Aravind kejriwal Lost : மண்ணைக் கவ்விய கெஜ்ரிவால்! சாதித்து காட்டிய மோடி! தலைநகரை கைப்பற்றிய பாஜக
டெல்லி சட்டப்பேரவை தேர்தலை 27 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக வென்றிருக்கும் சூழலில், தேர்தலின் போது பல வாக்குறுதிகளை அள்ளிக்கொடுத்தும் அம்மாநில முன்னாள் முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வி அடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1998 முதல் காங்கிரஸின் கையில் இருந்த டெல்லியை கடந்த 2013 ஆம் ஆண்டு அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றியது. அப்போதிலிருந்தே அங்கு நடைபெறும் தேர்தல்களில் ஆம் ஆத்மியின் கை-தான் ஓங்கி இருந்தது. கிட்டத்தட்ட 11 ஆண்டுகள் அங்கு அந்த கட்சி ஆட்சியில் இருந்தது. இந்த சூழலில் தான் இந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி தங்களது ஆட்சியை இழந்திருக்கிறது. அதன்படி அங்கு 1998 ஆம் ஆண்டுக்குக்குப் பிறகு பாஜக ஆட்சி அமைக்க உள்ளது.
பாஜக ஆட்சி மீண்டும் அமைய உள்ளதால் ஆம் ஆத்மி தொண்டர்கள் சோகத்தில் இருக்கும் சூழலில் அக்கட்சி தொண்டர்களுக்கு பேரிடியாக விழுந்திருப்பது அம்மா நில முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வி அடைந்திருப்பது தான்.
ஆம், கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் டெல்லியில் முதல்வராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் தான் போட்டியிட்ட புது டெல்லி தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பர்வேஷ் சாஹிப் சிங் வர்மாவிடம் தோல்வி அடைந்துள்ளார்.
அதாவது பாஜக வேட்பாளர் பர்வேஷ் சாஹிப் சிங் வர்மா 28238 வாக்குகளை பெற்றிருக்கிறார். அரவிந்த் கெஜ்ரிவாலோ 24449 வாக்குகள் மட்டுமே வாங்கி இருக்கிறார். 3500 வாக்குகள் வித்தியாசத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தோல்வியை கொடுத்திருக்கிறார் பர்வேஷ் சிங். அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வி அடைந்திருப்பது ஆம் ஆத்மி கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் புது டெல்லி தொகுதில் வெற்றி பெற்ற கெஜ்ரிவால் முதல் முறையாக அங்கு தோல்வியை தழுவியுள்ளார். அதேபோல், ஆம் ஆத்மி கட்சியின் முன்னணி தலைவர்களும் தோல்வி அடைந்திருப்பது அவர்களின் கடந்த கால ஆட்சிக்கு மக்கள் கொடுத்திருக்கும் பதில் என்று பாஜகவினர் கூறுகின்றனர்.முன்னதாக மதுபான முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவும் அவருடைய தோல்விக்கு ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.





















