”நான் தான் முடிவெடுப்பேன்” கறாராக சொன்ன ஸ்டாலின்! கலக்கத்தில் மா.செ.க்கள்
திறமை இருப்பவர்களுக்கு தான் MLA சீட் கிடைக்கும், யார் வேட்பாளர் என்பதை தலைமை பார்த்துக் கொள்ளும் என சொல்லி அதிரடி காட்டியுள்ளார் ஸ்டாலின். ஆனால் அவர் பேசிய விஷயங்கள் மாவட்ட செயலாளர்களின் வயிற்றில் புளியை கரைத்துள்ளதாக சொல்கின்றனர்,
தமிழக சட்டமன்ற தேர்தல் 2026-ல் நடைபெற உள்ள சூழலில் தேர்தலை சந்திக்க கட்சிகள் அனைத்தும் தயாராகி வருகின்றன. அந்தவகையில் திமுக தற்போது இருக்கும் கூட்டணியுடனே தேர்தலை சந்திக்க உள்ளது. பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் இருப்பதால் இன்னும் பல கட்சிகள் நம் கூட்டணிக்கு வரும் அது தொடர்பாக நான் பேசி வருகிறேன் தொண்டர்கள் கூட்டணி பற்றி யோசிக்காமல் களத்தில் இறங்கி தீவிரமாக வேலை செய்யுங்கள் என்று அதிமுக தொண்டர்களை உற்சாகபடுத்திருக்கிறார்.
மறுபுறம் புதிதாக தொடங்கப்பட்ட விஜயின் தவெக கூட்டணி அமைத்து போட்டியிடுமா இல்லை தனித்து போட்டியிடுமா என்ற கேள்வியும் உள்ளது. இப்படி பரபரப்பான அரசியல் சூழலில் தான் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, துணை பொதுச்செயலாளர்கள் கனிமொழி, ஆ.ராசா, திருச்சி சிவா, முதன்மை செயலாளர் கே.என்.நேரு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய ஸ்டாலின் பல அதிரடி உத்தரவுகளை போட்டது திமுக சீனியர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் பலரின் அடிவயிற்றில் புளியை கரைத்துள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது,”நம்முடைய பலமே, கட்சி கட்டுமானம்தான். இத்தகைய நிர்வாகக் கட்டமைப்பு எந்தக் கட்சிக்கும் கிடையாது. அந்த கட்டமைப்பை காலம் தோறும் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறோம், இருக்க வேண்டும். வேட்பாளர் யார் என்பதை தலைமைக் கழகம் முடிவு செய்யும். வெற்றி பெறுபவரே வேட்பாளராக நிறுத்தப்படுவார். திறமை வாய்ந்தவருக்கு தான் வாய்ப்பு வழங்கப்படும். அவரை சட்டப்பேரவைக்கு அனுப்ப உழைக்க வேண்டியது உங்களது கடமை” என்று ஸ்டாலின் பேசியிருப்பது தான் தற்போது சீனியர்களிடம் விவாதத்தை கிளப்பியுள்ளது.
வேட்பாளர் யார் என்பதை தலைமைக் கழகம் முடிவு செய்யும் என்று ஸ்டாலின் சொல்லி இருப்பதால் தங்களுக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா , தங்கள் சிபாரிசு மூலம் தாங்கள் கை காட்டுபவர்களுக்கு சீட் கிடைக்கும் என்று மாவட்ட செயலாளர்கள் புலம்பி வருவதாக சொல்கின்றனர். அதேபோல் சீனியர்கள் சிலருக்கும் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போய்விடுமோ என்ற பயம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இந்த முறை தேர்தலில் புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாமா என ஸ்டாலின் தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.





















