நேருக்கு நேர் மோதிய 2 பஸ்கள் துடிதுடித்து போன உயிர்கள் சோகத்தில் உறைந்த தென்காசி பகீர் காட்சி |Tenkasi Bus Accident
தென்காசி கடையநல்லூர் அருகே இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே இடைக்கால் காமராஜர்புரம் பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. ஒரே பாதையில் எதிரெதிர் திசைகளில் வந்த இரண்டு தனியார் பேருந்துகள் கட்டுப்பாட்டை இழந்து, மிகக் கடுமையான வேகத்தில் மோதியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மோதிய வேகத்தில் பேருந்துகளின் முன்பக்கங்கள் முழுவதுமாகச் சிதைந்தன.
பேருந்துகளில் பயணித்த நாற்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். சம்பவ இடத்திலேயே உயிரிழந்தவர்கள் மற்றும் படுகாயமடைந்தவர்களை மீட்புப் படையினர் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் உடனடியாக அருகிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர். உயிருக்கு கவலைக்கிடமான நிலையில் இருப்பவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடையநல்லூர் காவல்துறை வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கான சரியான காரணம் என்ன? ஓட்டுநர்களின் கவனக்குறைவா? அல்லது தொழில்நுட்பக் கோளாறா? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த துயரச் சம்பவத்தைக் கேட்டு தமிழக முதல்வர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அனைவரும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர். இதுக்குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டரில் தென்காசி கடையநல்லூரில் நேர்ந்த பேருந்து விபத்தில் ஆறு பேர் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் வேதனைக்குள்ளாகியிருக்கிறேன். உடனடியாக, மாவட்டப் பொறுப்பு அமைச்சரான ராமசந்திரனை தொடர்புகொண்டு, சம்பவ இடத்திற்கு விரைந்து செல்ல அறிவுறுத்தியுள்ளேன். விபத்து நேர்ந்த இடத்திலிருந்து பேசிய மாவட்ட ஆட்சியரை, அரசு மருத்துவமனைக்குச் சென்று, பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உரிய உயர்தர சிகிச்சையை உறுதிசெய்யுமாறு உத்தரவிட்டுள்ளேன். இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் அவர்களது குடும்பத்தினர்க்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்துள்ளவர்கள் விரைந்து நலம்பெற அரசு துணை நிற்கும். என தெரிவித்துள்ளார்.






















