நிதிஷ் குமாருக்கு கல்தா ஆட்டையை கலைத்த அமித்ஷா பரபரக்கும் பீகார் களம் | Nitish kumar Bihar election
பீகாரில் NDA கூட்டணி மீண்டும் வெற்றி பெற்றால் அடுத்த முதலமைச்சர் யார் என்பது தேர்தலுக்கு பிறகே முடிவு செய்யப்படும் என்று அமித்ஷா தெரிவித்துள்ளது நிதிஷ்குமாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
243 தொகுதிகளை கொண்ட பீகாரில் நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இன்னும் இழுபறி நீடித்து வருகிறது. அதே நேரத்தில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும், தனித்து களமிறங்கும் பிரசாந்த் கிஷோரும் வேட்பாளர்களையே அறிவித்துவிட்டனர். தேசிய ஜனநாயக கூட்டணியில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 101 தொகுதிகளிலும் பாஜக 101 தொகுதிகளில் போட்டியிடப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. லோக் ஜனசக்தி ராம் விலாஸ் கட்சிக்கு 29 தொகுதிகளும் ராஷ்டிரிய லோக் மோர்ச்சா கட்சிக்கு 6 தொகுதிகளும் மதச்சார்பற்ற ஹிந்துஸ்தானி அவாம் கட்சிக்கு 6 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
பீகார் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள இந்த சூழலில், அமித்ஷா தெரிவித்துள்ளது பேசும் பொருளாக மாறியுள்ளது. பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தாலும், அடுத்த முதலமைச்சர் யார் என்பதைப் பற்றி இப்போது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை; அது தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு கூட்டணி தலைவர்களால் முடிவு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது. இது நிதிஷ் குமாரின் Janata Dal கட்சிக்கும், ஒட்டுமொத்த NDA கூட்டணிக்கும் நிதிஷ் தான் முதல்வர் வேட்பாளர் என்று கூறி வந்த நிலையில் பாஜகவின் பீகார் தலைவர்களுக்கும் பேரிடியாக வந்து விழுந்துள்ளது. பாஜகவின் தலைமை, நிதிஷ் குமாரை முழுமையாக நம்பத் தயாராக இல்லை என்பதையே இது காட்டுகிறது.
நிதிஷ் குமார் கடந்த காலங்களில் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொண்டு, லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டு சேர்ந்தார். சில ஆண்டுகள் கழித்து மீண்டும் பாஜக பக்கம் வந்து முதலமைச்சர் ஆனார். அரசியல் சாமர்த்தியத்திற்காக அவர் அடிக்கடி கூட்டணி மாறும் இந்த நடவடிக்கை, பாஜகவின் தேசியத் தலைமைக்கு அவர் மீது ஒருவித நம்பிக்கையின்மையையும், சோர்வையும் ஏற்படுத்தியிருக்கலாம். அதனால்தான், தேர்தல் முடிவுக்குப் பிறகு நிலைமையைப் பொறுத்து முடிவெடுக்கலாம் என பாஜக இப்போது அவரை வெயிட்டிங் லிஸ்ட்டில் வைத்திருக்கிறது எனக் கூறப்படுகிறது.
நிதிஷ் குமாருக்கு இது அதிர்ச்சி கொடுத்தாலும், முக்கிய எதிரியான லாலு பிரசாத் பக்கம் மக்கள் சென்றுவிடக் கூடாது என்பதில் பாஜக உறுதியாக உள்ளது. நிதிஷ் குமாரின் இமேஜை விட, லாலுவின் ஆட்சிக் காலத்தின் மீதான வெறுப்புதான் தங்களுக்கு பெரிய பலம் என்று பாஜக நம்புகிறது. அமித்ஷாவின் ஒரே அறிக்கை, பீகாரில் ஆளும் கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை ஒரு கேள்விக் குறியாக மாற்றியுள்ளது. நிதிஷ் குமார் தற்போது முதலமைச்சர் வேட்பாளரா, இல்லையா என்ற கேள்விக்குள்ளேயே சிக்கியுள்ளார்.





















