பதக்கம் கொடுத்த அண்ணாமலை!வாங்க மறுத்த TRB ராஜா மகன்! “கையில கொடுங்க”
அண்ணாமலை கொடுத்த பதக்கத்தை டிஆர்பி ராஜா மகன் கழுத்தில் வாங்க மறுத்து கையில் வாங்கி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவாரங்குடி பட்டியில் தமிழ்நாடு துப்பாக்கி சங்கம் மற்றும் புதுக்கோட்டை ராயல் ஸ்போர்ட்ஸ் கிளப் ஆகியவை இணைந்து 51வது மாநில அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டியை நடத்தி வருகின்றன. பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை இன்றைய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களை வழங்கினார்.
துப்பாக்கி சுடும் போட்டியில் அமைச்சர் டிஆர்பி ராஜாவின் மகன் சூரிய ராஜா பாலு கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார். ஒவ்வொருவராக வந்து பதக்கத்தை வாங்கி சென்றுள்ளனர். அப்போது மேடைக்கு வந்த டிஆர்பி ராஜா மகனுக்கு அண்ணாமலை பதக்கத்தை கழுத்தில் அணிவிக்க வந்தார். அதனை வாங்க மறுத்த சூரிய ராஜா பாலு அண்ணாமலையிடம் இருந்து அந்த பதக்கத்தை கையில் வாங்கி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பாஜக மற்றும் கூட்டணி கட்சியினரின் விமர்சனத்தில் சிக்கியது.
இந்த சம்பவம் தொடர்பாக அண்ணாமலையிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ‘யார் கையில் பதக்கம் வாங்க வேண்டும் வாங்க கூடாது என்பதெல்லாம் அவரது விருப்பம். அவர் இந்த துறையில் சாதிக்க வேண்டும், நல்ல மனிதராக வர வேண்டும் என வாழ்த்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவின் போது மாணவி ஜூன் ஜோசப் ஆளுநர் ஆர்.என்.ரவி கையால் பட்டம் வாங்க மறுத்தது பரபரப்பை கிளப்பியது. இவர் திமுக துணைச்செயலாளரின் மனைவி என்றும், திமுகவில் பெயர் வாங்க அவர் அரங்கேற்றும் நாடகம் என்றும் அண்ணாமலை விமர்சித்திருந்தார். இந்தநிலையில் அமைச்சர் டிஆர்பி ராஜா மகன் அண்ணாமலை கொடுத்த பதக்கத்தை வாங்க மறுத்தது விவாதமாக மாறியுள்ளது.