மயிலாடுதுறை விவசாயிகளுக்கு நற்செய்தி! வேளாண் ஸ்டார்ட்அப்-களுக்கு ரூ.25 லட்சம் வரை நிதி உதவி: உடனே விண்ணப்பியுங்கள்!
வேளாண்துறையில் புத்தாக்க நிறுவனங்களுக்கு அரசு வழங்கும் ரூ.25 லட்சம் வரையிலான முதலீட்டு உதவியை பெற ஆர்வமுள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அறிவுத்தியுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்கான சந்தைப்படுத்துதலை மேம்படுத்தவும், வேளாண் சங்கிலி மேலாண்மையில் நவீன தொழில்நுட்பங்களைப் புகுத்தவும், வேளாண் புத்தாக்க நிறுவனங்களை (Agri-Tech Startups) தொடங்க மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கைகளை எடுத்து வருவதாக மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், தெரிவித்துள்ளார். மாநில அரசின் நிதி ஆதரவுடன் புத்தாக்க நிறுவனங்களுக்கு ரூ.25 லட்சம் வரையிலான முதலீட்டு உதவி வழங்கப்படவுள்ளதாகவும், ஆர்வமுள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
வேளாண்மையை மேம்படுத்தும் தொழில்நுட்பம்
தமிழகத்தில் விவசாய நடவடிக்கைகளை ஊக்குவித்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாகப் பல்வேறு புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விதைத்தல் முதல் அறுவடை மற்றும் சந்தைப்படுத்துதல் வரை அனைத்து நிலைகளிலும் வேளாண் துறை உதவி செய்து வரும் நிலையில், நவீன தொழில்நுட்பத்தின் அவசியத்தை தமிழ்நாடு அரசு உணர்ந்துள்ளது.
அதன் விளைவாக, வேளாண் தொழில்நுட்பங்களின் அடிப்படையில் புத்தாக்க நிறுவனங்களை ஊக்குவிப்பதில், தமிழ்நாடு தற்போது நாடு முழுவதும் 137 நிறுவனங்களுடன் 3வது இடத்தில் உள்ளது. இந்த வேகத்தைத் தக்கவைக்கும் நோக்கில், 2024-2025 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில், வேளாண் தொழில்நுட்ப அடிப்படையிலான புத்தாக்க நிறுவனங்களின் நிலைத்தன்மை மற்றும் வணிகத் திட்டத்தின் அடிப்படையில் முதலீட்டு நிதி ஆதரவு அளித்திட சிறப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்காக, மாநில நிதியிலிருந்து ரூபாய் 10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
புத்தாக்க நிறுவனங்களின் முக்கியப் பங்கு
வேளாண் புத்தாக்க நிறுவனங்கள் (Agri-Tech Startups) என்பவை, வேளாண்மை மற்றும் அதனைச் சார்ந்த துறைகளில் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, விவசாயிகளின் அன்றாடச் சவால்களைத் தீர்ப்பதற்கான ஒரு வணிக முயற்சியாகும்.
இவை மையமாகக் கொள்ளும் சேவைகள்
* விநியோக சங்கிலி மற்றும் தளவாடங்கள்: அறுவடை செய்யப்பட்ட பொருட்களைச் சேமித்து, விரைவாகச் சந்தைக்குக் கொண்டு செல்லும் அதிநவீன விநியோகச் சங்கிலி மேலாண்மை முறைகளை உருவாக்குதல்.
* துல்லியப் பண்ணையம்: தரவுகளின் (Data) அடிப்படையில் மண்ணின் வளம், நீர் அளவு மற்றும் ஊட்டச்சத்துத் தேவைகளைத் துல்லியமாகக் கணக்கிட்டு, விவசாயத்திற்கு உதவுதல்.
* ட்ரோன் தொழில்நுட்பம்: டிரோன்கள் போன்ற கருவிகள் மூலம் பயிர்ப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் மற்றும் பயிர் ஆரோக்கியத்தைக் கண்காணித்தல்.
