HONDA: ஹோண்டா பைக் வாங்கப் போறீங்களா?.. அப்ப மொதல்ல இத படிச்சுட்டு போங்க..
ஹோண்டா நிறுவனம் தனது CB300F பைக் மாடல் விலை மீது பெரும் சலுகையை அறிவித்துள்ளது.
ரூ.50,000 விலை குறைப்பு:
கொடுக்கும் விலைக்கு ஒரு தரமான பைக் வாங்க வேண்டுமென நினைக்கிறீர்களா?.. அதற்கு இது தான் சரியான நேரம். ஏனேனில், யாரும் எதிர்பாராத விதமாக ஹோண்டா நிறுவனம் தனது, CB300F பைக் மாடல் விலையில் தள்ளுபடி அறிவித்து வாடிக்கையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
முன்னதாக, கடந்த ஆகஸ்ட் மாதம் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட CB300F பைக் மாடலின் விலை ரூ. 2 லட்சத்து 26 ஆயிரம் என துவங்கி அதிகபட்சம் ரூ. 2 லட்சத்து 29 ஆயிரம் என நிர்ணம் செய்யப்பட்டு இருந்தது. அதிலிருந்து ரூ.50,000 அளவிற்கு விலையை குறைப்பதாக ஹோண்டா பிக் விங் விற்பனை மையங்கள் சலுகையை அறிவித்துள்ளன.
சலுகைக்கான காரணம் என்ன?
ஹோண்டா நிறுவனத்தின் மற்ற பைக்குகளை போன்று, CB300F மாடல் போதிய வரவேற்பை பெறாததால் இந்த விலை சலுகை அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம், விற்பனை மையங்களில் இருந்து CB300F மாடல் பைக்குகளை முற்றிலுமாக அகற்றும் நோக்கில் இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது. சலுகை விலை காரணமாக பஜாஜ் டோமினார் 250, சுசுகி ஜிக்சர் 250 ஆகியவற்றை விட குறைந்த விலையில், CB300F மாடல் பைக் சந்தையில் கிடைக்க தொடங்கியுள்ளது. விலை குறைப்பு செய்யப்பட்டாலும், அதன் வடிவமைப்பில் எந்தவித மாற்றங்களும் செய்யப்படவில்லை.
புதிய விலை விவரம்:
புதிய விலை குறைப்பு அறிவிப்பை தொடர்ந்து ஹோண்டா CB300F மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 76 ஆயிரத்தில் இருந்து தொடங்கி, அதிகபட்சமாக ரூ. 1 லட்சத்து 79 ஆயிரம் என, எக்ஸ்-ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த தள்ளுபடி பிக் விற்பனை மையங்களில் ஸ்டாக் இருக்கும் வரை மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விலை அடிப்படையில் புதிய ஹோண்டா 300 சிசி மோட்டார்சைக்கிள் கேடிஎம் 125 டியூக் மாடலை விட குறைந்த விலையில் கிடைக்கிறது.
இன்ஜின் விவரங்கள்:
ஹோண்டா CB300F மாடலில் 293சிசி, நான்கு வால்வுகள் கொண்ட ஆயில் கூல்டு, SOHC என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 24.1 குதிரைகளின் சக்தி, 25.6 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறனை கொண்டுள்ளது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், ஸ்லிப் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.
இதர சிறப்பம்சங்கள்:
ஹோண்டா CB300F மாடலில் எல்.ஈ.டி. முகப்பு விளக்கு, ஃபுல் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், டூயல் சேனல் ஏபிஎஸ், ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, ஹோண்டா செலக்டபில் டார்க் கண்ட்ரோல், அலாய் வீல்கள் வழங்கப்பட்டு உள்ளது. பிரேக்கிங்கிற்கு முன்புறம் 276mm டிஸ்க், பின்புறம் 220mm டிஸ்க் இடம்பெற்று உள்ளது. சஸ்பென்ஷனுக்கு முன்புறம் அப்சைடு டவுன் ஃபோர்க்குகள், பின்புறம் 5-ஸ்டெப் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய மோனோஷாக் யூனிட் வழங்கப்பட்டுள்ளது.