விதியை மீறினாரா ராகுல்? வெளிநாட்டு பயண சீக்ரெட்! பற்றவைத்த பாஜக
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயண திட்டம் பற்றி எங்களிடம் எதுவுமே சொல்வதில்லை என ராகுல்காந்தி மீது குற்றச்சாட்டை வைத்துள்ளது சிஆர்பிஆப். இதனை வைத்து ராகுலுக்கு எதிராக பகீர் சந்தேகம் ஒன்றை பாஜகவினர் கிளப்பி வருகின்றனர்.
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்திக்கு Z+ பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதனால் அவர் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலோ, பயணங்ள் மேற்கொண்டாலோ ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு அதிகாரிகள் அவருடன் எப்போதும் உடனிருப்பர். அதனால் நிகழ்ச்சி ப்ளான் தொடர்பாக அவர்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படுவது வழக்கம். அதனால் அவர் அந்த இடங்களுக்கு போகும் முன்பே உளவு பார்க்கும் வேலையும் நடக்கும்.
இந்தநிலையில் ராகுல்காந்தி தனது நிகழ்ச்சிகள் மற்றும் பயணங்களில் பாதுகாப்பு விதிமீறல்களில் ஈடுபடுவதாக புகாரை முன்வைத்துள்ளது சிஆர்பிஎஃப். ராகுல்காந்தி யாருக்கும் தகவல் சொல்லாமல் வெளிநாடுகளுக்கு போய் வருவதாகவும், இது அவரது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு சிஆர்பிஎஃப் தரப்பில் இருந்து புகார் கடிதம் சென்றுள்ளது. அதோடு சேர்த்து ராகுல்காந்திக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக சொல்கின்றனர். ராகுல்காந்தி டிசம்பரில் இத்தாலிக்கும், மார்ச்சில் வியட்நாமுக்கும், ஏப்ரலில் துபாய்க்கும், ஜூனில் கத்தாருக்கும், ஜூலையில் லண்டனுக்கும், செப்டம்பரில் மலேசியாவுக்கும் பயணம் மேற்கொண்டுள்ளார்,
பாதுகாப்பு அதிகாரிகளிடம் கூட சொல்ல முடியாத அளவுக்கு வெளிநாடுகளுக்கு சென்று ராகுல்காந்தி என்ன செய்கிறார் என பாஜகவினர் சந்தேகத்தை கிளப்புகின்றனர். இதுதொடர்பாக பேசிய பாஜக செய்தி தொடர்பாளர் சேஷாத் பூனாவாலா, ‘ராகுல்காந்தி வெளிநாட்டு பயணங்களின் போது தொடர்ச்சியாக விதிமீறல்களில் ஈடுபடுவதை பார்த்தால் சில கேள்விகள் வருகிறது. தனது பாதுகாப்பு அதிகாரிகளை நம்ப முடியாமல் விதிமீறலில் ஈடுபடும் அளவுக்கு வெளிநாடுகளில் என்ன நடக்கிறது? அங்கிருந்து ஏதாவது சேதி வருகிறதா? ஏதாவது ரகசியமாக நடக்கிறதா? அவர் வெளிநாடுகளில் தான் அதிக பாதுகாப்பாக உணர்கிறார்” என தெரிவித்துள்ளார்.
இதற்கு காங்கிரஸ் தரப்பில் இருந்து மறுப்பு வந்துள்ளது. வாக்கு திருட்டை ராகுல்காந்தி வெளிச்சத்துக்கு கொண்டு வந்ததால் தான் அதனை திசை திருப்ப பாஜக இந்த வேலையை செய்வதாக பதிலடி கொடுத்து வருகின்றனர்.





















