”விஜய் பத்தி பேசாதீங்க” பாஜகவினருக்கு வந்த ஆர்டர்! தலைமையின் பக்கா ப்ளான்
விஜய்க்கு எதிராக யாரும் கருத்து தெரிவிக்க கூடாது என பாஜகவினருக்கு பியூஸ் கோயல் அட்வைஸ் கொடுத்துள்ளதாக சொல்கின்றனர்.
அதிமுகவுடன் தொகுதி பங்கீடு மற்றும் கூட்டணி வியூகம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் தமிழ்நாடு வந்தார். பாஜக தலைமை அலுவலகத்தில் எல்.முருகன்,நயினார் நாகேந்திரன், தமிழிசை, வானதி, ஹெச்.ராஜா உள்ளிட்டோருடன் அவர் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது தேர்தலில் பாஜகவை வலுப்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அதிமுகவுடன் இணக்கமாக இருக்க வேண்டும் என்றும் தலைமையிடம் இருந்து ஆர்டர் வந்துள்ளது.
அதிமுக பாஜக கூட்டணியில் இன்னும் பெரிய கட்சிகள் எதுவும் நுழையாமல் இருக்கும் நிலையில், யார் யாரையெல்லாம் கூட்டணிக்கு அழைக்கலாம் என்றும் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. அப்போது அதிமுக- பாஜக கூட்டணியில் விஜய் இணைய வாய்ப்பு இருக்கிறதா என கேட்டுள்ளார். அதற்கு நிர்வாகிகள் வாய்ப்பு இல்லை என தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அப்போது விஜய் அதிமுக, பாஜக கூட்டணிக்கு வர வேண்டிய அவசியமும் இல்லை என பியூஸ் கோயல் சொல்லியுள்ளார். திமுகவுக்கு சாதகமாக உள்ள சிறுபான்மையினரின் வாக்குகளை பிரிப்பதில் விஜய்யின் ரோல் முக்கியமாக இருக்கும் அது நமது கூட்டணியின் வெற்றிக்கும் சாதகமாக அமையும் என பியூஸ் கோயல் சொன்னதாக தெரிகிறது. அதேபோல் விஜய்க்கு எதிராக கட்சி நிகழ்ச்சிகளிலோ சமூக வலைதளங்களிலோ யாரும் பேச வேண்டாம், நமது டார்கெட் திமுக மட்டும் தான் என பியூஸ் கோயல் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்ததும் சிறுபான்மையினர் வாக்குகளுக்கு தான் சிக்கல் வரும் என்ற பேச்சு இருந்தது. இந்த கூட்டணியால் சிறுபான்மையினர் வாக்குகளை பொறுத்தவரை திமுகவுக்கு சாதகமான சூழல் இருக்கும் என பேசப்பட்டது. தற்போது சிறுபான்மையினரின் வாக்குகளை குறிவைத்து விஜய் களமாடி வருவதால் அதனை வைத்து திமுகவுக்கு நெருக்கடியை உருவாக்க பாஜக தலைமை திட்டமிட்டுள்ளதாக சொல்கின்றனர்.
விஜய்க்கு எதிராக யாரும் பேசக் கூடாது என வெளியான தகவலை வைத்து சமூக வலைதளங்களில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் விமர்சித்து வருகின்றனர். விஜய்யின் பின்னணியில் பாஜக இருப்பதை இது தெளிவுபடுத்துகிறது என அட்டாக் செய்து வருகின்றனர்.





















