜி மற்றும் டொயோட்டா உடன், ஒரே ஒரு சொகுசு கார் நிறுவனமாக லெக்சஸ் நிறுவனம் பங்கேற்க உள்ளது. அதோடு, இரு சக்கர வாகன உற்பத்தியாளர்களில் பெனெல்லி, கீவே, ஜோன்டெஸ், மோட்டோ மோரினி, மேட்டர், டார்க் மற்றும் அல்ட்ரா வயலட் ஆகியவை பங்கேற்க உள்ளன.
கியா நிறுவனத்தின் முதல் மின்சார எஸ்யுவி கார்:
இந்த பிரமாண்ட நிகழ்ச்சியில், கான்செப்ட் மாடலாக கியா நிறுவனத்தின், EV9 மாடலின் முதல் மின்சார SUV கார் காட்சிப்படுத்தப்பட உள்ளது. அதேநேரம், இந்த காரின் உற்பத்தி மாடல் நடப்பாண்டு இறுதியில் சர்வதேச சந்தையில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. EV6 மற்றும் E-GMP மாடல் கார்கள் உருவாக்கப்பட்ட பிளாட்பார்ம்களில் தான் புதிய காரும் உருவாக்கப்படும் என கூறப்படுகிறது.
காரின் வடிவமைப்பு:
இந்த காரின் வடிவமைப்பின்படி, 4,930 மிமீ நீளம், 2,055 மிமீ அகலம், 1,790 மிமீ உயரம் மற்றும் 3,100 மிமீ வீல்பேஸ் கொண்ட மிகப் பெரிய SUV காராக புதிய EV9 மின்சார கார் உருவாக உள்ளது. இந்த காரை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால், 300 மைல்கள் அல்லது 500 கிமீ வரை ஓட்ட முடியும். இது 350-கிலோவாட் சார்ஜருடன் அதிவேகமான சார்ஜிங் தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது. 20 முதல் 30 நிமிடங்கள் சார்ஜ் செய்தாலே, இந்த காரின் பேட்டரி 10% முதல் 80% வரை சார்ஜ் ஆகும் திறன் கொண்டுள்ளது.
காரின் சிறப்பம்சங்கள்:
ICE கியா கார்களில் இருக்கும் கிரில்கள் EV9 இடம்பெறவில்லை, அதற்கு பதிலாக பாக்ஸி SUV போன்ற வடிவமைப்பு கூறுகளுடன் டிஜிட்டல் டைகர் நோஸ் கிரில் இடம்பெற்றுள்ளது. உள்ளிழுக்கும் கூரை தண்டவாளங்கள் மற்றும் வழக்கமான கண்ணாடி அமைப்பிற்கு மாற்றாக கேமரா அமைப்பு உள்ளது. உட்புறங்கள் 27-இன்ச் அல்ட்ரா-வைட் டிஸ்ப்ளே இடம்பெற்றுள்ளது.
காரில் உள்ள இருக்கைகள் நகரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. மூன்றாவது வரிசையிலும் முதல் வரிசையிலும் உள்ளவர்கள் ஒரு பட்டனைத் தொட்டாலே ஒருவரையொருவர் எதிர்கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. உட்புறம் வீகன் தோல் மற்றும் பிற நிலையான பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. EV9 மின்சார SUV கார் உலகளவில் நடப்பாண்டின் முதல் காலாண்டில் அறிமுகப்படுத்தப்படும் எனவும், இது இந்தியாவிற்கு வருமா இல்லையா என்று தற்போது கூறமுடியாது எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த கார் மாடலுடன் பல்வேறு புதிய கார் கான்செப்ட்களையும், ஆட்டோ எக்ஸ்போ நிகழ்ச்சியில் கியா நிறுவனம் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.