கடலை மிட்டாய் to அர்ஜூனா விருது! ரியல் பைசன் காளமாடன்! யார் இந்த மணத்தி கணேசன்?
கடலை மிட்டாய்க்காக ஆரம்பமான கபடி வாழ்க்கை அர்ஜூனா விருது வரை ஒருவரை அழைத்து சென்றுள்ளது. எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும் தலையால் முட்டித் தூக்கும் அளவுக்கு யாராலும் கட்டுப்படுத்த முடியாத காளமாடனாக களத்தில் நின்ற வீரர். துருவ் விக்ரமை பைசனாக மாற்றியவர். யார் இந்த ரியல் பைசன் மணத்தி கணேசன்?
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான பைசன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கையை கருவாக வைத்து தான் துருவ் விக்ரமின் கதாப்பாத்திரத்தை வடிவமைத்துள்ளார் மாரி செல்வராஜ். தூத்துக்குடி மாவட்டம் மணத்தி கிராமத்தில் பிறந்தவர் கணேசன். பள்ளிப் பருவத்தில் ஹாக்கி வீரராக தான் கணேசனின் விளையாட்டு பயணம் ஆரம்பமானது. மாவட்ட அளவில் ஹாக்கி சாம்பியனாகவும் இருந்துள்ளார். அப்போது கடலை மிட்டாய்க்காக கபடியில் அடியெடுத்து வைத்துள்ளார். கபடி போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு கடலை மிட்டாய் பரிசு என ஆரம்பமான கபடி போட்டி அடுத்த சில மாதங்களில் இந்தியாவே அவரை திரும்பி பார்க்கும் அளவுக்கு கொண்டு சென்றது. கபடியில் கணேசனுக்கு இருந்த ஆர்வத்தை பார்த்த பிடி ஆசிரியர், ஹாக்கியில் இருந்து அவரை கபடி வீரராக மாற்றியுள்ளார்.
1980களில் விளையாட ஆரம்பித்த கணேசன் தனது ஊரிலேயே இருக்கும் வசதிகளை வைத்து பயிற்சி எடுக்க ஆரம்பித்துள்ளார். கிராமத்தில் நடைபயிற்சி மேற்கொள்வது, ஆறுகளில் தனது நண்பர்களுடம் விளையாடி உடலை வலுவாக வைத்து கொள்வது என போட்டிகளுக்கு தயாராகி வந்துள்ளார். ஆரம்பத்தில் மற்ற அணி வீரர்களுடன் விளையாடி தனது திறமையை வளர்த்துள்ளார். அதன்பிறகு உள்ளூர் வீரர்களையும் நண்பர்களையும் வைத்து அவரே ஒரு அணியை உருவாக்கிறார்.
அதுவரை கணேசனாக இருந்த அவர் அதன்பிறகு மணத்தி கணேசன் என்ற அடையாளத்துடன் வலம் வர ஆரம்பித்துள்ளார். அவர் களத்தில் ரைடு சென்றாலே எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும் அவரை பிடிப்பதற்கு திணறும் அளவுக்கு கில்லியாக இருந்துள்ளார். அவர் கபடி போட்டியின் போது தலைமை வைத்து முட்டினால் காளை மாடு முட்டியது போல் இருக்குமாம். வட இந்திய வீரர்களும் அவருக்கு BULLOCK என்று பெயர் வைத்துதான் அழைத்து வந்துள்ளார்கள். அதன் அடிப்படையில் தான் பைசன் என்ற பெயரை வைத்துள்ளார் மாரி செல்வராஜ்.
மணத்தி கணேசன் விளையாடுகிறார் என்றாலே தூத்துக்குடி, திருநெல்வேலி பகுதியை சேர்ந்தவர்கள் அவரது அதிரடியான ஆட்டத்தை பார்ப்பதற்காக உடனே கிளம்பி வந்துவிடுவார்களாம். இப்படி சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் கெத்தாக வலம் வந்துள்ளார் மணத்தி கணேசன். தமிழ்நாட்டில் இருந்து கபடியில் அர்ஜுனா விருது பெற்றவர்கள் 2 பேர் தான். ஒருவர் மணத்தி கணேசன், இன்னொருவர் ராஜராத்தினம்.
இந்த ராஜரத்தினம் தான் மணத்தி கணேசனின் ரோல்மாடல். எப்படியாவது நாமும் ஒரு நாள் ராஜரத்தினம் போல் ஆகிவிட வேண்டும் என்ற இலக்கு அவரது மனதில் எரிந்து கொண்டிருந்துள்ளது. 17 வயதில் ராஜரத்தினத்தை நேரில் பார்த்த மணத்தி கணேசன், அன்றைய நாளில் இருந்தே அவரை பின் தொடர ஆரம்பித்துள்ளார். அவர் எங்கே விளையாடுகிறார் எப்படி பயிற்சி மேற்கொள்கிறார் என ஒவ்வொன்றாக பார்த்து அவரது காலடி பாதையிலேயே நடந்து சென்று அர்ஜூனா விருதையும் வாங்கிவிட்டார்.
ஒருமுறை காவல்துறை சொல்லி ஒரு அணிக்காக விளையாடிய போது அவரது கை எலும்பு உடைந்துள்ளது. அவர் மீண்டு வரமாட்டார் என எல்லோரும் சொல்லிய போது 27-ஏ நாட்களில் மீண்டும் கபடி மண்ணில் கால் பதித்துள்ளார். 1994ம் ஆண்டு ஆசியக் கோப்பை போட்டியில் இந்தியாவுக்காக விளையாடி தங்கத்தை வென்று கொண்டு வந்து தேசிய அளவில் அனைவரது கவனத்தையும் தமிழ்நாடு பக்கம் திருப்பினார். 1993-ம் ஆண்டு கபடி போட்டியின் மூலம் தமிழ்நாடு மின்சாரவாரியத்தில் பணி பெற்ற மணத்தி கணேசன் 40 வயதில் கபடி போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார்.
அவரது வாழ்க்கையை வைத்து பைசன் திரைப்படத்தில் துருவ் விக்ரமனின் கதாப்பாத்திரம் உருவானது. இந்தப் படத்திற்காக துருவ் விக்ரமுக்கு மாஸ்டராக மாறி பயிற்சி கொடுத்ததும் மணத்தி கணேசன் தான். துருவ் கபடி வீரராக கனக்கச்சிதமாக பொருந்தியுள்ளதாக பாராட்டப்படுவதற்கு மணத்தி கணேசன் தான் காரணம் என சொல்கின்றனர். தற்போது தூத்துக்குடி மாவட்ட கபடி அணி மற்றும் தமிழ்நாடு மின்சார வாரிய கபடி அணிக்கு பயிற்சியாளராக செயல்பட்டு வரும் மணத்தி கணேசன் தன்னை போல் நிறைய பைசன்களை உருவாக்கி கொண்டிருக்கிறார்.





















