Eps-ன் பிரசாந்த் கிஷோர்! தமிழகத்தில் களமிறங்கிய சூறாவளி! யார் இந்த பைஜயந்த் பாண்டா?
பாஜக தேர்தல் பொறுப்பாளர் பைஜயந்த் பாண்டா தமிழகம் வந்த நேரம் அதிமுக பாஜகவின் அரசியல் கேம் சூடிபிடிக்கத் தொடங்கியுள்ளது. முக்கிய சந்திப்புகள், கூட்டணி பேச்சுவார்த்தை என பக்கா ப்ளானோடு தான் பாண்டா தமிழகத்தில் அடியெடுத்து வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் பொறுப்பாளர் மற்றும் இணைப் பொறுப்பாளரை நியமித்து பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாஜக பொறுப்பாளராக பாஜகவின் தேசிய துணை தலைவரும், மக்களவை உறுப்பினருமான பைஜய்ந்த் பாண்டா, நியமிக்கப் பட்டுள்ளார்.
இந்நிலையில் இன்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் பாஜக மேலிட பொறுப்பாளருமான பைஜயந்த் பாண்டா ஆகியோர் கூட்டணிக் கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்தனர். அதே நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராமதாஸ்-ஐ சந்தித்து 30 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் இபிஎஸ். அதிமுக பாமக தேர்தல் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையாக இருக்கக்கூடும் என தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், எடப்பாடி பழனிச்சாமியின் அடுத்தடுத்த மூவ் சூடுபிடிக்கத்தொடங்கியுள்ளது. இதைத்தொடர்ந்து கேம் சேஞ்சர் பையஜந்த் பாண்டா தான் இதற்கெல்லாம் பின்னால் இருந்து ஸ்கெட்ச் போட்டு தருவதாக கூறப்படுகிறது.
கரை படாத கரங்கள் என்ற கெஜ்ரிவாலின் இமேஜை உடைத்து, டெல்லியில் பல கோடி ரூபாய் செலவு செய்து கெஜ்ரிவால் புதிபித்த ஷீஸ் மஹால் விவகாரத்தை புதாகரமாக மாற்றி, டெல்லியின் வளர்ச்சி குறித்த வாக்குறுதிகளை டிராப்ட் செய்தது தொடங்கி, ஆம் ஆத்மி செய்ய தவறிய வாக்குறுதிகளை ஹைலைட் செய்தது என 27 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியின் அரியாசணத்தில் பாஜகவை அமர வைத்துள்ளார் ஒருவர்..
ஆனால் மற்ற பாஜக தலைவர்கள் போல் இவர் தன்னை வெளியே காட்டிக்கொள்வதில்லை. அவர் தான் டெல்லி தேர்தலில் மாஸ்டர் மைண்ட்டாக இருந்து கொடுத்த அசைண்மெண்டை சைலெண்ட்டாக முடித்த பைஜெயந்த் ஜெய் பாண்டா. மக்களவை தேர்தலில் டெல்லி மக்கள் தொடர்ந்து பாஜகவை ஆதரித்து வந்த நிலையில், சட்டமன்ற தேர்தலில் பாஜகவால் டெல்லி மக்களின் ஆதரவை பெற முடியவில்லை. டெல்லியின் அனைத்து தொகுதிகளையும் மக்களவை தேர்தலில் வென்ற பாஜக, 2015 சட்டமன்ற தேர்தலில் 3 தொகுதிகளையும், 2020 சட்டமன்ற தேர்தலில் 8 தொகுதிகளை மட்டுமே டெல்லியில் வென்றிருந்தது..
இதனால் ஒட்டுமொத்த தேர்தல் வியூகத்தையும் மாற்றி கட்டமைத்து, புதிய அணுகுமுறையுடன் டெல்லி தேர்தலை சந்தித்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்பதை உணர்ந்த பாஜக, அந்த மிக சவாலான பொறுப்பை ஐந்து முறை ஓடிஷாவின் முன்னாள் எம்.பியாக இருந்த ஜெய் பாண்டாவிடம் கொடுத்தது. டெல்லியில் 10 ஆண்டுகளாக முதலமைச்சராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவாலை வீட்டுக்கு அனுப்பியதோடு, 27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜகவை டெல்லியில் அரியணை ஏற்றினார்.
நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதா தள் கட்சியில் மிக முக்கியமான நபராக வலம் வந்த ஜெய் பாண்டா 2019-ஆம் ஆண்டு கட்சிக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன, அதன் காரணமாக பாஜகவிற்கு தாவினார் அவர். இங்கிருந்து அவரின் கிராப்ஃ வேகமாக உயர தொடங்கியது, வந்த வேகத்திலேயே உத்திர பிரதேச மக்களவை தேர்தலில் பிரச்சாரம் செய்யும் முக்கியமான பொறுப்பை பாண்டாவிடம் வழங்கியது பாஜக. அடுத்ததாக வரி சீர்திருத்தங்கள் கொண்டு வருவதற்கான மத்திய அரசு உருவாக்கிய 31 எம்.பி-கள் கொண்ட குழுவிற்கும் தலைவராக நியமிக்கபட்டார் இவர்.
கொடுத்த அனைத்து வேலைகளையும் பிசுரில்லாமல் செய்து முடித்த ஜெய் பாண்டாவின் டாக்டிக்ஸ், மற்றும் அவரின் யோசனைகள் டெல்லி தலமையை கவர்ந்தது.இந்நிலையில் தான் பல ஆண்டுகளாக டெல்லியை கைப்பற்ற முடியாத பாஜக, ஜெய் பாண்டாவை அழைத்தது. வந்த வேகத்திலேயே ஆம் ஆத்மி கட்டி வைத்திருந்த கோட்டையை தகர்த்தார் அவர்.
இந்தநிலையில் தமிழக பாஜகவுக்குள் நிலவும் குழப்பங்கள், பிரதான கூட்டணி கட்சியான அதிமுகவுக்குள் நிலவும் குழப்பங்கள், இரு கட்சிகளின் இடையே நிலவும் குழப்பங்கள்… இவற்றையெல்லாம் முடிவுக்குக் கொண்டுவரவும், திமுகவை வீழ்த்தவும் ஒரு பெரிய கை தேவைப்படுகிறது பாண்டாதான் அதற்கு பொருத்தமாக இருப்பார் என்று பிரதமர் மோடியிடம் அமித் ஷா கூறியதாகவும், மோடியும் அதை ஆமோதித்ததாகவும் தெரிகிறது.
இந்தநிலையில் 2026ல் நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, பாஜக தேசிய தலைமை, மக்களவை உறுப்பினர் பைஜெயந்த் பாண்டாவை தமிழ்நாடு மாநில பாஜக பொறுப்பாளராக நியமத்துள்ளது. இதனையடுத்து பாண்டாவால் தமிழகத்தில் ஆட்சிகளும் காட்சிகளும் மாறுமா என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.





















