Sasikala Party Name: அதிமுக, அமமுகவுக்கு எதிராக களமிறங்கும் சசிகலாவின் “அஇபுதமமுக” கட்சி!
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக அறியப்பட்ட வி.கே.சசிகலா ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுகவில் இருந்து ஓரம்கட்டப்பட்டார். இதனிடையே அவர் பிப்ரவரி 24ல் புதிய கட்சி தொடங்கினார்.

தமிழக அரசியலில் திடீர் திருப்பமாக புதிதாக கட்சி தொடங்கிய வி.கே.சசிகலா அதன் பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
2026ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதிமுகவில் இருந்து ஓரம் கட்டப்பட்ட சசிகலா என்ன முடிவெடுக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் எழுந்தது. ஜெயலலிதா மறைவுக்குப் பின் சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா தண்டனை அனுபவிக்கும் சூழல் ஏற்பட்டது. அந்த நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவை எதிர்த்ததால் பொதுச்செயலாளராக இருந்த அவர் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்தார்.
சசிகலா சிறை சென்ற பிறகு எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் இணைந்தனர். சசிகலா கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இரட்டை தலைமையின் கீழ் நான்கரை ஆண்டுகால ஆட்சி நடைபெற்றது. ஆனால் 2022ம் ஆண்டு அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பின் பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஓரம் கட்டப்பட்டு நீக்கப்பட்டனர். மீண்டும் சசிகலா, ஓபிஎஸ் போன்றோருக்கு அதிமுகவில் இடமில்லை என எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக அறிவித்தார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுக தான் சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் தோல்வியடைந்தது. கட்சியை வலுப்படுத்த தங்களை மீண்டும் சேர்த்துக்கொள்ள சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பல கட்ட முயற்சிகளை மேற்கொண்டு அவை அனைத்தும் தோல்வியில் முடிவடைந்தது. இப்படியான நிலையில் திமுகவில் ஓ.பன்னீர்செல்வம் இணைந்து விட்ட நிலையில் சசிகலா என்ன செய்யப் போகிறார் என்ற கேள்வி எழுந்தது.
நாளை நமதே! வெற்றி நிச்சயம்! pic.twitter.com/IEZSc2aH5j
— V K Sasikala (@AmmavinVazhi) February 24, 2026
ஆனால் யாரும் எதிர்பாராதவிதமாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் பிப்ரவரி 24 அன்று நடைபெற்ற ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாள் விழாவில் சசிகலா கட்சி தொடங்குவதாக அறிவித்து அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா உருவங்கள் பதித்த கருப்பு, வெள்ளை, சிவப்பு நிறம் கலந்த கட்சி கொடியை அறிமுகம் செய்தார். ஆனால் கட்சிப்பெயரை அறிவிக்கவில்லை. அந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பெயரை குறிப்பிடாமல் அவரை கடுமையாக சசிகலா விமர்சித்தார்.
இந்த நிலையில் சசிகலா கட்சிக்கு “அனைந்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்” என பெயரிடப்பட்டுள்ளது. இந்த கட்சியானது வரும் சட்டமன்ற தேர்தலில் தென்னந்தோப்பு சின்னத்தில் போட்டியிடுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 24ம் தேதி ஜெயலலிதா பிறந்தநாளில் கட்சி தொடங்குவதாக ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சசிகலா அதிரடியாக அறிவித்து கட்சிக் கொடியையும் அறிமுகம் செய்திருந்தார். வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அனைந்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் போட்டியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.























