மே மாத இறுதியில் வேலூரில் பாலாறு புஷ்கரம் - அகில பாரதீய சன்னியாசிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம்
காவிரி, வைகை, தாமிரபரணி, தென்பெண்ணை நதிகளை பாதுகாக்க புஷ்கர விழாக்கள் நடத்தப்பட்டதால் நீர் பற்றாக்குறை இல்லாமல் இருந்தது என சன்யாசிகள் கருத்து
கும்பகோணத்தில் அகில பாரதீய சன்னியாசிகள் சங்கம் மற்றும் தென்பாரத கும்பமேளா அறக்கட்டளையினர் இணைந்து, நீர்நிலைகளை பாதுகாத்தல் தொடர்பான கூட்டத்தினை நடத்தினர். கூட்டத்துக்கு வந்தவர்களை தென் பாரத கும்பமேளா அறக்கட்டளை தலைவர் எஸ்.சௌமிநாராயணன் வரவேற்றார். மாநாட்டில் செயலாளர் வி.சத்யநாராயணன், பொருளாளர் வேதம் முரளி, அகில பாரதீய சன்னியாசிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் வேதாந்த ஆனந்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அகில பாரதீய சன்னியாசிகள் சங்கத்தின் தலைவர் ராமானந்தா சிறப்புரையாற்றினார். இதில் மன்னார்குடி செண்டலங்கார செண்பக ராமானுஜ ஜீயர், மதுரை சுவாமி சிவானந்த சுந்தரானந்தா, வேலூர் சுவாமி சிவானந்தா வாரியார் மடாதிபதி, சென்னை சுவாமி ஈஸ்வரானந்தா, திருநெல்வேலி சுவாமி புத்தாத் மானந்தா சரஸ்வதி சுவாமிகள், மேலமங்கலம் ஸ்ரீலஸ்ரீ குமாரசுவாமி தம்பிரான், திருவண்ணாமலை ஸ்ரீலஸ்ரீ திருப்பாதசுவாமிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சுவாமி ராமானந்தா கூறுகையில், ஏற்கனவே அகில பாரதீய சன்னியாசிகள் சங்கம் சார்பில் காவிரி புஷ்கரம், வைகை, தாமிரபரணி, தென்பெண்ணை நதிகளை பாதுகாக்க புஷ்கர விழாக்கள் நடத்தப்பட்டன் விளைவாக இந்த ஆறுகளில் நீர் பற்றாக்குறை இல்லாமல் இருந்தது. இதே போல் சாயக்கழிகளால் பாழ்பட்டு வரும் பாலாற்றை பாதுகாக்கும் விதமாக பல்வேறு விழிப்புணர்வு பாதயாத்திரை நடத்தப்பட்டுள்ளது. அதன்படி வரும் மே மாதம் இறுதியில் வேலூரில் பாலாறு பெருவிழா என்ற பெயரில் புஷ்கரம் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து நீர் நிலைகளையும் பாதுகாக்க பொதுமக்கள் முன்வர வேண்டும். வரும் ஜூன் மாதம் ஓடிசா மாநிலத்தில் உள்ள வைதர்ணி நதியில் புஷ்கர விழா நடைபெறவுள்ளது. இதில் அகில பாரதீய சன்னியாசிகள் சங்கத்தினர் பெருமளவில் கலந்து கொள்வது என முடிவு செய்யப்பட்டு என்றார். கூட்டத்தில் தென்பாரத கும்பமேளா கும்பகோணம் மகாமக அறக்கட்டளையின் சார்பில், ஓடிசா மாநிலத்தில் நடைபெறவுள்ள வைதர்ணி புஷ்கர விழாவுக்கு கொண்டு செல்லும் வகையில் ரூ.60 ஆயிரம் மதிப்பீட்டில் ஒன்றரை அடி உயரத்தில் நான்கு கிலோ எடையில் வைதர்ணி அம்மன் ஐம்பொன் சிலையை வடிவமைத்து அகிலபாரதீய சன்னியாசிகள் சங்கத்தினரிடம் வழங்கினர். அதற்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றது.