ஐயப்பன் கோயில் நடை அடைப்பு மகர விளக்கு சீசன் நிறைவு அடுத்த தரிசனம் எப்போது? | Sabarimalai | Sabarimala Devotees | Temple | Festival | Tamil News
சபரிமலையில் நடப்பு மண்டல மகர விளக்கு சீசன் நிறைவு பெற்றதையடுத்து ராஜ குடும்ப பிரதிநிதி தரிசனத்திற்கு பிறகு நடை அடைக்கப்பட்டது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல-மகரவிளக்கு பூஜைக்காக 2025ம் ஆண்டு நவம்பர் 16ம் தேதியன்று மாலை சபரிமலை கோயில் நடைதிறக்கப்பட்டது. 41 நாட்கள் மண்டல காலம் முடிந்து, டிசம்பர் 27ம் தேதியன்று மண்டல பூஜை நடைபெற்றது. அதன் பிறகு கோவில் நடை அடைக்கப்பட்டது. மீண்டும் மகரவிளக்கு உற்சவத்திற்காக டிசம்பர் 30ம் தேதி மாலை திறக்கப்பட்டு, பக்தர்கள் தொடர்ந்து சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். ஜனவரி 14ம் தேதி, மகரசங்கராந்தி தினத்தன்று மகரவிளக்கு பூஜையும், அதைத் தொடர்ந்து மகரஜோதி தரிசனமும் நடைபெற்றது. இந்த நிலையில், கடந்த 14-ந் தேதி முத்தாய்ப்பு நிகழ்ச்சியாக ஐயப்பன் மகர ஜோதி வடிவில் பக்தர்கள் காட்சி அளித்தார்
நடப்பு மண்டல மகரவிளக்கு சீசன் நிறைவாக நேற்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. காலை 6.30 மணிக்கு பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதி சாமி தரிசனத்திற்கு பிறகு நடை அடைக்கப்பட்டது. இதையடுத்து திருவாபரண ஊர்வலம் பந்தளத்துக்கு புறப்பட்டது.அத்துடன் நடப்பு மண்டல, மகர விளக்கு சீசனுடன், தை மாத பூஜை வழிபாடுகளும் நிறைவு பெற்றது. இதையடுத்து, மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மீண்டும் அடுத்த மாதம் பிப்ரவரி 12-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும். 17-ந் தேதி வரை 5 நாட்கள் சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெறும்.





















