கோயிலுக்கு வந்த பக்தர்கள் 9 பேர் நெரிசலில் உயிரிழப்பு நெஞ்சை உருக்கும் காட்சி | Andhra Temple Stampade
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுலத்தில் உள்ள கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவில் உள்ள ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் வெங்கடேஸ்வரா கோயில் அமைந்துள்ளது. இன்று மாத ஏகாதசி என்பதால் கோயிலில் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகளவு காணப்பட்டது. அளவுக்கு அதிகமான பக்தர்களின் வருகையால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கியதால் 9 பக்தர்கள் உயிரிழந்தனர். இதில் பெண்கள், குழந்தைகளும் அடங்குவார்கள். இந்த சம்பவம் ஆந்திரா முழுவதும் பெரும் சோகத்தை உண்டாக்கியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "ஸ்ரீகாகுலத்தில் உள்ள காசிபுகா கோயிலில் நடந்த இந்த கூட்ட நெரிசல் சம்பவம் மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. இந்த துயர சம்பவத்தில் பக்தர்கள் உயிரிழந்த சம்பவம் எனது இதயத்தில் மிகப்பெரிய வலியை உண்டாக்கிவிட்டது.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சம்பவத்தில் காயம்பட்டவர்களுக்கு விரைந்து சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட பகுதிக்கு அதிகாரிகள் மற்றும் அப்பகுதி அமைச்சர்களை உடனடியாக விரைந்து செல்லவும் உத்தரவிட்டுள்ளார்.
ஏகாதசி நாளில் பெருமாளை வணங்குவதற்காக இன்று பக்தர்கள் கூட்டம் அதிகளவு இருந்தது. போலீசார் முறையான முன்னெச்சரிக்கை பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளாததே இதற்கு முக்கிய காரணம் என்று அப்பகுதியில் உள்ள சிலர் விமர்சித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கடந்த மாதம் விஜய்யின் பரப்புரையில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் மட்டுமின்றி நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியது. தற்போது ஆந்திராவிலும் கூட்ட நெரிசலில் 9 பக்தர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.





















