”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டியிடப் போவதாக பேச்சு அடிபடும் நேரத்தில், கோவையை சேர்ந்த திமுக நிர்வாகிகள் 70க்கும் மேற்பட்டோர் கூண்டோடு ராஜினாமா கடிதம் அனுப்பியுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது. ஆனால் இதன் பின்னணியில் வட்டச் செயலாளரின் நாடகம் இருப்பதாகவும், தேர்தலையொட்டி செந்தில் பாலாஜி கறார் காட்ட ஆரம்பித்துள்ளதாகவும் சொல்கின்றனர்.
2026 தேர்தலில் மேற்கு மண்டலங்களை குறிவைத்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது திமுக. அதிமுகவின் கோட்டையாக இருக்கும் கொங்கு மண்டலத்தை திமுக வசமாக்குவதற்காக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை திமுகவின் மேற்கு மண்டல பொறுப்பாளராக நியமித்தது தலைமை. அதேபோல் செந்தில்பாலாஜியும் இந்த முறை கரூரை விட்டுவிட்டு கோவை தெற்கு பகுதியில் போட்டியிட முடிவெடுத்துள்ளதாக பேச்சு அடிபடுகிறது.
இந்த நேரத்தில் விளாங்குறிச்சி பகுதி 9வது வார்டின் வட்டச் செயலாளர் மயில்சாமி உள்ளிட்ட 70க்கும் மேற்பட்டோர் செந்தில் பாலாஜிக்கு ராஜினாமா கடிதம் அனுப்பியுள்ளனர். அதில், நாங்கள் தற்போது வகித்து வரும் திராவிட முன்னேற்ற கழகத்தில் கீழே குறிப்பிட்டுள்ள பதவியிலிருந்து எங்களுடைய தனிப்பட்ட காரணங்களினால் விலக விரும்புகிறோம். எனவே எங்கள் அனைவரின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொள்ளுமாறு தங்களை கேட்டுக்கொள்கிறோம். அமைப்பின் வளர்ச்சிக்காக நாங்கள் இதுவரை உங்களுடனும் கழக தோழர்களுடனும் இணைந்து பணியாற்றியதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்” என தெரிவித்துள்ளனர்.
மாற்று கட்சியில் இருந்து வருபவர்களுக்கு முன்னுரிமை கொடுத்துவிட்டு இத்தனை ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்தவர்களை ஓரங்கட்டுவதால் தான் ராஜினாமா பேச்சு இருந்தது. செந்தில் பாலாஜி கோவை பக்கம் கவனத்தை திருப்புவதால் கரூர் நிர்வாகிகளும் கோவை வட்டாரத்தில் தலைகாட்ட ஆரம்பித்துள்ளதால் அதிருப்தியில் ராஜினாமா செய்ததாகவும் சொல்லி வந்தனர்.
ஆனால் வட்டச் செயலாளர் மயில்சாமி தான் வேறு ஒரு காரணத்திற்காக இந்த ராஜினாமா நாடகத்தை நடத்துவதாக கோவை வட்டாரத்தில் சொல்கின்றனர். அவரது பணி திருப்திகரமாக இல்லாததால் தேர்தலுக்காக அவரது பதவியை பறிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனால்தான் கட்சியில் தனக்கு இருக்கும் செல்வாக்கை செந்தில் பாலாஜியிடம் காட்ட நினைத்து இப்படி ராஜினாமா செய்துள்ளதாக சொல்கின்றனர்.
இந்த முறை தேர்தலில் கொங்கு மண்டலத்தில் பெரும்பாலான தொகுதிகளை கைப்பற்றிவிட வேண்டும் என்ற முடிவோடு இருக்கும் செந்தில் பாலாஜி, ஒழுங்காக வேலை பார்க்காத நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கறாராக இருக்கிறாராம். அதனால் தான் கோவை தெற்கு தொகுதியை தேர்ந்தெடுத்து அங்கிருந்து மற்ற தொகுதிகளை இயக்குவதற்கு கணக்கு போட்டுள்ளது மட்டுமல்லாமல், நிர்வாகிகளும் அதற்கேற்றார்போல் தேர்தல் வேலைகளை பார்க்க வேண்டும் என ஸ்ட்ரிக்ட் ஆர்டர் போட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.





















