திமுக கூட்டணிக்கு OPS தூது காதர்பாட்சாவுடன் 1Hour MEETING ஆபரேஷன் ராமநாதபுரம் | OPS Joins DMK
மீண்டும் திமுக தான் ஆட்சி அமைக்கும் என ஓபிஎஸ் பேசியுள்ளதன் பின்னணியில் கூட்டணி கணக்குகளே இருப்பதாக சொல்கின்றனர். திமுக கூட்டணிக்குள் நுழைந்துவிட வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் ஓபிஎஸ், MLA காதர்பாட்சா முத்துராமலிங்கத்தை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுகவிற்குள்ளும், NDA கூட்டணிக்குள்ளும் நுழைந்து விட முயற்சித்த ஓபிஎஸ்-க்கு ஏமாற்றமே மிஞ்சியது. மக்களவை தேர்தலில் ஓபிஎஸ் உடன் கைகோர்த்திருந்த பாஜக, அதிமுக பக்கம் சாய்ந்த பிறகு ஓபிஎஸ்-ஐ கைவிட்டது. அதன்பிறகு என்ன செய்வதென்று தெரியாத நிலைக்கு தள்ளப்பட்ட ஓபிஎஸ், பல கட்ட முயற்சிகளுக்கு பிறகு பாஜகவுடனான உறவை முறித்துக் கொண்டார். அதன்பிறகும் அதிமுக பாஜக கூட்டணியில் இருந்து ஓபிஎஸ்-க்கு அழைப்பு வரவில்லை. அடுத்ததாக தவெக பக்கம் சாய்வதற்கு முயற்சி செய்தும் ஓபிஎஸ்-க்கு விஜய்யிடம் இருந்து க்ரீன் சிக்னல் வரவில்லை.
அதனால் திமுக கூட்டணி பக்கம் எப்படியாவது சென்றுவிட வேண்டும் என கணக்கு போட்டு காய் நகர்த்தி வருகிறார். OPS தரப்பில் இருந்து திமுகவுக்கு தூது சென்று வருவதாக பேசப்படுகிறது. நேற்று ராமேஸ்வரத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மணிமண்டபம் கும்பாபிஷேகம் விழாவில் நடந்த சில சம்பவங்கள் ஓபிஎஸ்-ன் கூட்டணி முயற்சியை காட்டும் வகையில் அமைந்திருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு இருக்கிறது.
ராமேஸ்வரம் என்.எஸ்.கே., வீதியில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு, ராமேஸ்வரம் தேவர் உறவின்முறை சங்கத்தினர் புதிய மணி மண்டபம் அமைத்தனர். இந்த கும்பாபிஷேக விழாவில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், ராமநாதபுரம் MLA காதர்பாட்சா முத்துராமலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் ஓபிஎஸ்-க்கு முக்கியத்துவம் அளித்ததை பார்க்க முடிந்தது. அதேபோல் காதர்பாட்சா முத்துராமலிங்கமும், ஓபிஎஸ்-ம் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியின் போது காதர்பாட்சா முத்துராமலிங்கமும், ஓபிஎஸ்-ம் தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக ராமநாதபுரம் திமுக வட்டாரத்தில் சொல்கின்றனர். திமுக கூட்டணியுடன் கைகோர்க்க ஓபிஎஸ் முயற்சிகளை எடுப்பதாக பேச்சு அடிபடும் நேரத்தில் அவர் MLA-விடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது அதற்கான அடித்தளமாக பார்க்கப்படுகிறது.
இதனைதொடர்ந்து சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சிதறி கிடப்பதால் திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்புள்ளதாக பேசியிருந்தார். இதன் பின்னணியிலும் கூட்டணி கணக்குகளே இருக்கின்றன. மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கைகோர்த்து ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சையாக களமிறங்கிய ஓபிஎஸ், அந்த தேர்தலில் தோல்வியை தழுவினார். ஆனால் ராமநாதபுரத்தில் அதிமுகவின் வாக்கு வங்கி ஓபிஎஸ்-க்கு கை கொடுப்பதால் சட்டப்பேரவை தேர்தலிலும் ராமநாதபுரம் தொகுதியையே குறிவைத்துள்ளாராம். அதிமுக, தவெக கட்சிகளில் சாதகமான சூழல் இல்லாததால் திமுக கூட்டணியை குறிவைத்து ஓபிஎஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்கின்றனர்.





















