Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
ஆட்சி, அதிகாரத்தில் பங்கு வேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் போர்க்கொடி தூக்கும் நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர்களை மொத்தமாக டெல்லிக்கு வரவைத்து முக்கியமான மீட்டிங் ஒன்றை நடத்தியுள்ளார் ராகுல்காந்தி.
சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், அதிகாரத்தில் பங்கு வேண்டும் என திமுகவை நெருக்க ஆரம்பித்துள்ளது காங்கிரஸ். தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பங்கு வகிக்கும் என சொல்லி புயலை கிளப்பினார். அவரது கருத்து தமிழ்நாடு காங்கிரஸின் கருத்து தான் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையும் ஆமோதித்தார்.
இந்தநிலையில் இப்போது அதிகாரம் மட்டும் அல்ல – அதிகாரப் பகிர்வும் விவாதிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என கொளுத்தி போட்டார் எம்.பி மாணிக்கம் தாகூர். மற்றொரு பக்கம் தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கப் போவதாக எதிர் தரப்பினர் விமர்சனமும் செய்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் முக்கிய புள்ளிகள் சிலர் தவெகவுடன் கூட்டணி வைக்க விரும்புவதாக பேச்சு அடிபடுகிறது. ராகுல்காந்தியின் காதுகளுக்கும் இந்த விவகாரம் சென்றதாகவும், அவருக்கு தெரிந்து தான் முகவிடம் நெருக்கடி கொடுக்கும் வகையில் கூட்டணி ஆட்சி என்ற முழக்கத்தை காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து கூறி வருவதாகவும் அரசியல் விமர்சகர்கள் சொல்லி வருகிறார்கள்.
இந்தநிலையில் தமிழக காங்கிரஸ் கட்சியினர் மொத்தமாக டெல்லிக்கு படையெடுத்துள்ளனர். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூனே தலைமையில் முக்கியமான மீட்டிங் நடந்துள்ளது. செல்வப்பெருந்தகை, கார்த்தி சிதம்பரம், மாணிக்கம் தாகூர், சசிகாந்த் செந்தில், விஜய் வசந்த் உள்ளிட்ட தமிழக காங்கிரஸ் கட்சியினர் இந்த மீட்டிங்கில் கலந்து கொண்டனர். முக்கியமாக அதிகாரத்தில் பங்கு என்பதை சுற்றியே ஆலோசனை நடந்ததாக பேச்சு அடிபடுகிறது.
மாணிக்கம் தாகூர் டெல்லிக்கு செல்வதற்கு முன்பே இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். அதில் மதுரையில் இருந்து புறப்பட்டு புதுடெல்லி செல்கிறேன். எனக்காக அல்ல.. என் இயக்கத்தை காக்கும் காங்கிரஸ்காரர்களின் உணர்வை சொல்ல வேண்டும் என்பதாற்காக .. அகில இந்திய காங்கிரஸ் தலைவரிடமும்.. இந்தியாவின் எதிர்காலம் இன்றைய எதிர்கட்சி தலைவரிடமும் கருத்து சொல்ல .. நம் உரிமையை மீண்டும் விட்டு கொடுத்து விட கூடாது என்று சொல்ல.. மதவெறி கும்பல் தோற்கடிக்க வேண்டும் அத்தோடு நம் தொண்டர்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும் என்று சொல்ல. நட்புக்கு தோள் கொடுப்போம். உரிமைக்கு குரல் கொடுப்போம். ஆட்சியில் பங்கு என ஹிண்ட் கொடுத்திருந்தார்.
இந்தநிலையில் ராகுல்காந்தி தலைமையிலான மீட்டிங்கில் கூட்டணி, தொகுதி பங்கீடு, அதிகாரத்தில் பங்கு விவகாரத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும், ராகுல்காந்தி சில ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் சொல்கின்றனர்.





