*நிபுணர் ஆலோசனை: விவசாயிகளுக்குத் தேவையான பயிர்ப் பாதுகாப்பு, வேளாண் இடுபொருட்கள் வழங்குதல் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கக்கூடிய டிஜிட்டல் தளங்களை உருவாக்குதல்.
*சந்தைப் படுத்துதல்: அறுவடைக்குப் பிந்தைய தொழில்நுட்பச் சேவைகளை வழங்கி, விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்குச் சிறந்த சந்தை விலையைப் பெற்றுத் தருதல்.
முதலீட்டு நிதி மற்றும் மானிய விவரங்கள்
மயிலாடுதுறை மாவட்டத்தில் நிறுவப்படவுள்ள இந்த வேளாண் புத்தாக்க நிறுவனங்களுக்கு, அவற்றின் வளர்ச்சி நிலைக்கு ஏற்ப இரண்டு வகைகளில் நிதி உதவி வழங்கப்படுகிறது.
* வளர்ச்சி நிலையில் உள்ள நிறுவனங்கள் (Growth Stage): ஒரு நிறுவனத்திற்கு ரூபாய் 10 லட்சம் வரை நிதி உதவி வழங்கப்படும்.
*சந்தைப்படுத்துதலுக்குரிய தயாரிப்புகளை உருவாக்கும் நிறுவனங்கள் (Market-Ready): ஒரு நிறுவனத்திற்கு ரூபாய் 25 லட்சம் வரை நிதி உதவி வழங்கப்படுகிறது.
நம் நாட்டுச் சந்தைக்கு உகந்தவாறு செயல்படக்கூடிய புத்தாக்க நிறுவனங்களுக்கு இந்தத் திட்டத்தின்கீழ் மானியம் பெற முன்னுரிமை அளிக்கப்படும். இருப்பினும், உடனடியாக உண்ணக்கூடிய (Ready-to-eat) பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் இத்திட்டத்தில் தகுதியானவை அல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே இடத்தில் அனைத்து உதவிகளும்
இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம் தகுதியான புத்தாக்க நிறுவனங்கள் அடையாளம் காணப்படவுள்ளன. மேலும், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இயங்கி வரும் வேளாண் வணிக மேம்பாட்டு இயக்குநரகத்தின் (DABD) உதவியோடு நிறுவனங்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படுகின்றன.
புத்தாக்க நிறுவனங்களுக்குத் தேவையான நிதி ஆதரவு, சந்தை இணைப்பு, தொழில்நுட்ப உதவி, கொள்கை ரீதியிலான வழிகாட்டுதல் என அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் கிடைத்திட மாவட்ட நிர்வாகம் வழிவகை செய்துள்ளது.
விண்ணப்பிக்கும் முறை மற்றும் வழிகாட்டுதல்கள்
மயிலாடுதுறை மாவட்டத்தில் வேளாண் புத்தாக்க நிறுவனங்கள் அமைத்திட ஆர்வமுள்ளவர்கள், www.agrimark.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்ய வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வேளாண்மை துணை இயக்குநர், வேளாண் வணிகம், மயிலாடுதுறை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
வேளாண் வணிக மேம்பாட்டு இயக்குநரகம், பெறப்பட்ட விண்ணப்பங்களில் தகுதியானவற்றை முதற்கட்ட ஆய்வில் தேர்வு செய்தபின், இத்துறை மூலம் உருவாக்கப்பட்ட மதிப்பீட்டுக் குழுவால் ஆய்வு செய்யப்பட்டு இறுதித் தேர்வு செய்யப்படும். வேலை வாய்ப்பினை உருவாக்குதல், சமூக அக்கறை மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும் விதமான தயாரிப்புகள் மற்றும் செயல்பாடுகளை மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
விவரங்கள் தேவைப்படுபவர்கள், வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) அலுவலகம், 5-வது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பெருந்திட்ட வளாகம், மயிலாடுதுறை என்ற முகவரியில் உள்ள அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு வழிகாட்டுதல்களைப் பெற்றுக்கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.






















