Sleeping Man falls from 10th Floor|10 வது மாடியில் இருந்துதவறி விழுந்த முதியவர் | Surat
குஜராத் மாநிலம் சூரத்தில் 10 வது மாடியில் உள்ள தனது ஃப்ளாட்டில் தூங்கிக் கொண்டிருந்த முதியவர் ஒருவர், திரும்பி படுக்கையில் ஜன்னல் வழியாக தவறி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 10 வது மாடியில் இருந்து விழுந்த போது 8 வது மாடியில் அவரது கால் சிக்கிக்கொள்ள முதியவர் தலைகீழாக தொங்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
குஜராத் மாநிலம் சூரத் ஜஹாங்கிர்புரா பகுதியை சேர்ந்தவர் நிதின்பாய் ஆதியா. இவரது வயது 57. இவர் டைம்ஸ் கேலக்சி கட்டிடத்தில் உள்ள தனது 10 வது மாடி ஃப்ளாட்டில் ஜன்னல் அருகே படுத்து உறங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று காலை 8 மணி அளவில் ஆதியா தூக்கத்தில் திரும்பி படுத்ததாக சொல்லப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக அருகில் இருந்த ஜன்னல் வழியாக அவர் தவறி விழுந்துள்ளார். 10 வது மாடியில் இருந்து விழுந்தால் மரணம் நிச்சயம், எனினும் அதிர்ஷ்டவசமாக அந்த முதியவரின் கால் 8 வது மாடியில் உள்ள க்ரில் கம்பியில் சிக்கியது. இதனையடுத்து அவர் தலைகீழாக தொங்கியுள்ளார். இதனை கவனித்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் முதியவரின் கால் பலமாக சிக்கிக் கொண்டிருப்பதை அறிந்து மேலே இருந்து கயிறு மூலம் லாவகமாக அவரை தூக்கியுள்ளனர். 1 மணி நேர போராட்டத்திற்கு முதியவர் பத்திரமாக மீட்கப்பட்டார். எனினும் அவரது காலில் பலமாக அடிபட்டுள்ளதால் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
10 வது மாடியில் இருந்து தூக்க கலக்கத்தில் முதியவர் ஜன்னல் வழியாக தவறி விழுந்த போது அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவம் கவனம் பெற்றுள்ளது





















