ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் நிகழ்ந்த பாலியல் வன்முறை..போராட்டத்தில் இறங்கிய பெண்கள்!

Continues below advertisement



ஆஸ்திரேலியாவில் கடந்த இரண்டு நாட்களாக  ’மார்ச் 4 ஜஸ்டிஸ்’ என்கிற பெயரில் அனைத்து பெண்களும் ஒருங்கிணைந்து வருகின்றனர். அதிகாரத்தில் இருக்கும் பெண்கள் அதிகாரத்தில் அல்லாதார் என அனைவரும் படிநிலைப் பாகுபாடின்றி ஒருங்கிணைந்திருப்பதுதான் இதில் ஹைலைட். ஆஸ்திரேலிய கேபினேட் அமைச்சர் கிறிஸ்டியன் போர்ட்டர் மீதான பாலியல் வன்முறைப் புகார்தான் அங்கே பெண்கள் இப்படிக் கிளர்ந்து எழக் காரணம்.

கிறிஸ்டியன் போர்ட்டர் 2017ம் ஆண்டு தொடங்கி ஆஸ்திரேலிய அரசின் தலைமை வழக்கறிஞராக இருக்கிறார். இது தவிர 2019ம் ஆண்டு தொடங்கி தொழில்துறை அமைச்சராகப் பதவி வகிக்கிறார். ஆஸ்திரேலிய நாட்டுக் கட்சி ஊடகமான ஏபிசி கடந்த பிப்ரவரி மாதத்தில் வெளியிட்ட செய்தி ஒன்றில் அந்த நாட்டின் மத்திய அமைச்சர் ஒருவர் 1988ல் 16 வயது சிறுமி ஒருத்தியைப் பாலியல் வன்புணர்வு செய்ததாகக் குற்றச்சாட்டை முன்வைத்தது.  2019ல் அந்த பெண் தனது வழக்கறிஞருக்கு மிகநீண்ட கடிதம் ஒன்றை எழுதியதாகவும், அதன்பிறகு இதுகுறித்துப் பல அரசியல்வாதிகளைத் தொடர்புகொண்டதாகவும் ஆனால் 2020ல் அவர் தனது உயிரை மாய்த்துக்கொண்டதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிட்டிருந்தது.

அந்தப் பெண் பேசிய ஆடியோவும் ஆஸ்திரேலியப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால் அந்த நாட்டுக்காவல்துறையோ இதுகுறித்துத் தொடரப்பட்ட வழக்கைப் போதுமான ஆதாரங்கள் எதுவும் இல்லையென 2 மார்ச் 2021ல் முடித்துவைத்தது. நாடாளுமன்ற வட்டாரத்தில் எழுந்த தொடர் அழுத்தம் காரணமாக ஏபிசி செய்தியில் குறிப்பிடப்பட்ட அந்த அமைச்சர் தான் என்பதை வெளிப்படுத்திக்கொண்டார் கிறிஸ்டியன் போர்டர். அதுகுறித்து அவர் அளித்திருந்த மேலதிக விளக்கத்தில் தனக்கு 17 வயது இருக்கும்போது தான் அந்தப் பெண்ணை சந்தித்ததாகவும் ஆனால் தான் எந்தவிதத்திலும் அந்தப் பெண்ணை உடல்ரீதியாக அணுகவில்லை என்றும் மறுத்துள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டால் தன் பெயருக்குக் களங்கமேற்பட்டுவிட்டதாகச் சொல்லி ஏபிசி நிர்வாகத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளார் போர்டர். இதற்கிடையேதான் ஆஸ்திரேலிய லிபர்டி கட்சியின் முன்னாள் உறுப்பினரான பிரிட்டானி ஹிக்கின்ஸ் நாடாளுமன்ற வளாகத்திலேயே தான் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டதாக குற்றச்சாட்டு ஒன்றினை முன்வைத்தார். ஆஸ்திரேலிய தொழிலாளர் நல அமைச்சகத்தைச் சேர்ந்த பெண் ஊழியர்கள் சிலர் தாங்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டதாகப் புகார் எழுப்பினார்கள்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான இதுபோன்ற தொடர் குற்றச்சாட்டுகளைக் காரணம் காட்டி ’மார்ச் 4 ஜஸ்டிஸ்’ என்கிற ஒருங்கிணைப்பு இறந்த அந்தப் பெண்ணுக்காகவும் பிரிட்டானி ஹிக்கின்ஸ் போன்ற பாதிக்கப்பட்ட பெண்களுக்காகவும் தற்போது போராட்டத்தில் இறங்கியுள்ளது. இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்கு எதிராகத் சார்பற்ற தனி விசாரணைக்குழு அமைக்கப்பட வேண்டு என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஆனால் ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோர்ரிஸன் ”எந்தவிதத் துப்பாக்கிச்சூடும் எதிர்ப்புகளும் இல்லாமல் பெண்களால் இங்கே பாதுகாப்பாகப் போராட முடிகிறது”, என பெண்கள் பாதுகாப்பு குறித்து எழுந்த கேள்விக்கு சர்ச்சைக்குரிய விளக்கமொன்றை அளித்துள்ளார்.  பிரதமரின் இந்தக் கருத்தால் அந்த நாட்டுப் பெண்கள் கொந்தளித்துள்ளனர்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram