RN Ravi Walkout : RN ரவியும்.. சட்டப்பேரவையும்அன்றும்... இன்றும் ஸ்டாலின் செய்த சம்பவம் TN Assembly
ஆளுநர் ஆர் என் ரவி ஆரம்பத்தில் இருந்தே தமிழக அரசுடன் உள்ள முரண்பாடு காரணமாக பல வகையில் குடைச்சல் கொடுத்து வருவதாக குற்றச்சாட்டு உள்ளது. ஆளுநர் உரையில் சில வார்த்தைகளை நீக்கி வாசிப்பது , உரையை வாசிக்காமல் வெளிநடப்பு செய்வது தொடர் சர்ச்சைகளை கிளப்பி வருகிறார். இந்நிலையில் தொடர்ச்சியாக இரண்டாம் ஆண்டும் ஆளுநர் உரை வாசிக்காமல் வெளியேறிய சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு 2023-ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் கூட்டத்தில் ஆளுநர் உரையாற்றிய போது, அரசு தயார் செய்த உரையில் இருந்த திராவிடம் என்ற வார்த்தையையும், சில பகுதிகளையும் விட்டுவிட்டு படித்தார். ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசு தயாரித்து வழங்கிய ஆளுநர் உரையில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரது பெயர்களை தவிர்த்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், ஆளுநர் வாசித்த உரையை அவைக்குறிப்பில் ஏற்றக்கூடாது, அவர் ஒப்புதல் அளித்து அச்சடிக்கப்பட்ட உரையையே அவைக்குறிப்பில் ஏற்ற வேண்டும் என்று சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் வாசித்துக் கொண்டிருந்தபோது அவையில் இருந்து பாதியிலே ஆளுநர் வெளியேறியது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
சட்டப்பேரவையில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும் இறுதியாக தேசிய கீதம் பாடப்படுவதும் மரபு. இந்நிலையில் கடந்த ஆண்டு முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியதற்கு எதிர்ப்பு தெரிவித்து உரையை வாசிக்காமல் ஆளுநர் வெளியேறினார். அப்போது சபாநாயகரே ஆளுநர் உரையை முழுமையாக படித்தார். அதன்பிறகு முதலில் தேசிய கீதம் ஒலிக்கப்பட வேண்டும் என ஆளுநர் சபாநாயகருக்கு கடிதம் மூலம் வலியுறுத்தினார். அதற்கு மரபை மாற்றமுடியாது என சபாநாயகர் அப்போதே திட்டவட்டமாக கூறிவிட்டார்.
இந்தநிலையில் இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடருக்கு சபாநாயகர் அப்பாவு, ஆளுநர் ஆர்.என்.ரவியை முறைப்படி நேரில் சந்தித்து அழைப்பு விடுத்த நிலையில், ஆளுநர் ஒப்புதல் அளித்தார். அதன்படி இன்று முதல்வர் மற்றும் ஆளுநருக்கு மரியாதை அளிக்கப்பட்டு முதல் கூட்டத்தொடர் தொடங்கியது. கையில் பதாகைகள் ஏந்தி யார் அந்த சார் என அதிமுக வினர் முழக்கமிட்டதையடுத்து ஆளுநர் ஆர் என் ரவி உரையை வாசிக்காமல் புறப்பட்டு சென்றார். அவையில் இந்த ஆண்டும் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் ஒலிக்க ஆளுநர் ரவி அவையில் இருந்து உரையை வாசிக்காமல் வெளியேறினார். இதனையடுத்து அவையில் தேசிய கீதம் அவமதிக்கப்பட்டதாக கூறி ஆளுநர் மாளிகை தரப்பில் எக்ஸ் தளத்தில் காரணமாக பதிவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.