‘’முகுந்தனுக்கு பதவி உறுதி!’’ அடித்து சொன்ன ராமதாஸ் அதிர்ச்சியில் பாமகவினர்
பாமக இளைஞரணி தலைவராக முகுந்தனை நியமித்ததில் மாற்றமில்லை என்று ராமதாஸ் கூறியிருப்பது அன்புமணி ஆதரவாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்தில் தன்னுடைய பேரன் முகுந்தனை பாமக இளைஞரணி தலைவராக அறிவித்தார் ராமதாஸ். ராமதாசின் இந்த அறிவிப்புக்கு மேடையிலேயே வைத்து எதிர்ப்பு தெரிவித்தார் பாமக தலைவரும், ராமதாசின் மகனுமான அன்புமணி. இருவருக்கும் மேடையிலேயே கருத்து மோதல் ஏற்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பின்னர் சமரச குழு ஏற்படுத்தப்பட்டு தைலாபுரம் தோட்டித்திற்கு சென்ற ராமதாசை சந்தித்தார் அன்புமணி. பின்னர் இது உட்கட்சி பிரச்சனை. கட்சிக்குள் ஏற்படும் பிரச்சனைகளை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். ஐயா எங்களுக்கு எப்போதும் ஐயா தான் என்றார் அன்புமணி.
இதனிடையே இளைஞரணி தலைவர் பொறுப்பால் தாத்தாவிற்கும், மாமாவிற்கும் பிரச்சனை ஏற்பட்டு அது கட்சிக்கி ஆபத்தாய் முடிந்து விடக்கூடாது என்று முகுந்தன் இளைஞரணி தலைவர் பொறுப்பை வேண்டாம் என்று சொன்னதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், பனையூரில் புதிய அலுவலகம் திறந்திருக்கும் அன்புமணி கட்சியின் புதிய இளைஞரணி தலைவரை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் தான் பாமக நிறுவனர் ஒரு குண்டை தூக்கி போட்டுள்ளார்.
அதாவது பாமக இளைஞரணி தலைவர் பதவி தொடர்பாக இன்று பேசிய ராமதாஸ், முகுந்தன் இளைஞரணி தலைவர் என்று பொதுக்குழுவில் அறிவித்துவிட்டேன். பாமக இளைஞரணி தலைவராக முகுந்தனை நியமித்ததில் மாற்றமில்லை. அவருக்கு மறு நாளே நியமன கடிதம் கொடுத்து விட்டேன் “ என்று கூறியிருக்கிறார். இதானல் ராமதாஸ் மற்றும் அன்புமணிக்கு இடையே மீண்டும் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.