Mamata banerjee on Amitshah | ”சீண்டிப் பார்த்தா அவ்ளோதான்! என்கிட்ட PEN DRIVE இருக்கு” அமித்ஷாவை மிரட்டும் மம்தா
என்னை சீண்டிப் பார்க்காதீங்க, எல்லையை மீறுனா நான் சும்மா இருக்க மாட்டேன் என பென் ட்ரைவை வைத்து அமித்ஷாவை மிரட்ட ஆரம்பித்துள்ளார் மம்தா பானர்ஜி.
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுக்கும் ஐபேக் நிறுவனத்தில் ரெய்டு வேட்டை நடத்தியது அமலாக்கத்துறை. மம்தா பானர்ஜி தலைமையிலான அரசுக்கு எதிராக ஊழல் புகார்களை அடுக்கி வரும் பாஜக, வேண்டுமென்றே அமலாக்கத்துறையை வைத்து சோதனை நடத்துவதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஐபேக் நிறுவன இயக்குநர் பிரதிக் ஜெயினின் வீட்டில் சோதனை நடக்கும் போது அங்கு சென்ற மம்தா பானர்ஜி, வீட்டில் இருந்து ஃபைல், ஹார் டிஸ்க், மொபைல்போன் ஒன்றை கையோடு எடுத்து சென்றார். கட்சியின் ஆவணங்களையும் தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலையும் அதிகாரிகள் உள்நோக்கத்துடன் கைப்பற்றும் போது அதனை மீட்டுக் கொண்டு வந்ததாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சியினர் ஆயிரக்கணக்கானோருடன் சேர்ந்து 6 கி.மீக்கு நடைபயணம் சென்று மேற்கு வங்கத்தையே அதிரவைத்தார் மம்தா பானர்ஜி. இந்தநிலையில் நிலக்கரி ஊழலில் அமித்ஷாவுக்கு லிங்க் இருப்பதற்கான ஆதாரம் தன்னிடம் பென் ட்ரைவில் இருப்பதாக மிரட்டல் விடுத்துள்ளார் மம்தா பானர்ஜி.
இதுதொடர்பாக பேசிய அவர், ”நிலக்கரி ஊழல் பற்றி பாஜகவினர் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஊழல் செய்தது யார்? துரோகி ஒருவரின் மூலம் அமித்ஷாவின் கைகளுக்கு பணம் செல்கிறது. அவர் அமித்ஷாவால் தத்தெடுக்கப்பட்ட மகன். அவருடன் பாஜகவின் ஜெகன்நாத்-தும் இருக்கிறார். ஜெகந்நாத் மூலம் சுவேந்து அதிகாரியிடம் பணம் செல்கிறது. அங்கிருந்து அமித்ஷாவின் கைகளுக்கு பணம் செல்கிறது. நான் இன்னும் பென் ட்ரைவை ரிலீஸ் செய்யாதது உங்கள் அதிர்ஷடம். நீங்கள் எல்லையை மீறினால் நான் சும்மா விட மாட்டேன். அனைத்து ஆதாரங்களையும் வெளியே விட்டுவிடுவேன். நான் உண்மையை சொன்னால் உலகம் முழுவதும் கொந்தளிப்பு வந்துவிடும்” என மிரட்டியுள்ளார்.
இந்த நிலையில், நிலக்கரி ஊழல் குற்றச்சாட்டில் தன்னை தொடர்புபடுத்திய மம்தா பானர்ஜிக்கு எதிராக பா.ஜ.க. எம்.எல்.ஏ.வும், மேற்கு வங்க எதிர்க்கட்சி தலைவருமான சுவேந்து அதிகாரி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.





















