”TARGET திமுக கூட்டணி”விஜய்-ன் அதிரடி அறிவிப்புகள்? சம்பவம் செய்யுமா தவெக மாநாடு? | TVK Vijay Speech
மதுரை மாநாட்டின் மூலமாவது தவெக தலைவர் விஜய் தீவிர அரசியலை முன்னெடுப்பாரா? என அவரது கட்சி தொண்டர்களே ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். மதுரை மாநாட்டில் விஜய் தனது மாநிலம் தழுவிய சுற்றுப்பயண அறிவிப்பை வெளியிடுவார் என தொண்டார்கள் காத்திருக்கின்றனர்.
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, மதுரையில் இன்று நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் 1966 மற்றும் 1967ம் ஆண்டு தேர்தல்களில் நடைபெற்றதை போன்று, பெரும் மாற்றத்தை விளைவிப்பதே இலக்கு என அக்கட்சி பேசி வருகிறது. அதற்கு மதுரை பாரபத்தியில் நடைபெறும் இன்றைய மாநாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதன் காரணமாக மாநாட்டை பாதுகாப்பாகவும், நல்ல முறையிலும் நடத்தி முடிக்க பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஜனநாயகன் படத்துடன் திரைவாழ்க்கையில் இருந்து விலகி, முழு நேர அரசியலில் ஈடுபட இருப்பதாக விஜய் அறிவித்தார். ஆனால், அந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த பிறகும் கூட கள அரசியலில் விஜய் தற்போது வரை ஈடுபடவில்லை. அதிமுக, பாமக போன்ற வலுவான கட்டமைப்பை கொண்ட கட்சிகளின் தலைவர்களே, மாநிலம் முழுவதும் சுற்ரறுப்பயணங்களை தொடங்கியுள்ளனர். ஆனால், முதல்முறையாக தேர்தலை எதிர்கொள்ள இருக்கும் சூழலில் விஜய் கள அரசியலை தொடங்காதது கட்சியினரையே அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. ஒரு சில நிகழ்ச்சிகள் மற்றும் கண்டன அறிக்கைகள் மட்டுமே அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த போதாது என்றும், மக்களை சந்தித்து அவர்களது எண்ண ஓட்டங்களை அறிந்து அதற்கேற்ப செயல்பட வேண்டும் என சொத்த நிர்வாகிகளே புலம்பி வருகின்றனர். இந்நிலையில் தான், இன்று நடைபெறும் மாநாட்டின் முடிவிலாவது சுற்றுபயணத்தை அறிவித்து விஜய் களத்திற்கு வருவாரா?. என தொண்டர்கள் எதிர்பார்க்கின்றனர்.
எம்ஜிஆரை போல ஆட்சி மாற்றம் ஏற்படுத்துவோம் என விஜய் மீண்டும் மீண்டும் சூளுரைத்து வருகிறார். ஆனால், 1977 என்பது அவர் கண்ட முதல் தேர்தல் அல்ல. திமுகவில் இணைந்து தீவிர அரசியலில் ஈடுபட்டு, திரைப்படங்கள் மூலமாக கட்சி கொள்கைகளை பரப்பினார். 1967ம் ஆண்டே சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். திரைத்துறையில் இருந்தபோதே, தன்னை ஒரு கைதேர்ந்த அரசியல்வாதியாகவும், தலைமைத்துவம் கொண்டவராகவும் எம்ஜிஆர் மாற்றிக்கொண்டார். ரசிகர் பட்டாளத்தையும் தாண்டி தனக்கென அரசியல் செல்வாக்கையும் கட்டமைத்தார். அதன் விளைவாகவே எதிர்கொண்ட முதல் தேர்தலிலேயே எம்ஜிஆரால் முதலமைச்சராக முடிந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் விஜயின் அரசியல் கட்டமைப்பு என்பது பலவீனமானது. அதனை உணர்ந்து இனியாவது அவர் தீவிர கள அரசியல் இறங்கினால் தான், சட்டமன்ற தேர்தலில் ஒரு புதிய மாற்று சக்தியாக தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பது தவெக தொண்டர்களின் குமுறலாக உள்ளது.