”சேட்டன் வந்தல்லே”CSK-வில் இணைந்த சஞ்சு ஜடேஜா, சாம் கரனுக்கு TATA..! | CSK Trade 2026
ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வந்த சஞ்சு சாம்சன் சென்னை அணியில் இணைந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஞ்சு சாம்சனிற்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஜடேஜா மற்றும் சாம் கரனை ராஜஸ்தான் அணிக்கு விட்டுக் கொடுத்துள்ளது.
சஞ்சு சாம்சனுக்கு மாற்றாக ராஜஸ்தான் அணிக்கு ஆல்ரவுண்டர்களான ஜடேஜா மற்றும் சாம் கரன் ஆகியோர் சிஎஸ்கே சார்பில் விட்டுக் கொடுக்கப்பட்டுள்ளனர். கடந்த ஐபிஎல் தொடருக்காக 18 கோடி ரூபாய்க்கு சென்னை அணியால் தக்கவைக்கப்பட்ட ஜடேஜாவிற்கு, ராஜஸ்தான் அணியில் தற்போது 14 கோடி ரூபாய் ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அவருக்கு வழங்கப்பட்ட அதே 18 கோடி ரூபாய் ஊதியத்தை சஞ்சு சாம்சனுக்கு வழங்க சென்னை அணி முடிவு செய்துள்ளதாம். சென்னை அணியால் வீரர்களுக்காக மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தமாக இது கருதப்படுகிறது. தோனிக்கு அடுத்தபடியாக சிஎஸ்கேவின் விக்கெட் கீப்பராக மட்டுமின்றி, எதிர்கால கேப்டனாகவும் சஞ்சு சாம்சன் பரிசீலிக்கப்படுவதாக தெரிகிறது.
ஜடேஜாவை அணியில் இருந்து விடுவிப்பது குறித்து சிஎஸ்கே தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில், உருக்கமான பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதில் சென்னை அணியுடனான ஜடேஜாவின் பயணத்தை குறிக்கும் வகையிலான, உணர்வுப்பூர்வமான பல காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
ரவீந்திர ஜடேஜா 2012 முதல் சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவராக இருந்து வருகிறார். 2018, 2021 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் சிஎஸ்கே அணி கோப்பையை வெல்ல மிக முக்கிய பங்கு வகித்துள்ளார். ஜடேஜா சூப்பர் கிங்ஸ் அணிக்காக 150 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியுள்ளதோடு, 2300 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார்.
சஞ்சு சாம்சன் தனது ஐபிஎல் வாழ்க்கையில் 4500 ரன்களுக்கு மேல் அடித்த அனுபவம் வாய்ந்த வீரராவார். ஒரு தசாப்தத்திற்கும் மேலாக ஐபிஎல்லில் ஒரு பகுதியாக இருந்து வருகிறார். டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். சாம்சன் ஐந்து ஐபிஎல் சீசன்களில் (2021 முதல் 2025 வரை) ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வழிநடத்தியுள்ளார். அவரது தலைமையில், ராஜஸ்தான் ராயல்ஸ் 2022 சீசனில் இறுதிப் போட்டியை எட்டியது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் போட்டியில் அவர் இடம்பெற உள்ள நான்காவது அணி சிஎஸ்கே ஆகும்.
2021 ஆம் ஆண்டு ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்ற சிஎஸ்கே அணியில் சாம் கரன் இடம் பெற்றிருந்தார். இங்கிலாந்து ஆல்ரவுண்டர் ஐபிஎல் 2020, 2021 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார். ஐபிஎல்லில் சூப்பர் கிங்ஸ் அணிக்காக 28 போட்டிகளில் விளையாடியுள்ள கரான், 356 ரன்கள் எடுத்து 23 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.





















