மீண்டும் மீண்டுமா... தெறி ரிலீஸ்-க்கும் சிக்கல்! மோகன் ஜி-யால் புது பஞ்சாயத்து
ஜனநாயகன் ரிலீஸ் ஒத்திவைப்பால் ரசிகர்கள் விரக்தியில் இருக்கும் நேரத்தில், மோகன் ஜி-யால் தெறி படத்தின் ரிலீஸ் தேதியும் தள்ளிப் போக வாய்ப்புள்ள நிலைமை உருவாகியுள்ளது.
ஜனவரி 9ம் தேதி ரிலீஸ் ஆகவிருந்த ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தேதி சென்சார் போர்டு பிரச்னையால் ஒத்திவைக்கப்பட்டது. நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் படம் எப்போது வெளியாகும் என்பது முடிவாகாமல் இருக்கிறது. விஜய்யின் கடைசி படம் ஜனநாயகன் என சொல்லியதால் ஆர்வத்துடன் காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இதனை சரிகட்டும் விதமாக தெறி படத்தை பொங்கலையொட்டி ஜனவரி 15ம் தேதி ரீ ரிலீஸ் செய்வதாக அறிவித்தது தயாரிப்பு நிறுவனம். விரக்தியில் இருந்த விஜய் ரசிகர்கள் இந்த அறிவிப்பால் குஷியானார்கள். இதனையடுத்து வரவிருக்கும் படங்களின் தயாரிப்பாளர்களின் கோரிக்கைக்கு இணங்க , 'தெறி' படத்தின் வெளியீட்டை ஜனவரி 23ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக அறிவித்தார் தயாரிப்பாளர் தாணு.
இந்தநிலையில் இயக்குநர் மோகன் ஜி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாணுவிடம் ஒரு கோரிக்கை வைத்தார். அவரது பதிவில், ‘எங்களை போன்ற வளர்ந்து வரும் படக்குழுவினருக்கு ஆதரவளித்து தெறி படத்தை ஜனவரி 23ம் தேதி வெளியிடுவதை ஒத்திவைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் புதிய தயாரிப்பாளர்களுக்கும் வளர்ந்து வரும் இயக்குநர்களுக்கும் நிறைய நன்மைகளை செய்திருக்கிறீர்கள். அதனால் ஜனவரி 23ம் தேதி வெளியாகும் எங்கள் திரௌபதி படத்தை முக்கிய திரையரங்குகளில் வெளியிட உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
இதற்கு உடனடியாக ரியாக்ட் செய்த கலைப்புலி எஸ்.தாணு, புதிய இயக்குனர்கள், நல்ல படைப்புகள் மற்றும் வளரும் தயாரிப்பாளர்களை ஊக்குவிப்பதே V Creations நிறுவனத்தின் தலையாய பொறுப்பு. அந்த நோக்கத்தை முன்னிட்டு "தெறி" திரைப்படத்தின் வெளியீட்டின் முடிவு ஜனவரி 19ம் தேதி அறிவிக்கப்படும்” என சொல்லியுள்ளார்.
ஏற்கனவே ஜனநாயகனால் விரக்தியில் இருக்கும் ரசிகர்கள், தெறி ரீ ரிலீஸ் தேதியும் தள்ளிப்போகும் நிலை உருவாகியுள்ளதால் கடுப்பில் இருக்கின்றனர்.
இந்தநிலையில் கோரிக்கையை ஏற்றத்திற்கே மிகப்பெரிய நன்றி, உங்களை நேரில் சந்திக்க வருகிறோம். உங்களுக்கும் விஜய் சார் ரசிகர்களுக்கும் நன்றி என தாணுவிற்கு பதில் கொடுத்துள்ளார் மோகன் ஜி.





















