30 நிமிட MEETING! ராமதாஸை சந்தித்த EPS! மாறும் கூட்டணி கணக்குகள்?
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ராமதாஸ்-ஐ சந்தித்து 30 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் இபிஎஸ். ராமதாஸ் அன்புமணி இடையே மோதல் இருக்கும் நேரத்தில் கூட்டணி கணக்கில் முக்கிய ட்விஸ்ட் நடக்கப் போவதாக சொல்கின்றனர்.
கடந்த சில மாதங்களாகவே பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி இடையிலான மோதல் கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அன்புமணியிடம் இருந்து தலைவர் பதவியை பறிப்பதாக ராமதாஸ் அறிவித்தாலும் பொதுக்குழுவின் முடிவால் அன்புமணியே தலைவராக இருந்தார். அதேபோல் அன்புமணியே 2026 ஆகஸ்ட் வரை தலைவராக தொடர்வார் என்ற பொதுக்குழுவின் தீர்மானத்தை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. அந்த வகையில் தற்போது கட்சியும், சின்னமும் அன்புமணி வசமே இருப்பதால் தேர்தலில் ராமதாஸ் தரப்பின் நிலைப்பாடு என்ன என்ற கேள்வி வந்தது.
இந்தநிலையில் உடல்நலக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தந்தை மகனுக்கு இடையே மோதல் இருந்தாலும் ராமதாஸ்-ஐ பார்ப்பதற்காக உடனடியாக மருத்துவமனைக்கு வந்தார் அன்புமணி. இதனை தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி, அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் என அடுத்தடுத்து ராமதாஸ்-ஐ நேரில் சந்தித்தனர்.
இபிஎஸ் ராமதாஸ்-ஐ சந்தித்து 30 நிமிடங்கள் பேசியதாக தகவல் வெளியானது. இந்தநிலையில் இந்த பேச்சுவார்த்தையை பாமக எம்.எல்.ஏ அருள் உறுதி செய்துள்ளார். இதுதொடர்பான அவரது சமூகவலைதள பதிவில், ‘மருத்துவர் ஐயா அவர்களுடன் எடப்பாடியார் தனிமையில் 30 நிமிடம் பேசியது உண்மை தான். என்னனு எனக்கு எப்படி தெரியும்” என தெரிவித்துள்ளார்.
ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே மோதல் இருப்பதால் இன்னும் கூட்டணி முடிவுக்கு வராமல் இருக்கிறது. அன்புமணி அதிமுக கூட்டணியையே விரும்புவதாகவும், அதற்கு ராமதாஸ் முட்டுக்கட்டையாக இருப்பதாகவும் பேச்சு அடிபட்டது. ராமதாஸ் திமுக பக்கம் சாய்வதற்கான அறிகுறிகள் இருப்பதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேச்சு இருந்தது. இந்தநிலையில் இபிஎஸ் ராமதாஸை சந்தித்து பேசியதன் மூலம் கூட்டணி விவகாரம் முடிவுக்கு வருகிறதா என்ற கேள்வி வருகிறது.
அன்புமணி அதிமுக கூட்டணியையே விரும்புவதால் விரைவில் கூட்டணி அறிவிப்பு வெளியாகவிருப்பதாக சொல்கின்றனர். கட்சியும் சின்னமும் அன்புமணியிடம் இருப்பதால் ராமதாஸ் தரப்பும் ஒன்றுசேர்வதற்கான வாய்ப்பே அதிகம் இருப்பதாக தெரிகிறது. ராமதாஸ் அன்புமணி இடையிலான பஞ்சாயத்து முடிவுக்கு வந்து இருவரும் ஒன்றுசேர்ந்து தேர்தலை சந்திப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக சொல்கின்றனர். இபிஎஸ் சந்திப்பும் அதற்கான அச்சாரமா என பாமக தரப்பில் பேச்சு இருக்கிறது.





















