பொங்கல் தொகுப்பிற்கு கரும்பு... வயல்களில் அதிகாரிகள் ஆய்வு: விவசாயிகள் வைக்கும் கோரிக்கை என்ன?
கும்பகோணத்தை அடுத்த திருப்புறம்பியம், தேவனாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள செங்கரும்புகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டாரத்தில் ரேசன் கடை மூலம் பொங்கல் தொகுப்பில் வினியோகம் செய்வதற்காக விவசாயிகளிடம் கொள்முதல் செய்ய கரும்பு வயல்களில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அரசு அறிவித்துள்ள பொங்கல் தொகுப்பில் முழு கரும்பு இடம் பிடித்துள்ளது. இதற்காக கரும்பு விவசாயிகளிடம் கரும்பை கொள்முதல் செய்யும் பணிகள் விரைவாக நடந்து வருகிறது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டாரத்தில் திருப்புறம்பியம், தேவனாஞ்சேரி, கொத்தங்குடி, சேங்கனூர் உள்ளிட்ட விவசாயிகள் செங்கரும்புகள் சாகுபடி செய்துள்ளனர். அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் பருவநிலை மாற்றம், பூச்சி தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கரும்பு வளர்ச்சி பாதித்துள்ளது என்று விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் நிபந்தனையின்றி விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் கூட்டுறவு சங்கங்களின் மூலம் வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகுப்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு முழு கரும்பு வழங்க நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு செங்கரும்பு சாகுபடி செய்திருந்த விவசாயிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணம் கோட்டத்தில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு நடப்பாண்டில் வழங்கப்பட உள்ள பொங்கல் பரிசு தொகுப்பில் ஒரு முழு செங்கரும்பும் சேர்த்து வழங்கப்பட உள்ளது. இந்த நிலையில், கும்பகோணத்தை அடுத்த திருப்புறம்பியம், தேவனாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள செங்கரும்புகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இதன் மூலம் செங்கரும்பை விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யும் பணியை விரைவில் கூட்டுறவு துறையினர் மேற்கொள்ள உள்ளனர். ஆய்வின்போது, மாவட்ட கூட்டுறவு பதிவாளர் பாலமுருகன் கள ஆய்வாளர் அஸ்லப்பா, சரவணன், பொது வினியோக திட்டம் முதுநிலை ஆய்வாளர் முத்து முருகன் துணை வேளாண் அலுவலர் சாரதி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.
கரும்பு சாகுபடி 10 மாத பயிராகும். முன்பு தஞ்சை மாவட்டத்தில் 200 ஏக்கருக்கும் அதிகமாக பொங்கல் கரும்பு எனப்படும் செங்கரும்பு சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டு வந்தனர். ஆனால் தற்போது அந்த பரப்பளவு குறைந்து விட்டது. கடந்தாண்டுகளில் 50 முதல் 80 ஏக்கரில் மட்டுமே விவசாயிகள் செங்கரும்பை சாகுபடி செய்து இருந்தனர். ஆனால் இந்தாண்டு 108 ஏக்கர் அளவில் கூடுதலாக விவசாயிகள் கரும்பை சாகுபடி செய்து இருந்தனர். கடந்த மாதத்தில் பெய்த மழையால் கரும்புகள் பாதிக்கப்பட்டன. இருப்பினும் விவசாயிகள் தேவையான மருந்துகள் அடித்து கரும்பை காப்பாற்றினர்.
தற்போது அரசு கொள்முதல் செய்யும் போது ஒரு முழு கரும்பின் நீளத்தை அறிவித்துள்ளது. இருப்பினும் அந்த அளவில் உள்ள கரும்புகளை மட்டும் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்தால் சின்ன அளவில் உள்ள கரும்புகளை விற்பனை செய்ய முடியாது. எனவே அனைத்து கரும்புகளையும் அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என்று கரும்பு விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் தரப்பில் கூறுகையில், ஒரு ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள அனைத்து கரும்புகளும் ஒரே அளவில் இருக்காது. பூச்சி தாக்குதல், பனிப்பொழிவு, மழை போன்ற இடர்பாடுகளால் கரும்பின் வளர்ச்சி குறைந்துள்ளது. எனவே இதிலும் விவசாயிகளை வேதனைப்படுத்தாமல் அனைத்து கரும்புகளையும் அரசு கொள்முதல் செய்து கொள்ள வேண்டும் என்றனர்.